கட்டபொம்மன் வீட்டில் ரெய்டு.
  • Kattabomman House Raid

    அன்றைய காலத்தில், ஆங்கிலேயன் நடத்தினான், கட்டபொம்மன் வீட்டில் ரெய்டு. கட்டபொம்மன் அடிபணியவில்லை. எதுக்கு கொடுக்க வேண்டும் வரி; ஏன் கொடுக்க வேண்டும், வட்டி. எங்களோடு வயலுக்கு வந்தாயா; நாட்டு நட்டாயா; களை எடுத்தாயா; அங்கே கொஞ்சி விளையாடும், எம் குலப் பெண்களுக்கு, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா; மாமனா, மச்சானா; மானங்கெட்டவனே, ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி.

    நிமிர்ந்த தலையுடன், மீசையை முறுக்கி கேளுங்க; நீங்கள் தலை குனிய அவசியமே இல்லை; நீங்கள் திருடிடவில்லை; கொள்ளையடிக்கவில்லை; யாரையும் ஏமாற்றி வழிப்பறி செய்யவில்லை; வீட்டு மணை மோசடியில் வந்த பணம்மில்லை; அதிர்ஷடவசமாக, லாட்டரி, டீலா - நோ டீலா, என்று சோம்பேறித்தனமாக சம்பாதித்த பணம்மில்லை. லஞ்சம் வாங்கி சம்பாதித்த பணம்மில்லை. நேர்வழியில், நேர்மையாக உழைத்து, கிரியேட்டிவ்வாக சிந்தித்து, பார்த்து, பார்த்து, கற்பனை திறத்துடன், மக்கள் விரும்பி, ரசிக்கும் வகையில், திரைப்படங்களை நீங்கள் படைக்கின்றீர்கள். அதுவும் அவ்வளவு எளிதான விசயம் அல்ல. சரியான ஆளைப் பிடிச்சு, கதை சொல்லி, அவுங்க ஒத்துக்கிட்டு, இராப்பகலா உழைச்சு உருவாக்கி, ஊரு உலகமெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு, பாட்டு, நடனம், நகைச்சுவை, தொய்வில்லாத கதை என்று அத்தனை துறைகளிலும் முழுகவனம் செலுத்தி, படத்தை வெளியிடுகிறீர்கள். அதுவும், தியேட்டரில், மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான், உங்கள் உழைப்பின் பலன் கிடைக்கும். படம் ஓடவில்லையென்றால், அத்தனையும் நஷ்டம். பணம், உழைப்பு, நேரம் என்று பலவித நஷ்டம். அதுக்குமேலே மார்க்கெட் வீழ்ச்சியடைந்துவிடும்.

    இத்தனை ரிஸ்க் இருக்கு. உங்க வீட்லே ரெய்டு என்று தலைகுனிய தேவையேயில்லை. தைரியமாக, தலை நிமிர்ந்து கட்டபொம்மன் மாதிரி நில்லுங்க; மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு கேளுங்க; எங்களோடு கதை டிஷ்கஷனுக்கு வந்தாயா; வசனம் எழுதினாயா; பாட்டு எழுதிக் கொடுத்தாயா; மாமனா, மச்சானா - எதுக்கு கொடுக்க வேண்டும் வரி என்று முழு உரிமையோடு கேளுங்கள். சவால் விடுங்க; நீங்க சவால் விடும் நிலையில் இருக்கின்றீர்கள். இன்றைய சூழ்நிலையில், உங்கள் நிலை - உயர்ந்த நிலை.

    இதுதான் சவால். நீ சொன்ன வரியை நாங்க கட்டுறோம். எங்களது படைப்பு, களவு போகாது; திருட்டு விசிடி முழுமையாக ஒழிக்கப்படும் என்று நிலையை அரசாங்கம் உருவாக்கட்டும்; அன்றைக்கு, நீ சொல்கின்ற வரியை நாங்க கட்டுறோம் என்று சவால் விடுங்க. தற்போதைய சூழ்நிலையில், திரை கலைஞர்களுக்கு, இரண்டு பக்கமும் இழப்பு. அரசாங்கம் உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கின்றது. விசிடி திருடர்கள், பயப்படமால் உங்கள் உழைப்பை கொள்ளையடிக்கின்றார்கள்.

    இவையெல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பத்திரிக்கைகள் ஏற்படுத்தும் பரபரப்பு. மக்களிடம் வாங்கி வைத்த நல்ல பெயர் எல்லாம், இந்த பத்திரிக்கைகள் ஏற்படுத்தும் பரபரப்பின்மூலம், களங்கம் ஏற்பட்டு விடுகிறது. ரெய்டு என்றவுடன், மக்கள் என்ன நினைப்பாங்க; எங்கேயோ திருடிக் கொண்டு வந்து வீட்டுலே கறுப்பு பணத்தை பதுக்கி வைச்சு இருக்காங்க. சட்டமுறைப்படி, அதிகாரிகள் சோதனை முடிந்தபிறகு, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வார்கள். நீதிபதி வழக்கை விசாரித்துவிட்டு, இருதரப்பு வாதங்களை கேட்டு, ஆராய்ந்து, தீர்ப்பு கூறுவார். அந்த தீர்ப்புக்குப் பிறகுதான், இவர்கள் குற்றவாளி அல்லது நிரபராதி என்று முடிவாகும். ஆனால், பத்திரிக்கைகள், முந்திரிக்கொட்டையாக தீர்ப்பை எழுதி, தண்டனையும் வழங்கி விடுகிறார்கள். அது, பத்திரிக்கை சுதந்திரம் அல்ல; பொறுப்பின்மை; கையாலாகததனம்.

    சோதனை செய்வது, அந்த வருமான வரி நிர்வாகிகளின் அன்றாட வேலை. பஸ்களில், இரயிலில் டிக்கெட் சோதனையாளர்கள் வேலை செய்வது போல, வருமான வரி அலுவலகத்தில் சோதனை செயலாற்றும் நிர்வாகிகள். இரயிலில், நாம் பயணம் செய்து கொண்டு இருக்கின்றோம். டிக்கெட் இன்ஸ்பெக்டர், இரயில் உள்ள அனைவரிடமும் டிக்கெட் வாங்கிட்டேங்களா; காண்பியுங்கள் என்று சோதனை செய்கிறார். அது அவரது வேலை, கடமை. நம்மளைப் பார்த்து, டிக்கெட் காண்பியுங்கள் என்று கேட்டவுடன், நாம் குற்றவாளிகள் என்று அர்த்தம்மில்லை. இந்த வருமான வரி அதிகாரிகள், தினந்தோறும் எங்காவது சோதனை நடத்திக்கிட்டுதான் இருப்பாங்க; அது அவர்களோட வேலை. எதுக்கு, ஏன், இந்த சினிமாக்காரங்க வீட்டிலே சோதனை போட்டால் மட்டும், அது இத்தனை பெரிய செய்தியாகி விடுகிறது. அவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் மட்டுமே, மக்களின் கேளிக்கைக்காக உருவாக்கப்படுகின்றது. அவர்கள் வாழும் வாழ்க்கை, மக்களின் கேளிக்கைக்கு அல்ல. அவர்கள் வாழ்க்கை, அவர்களுக்கு மட்டுமே. அவர்கள் வாழ்க்கை, பொது சொத்து அல்ல. வருமான வரி அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே நடக்கும் விசயங்களை, மக்களுக்கு கேளிக்கை விருந்தாக படைப்பது, பத்திரிக்கைகளின் தரத்தை தாழ்வு நிலைக்கு எடுத்துச் சென்றுவிடும்.