மெய்ஞானமும், விஞ்ஞானமும்
  • Philosophy and Science

    கண்ணதாசன், ஒரு முழுமையான மனிதன். எல்லா துறைகளிலும் மூழ்கி முத்தெடுத்தவர். முத்து எடுத்தாரோ இல்லையோ, அந்த துறைகளின் சத்தியத்தை கண்டுகொண்டு இருக்கின்றார். கண்ணதாசன் வார்த்தைகள் எல்லாம், அவரது வாழ்க்கை அநுபவத்தில் கண்ட உண்மைகள். பெரும்பாலும் மனிதர்கள், அது நெருப்பு, சுட்டுவிடும் என்று உணர்ந்து விலகி வாழ்வார்கள். சிலர், தொட்டுத்தான் பார்ப்போமே என்று நுனி விரலினால் தொட்டுப்பார்ப்பார்கள். சிலர், இறங்கி, தீக்குளித்துவிட்டு, சத்தியமாக, மற்றவர்களுக்கு ஒளியாக தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, My Life is My Message, என்று சொல்லியிருக்கின்றார். அதுபோல, கண்ணதாசன், தான் கண்டு, உணர்ந்து, அநுபவித்த உண்மைகளை, சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம், தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.

    திருவிளையாடல் ஒரு புராணப்படம். அந்தப் படத்தில், பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்ற பாட்டில், காதலர்களின் இன்பத்தினை, இனிமையாகச் சொல்லி இருக்கின்றார். மீனவர்களின் நாட்டுப்புற பாட்டு; ஒரு நாள் போதுமா என்று இசையையும், ராகங்களின் பெருமையையும் எடுத்துச் சொல்லும் பாட்டு; பார்த்தா பசு மரம் என்ற எளிமையான குத்துப் பாட்டு.

    பார்த்தா, பசு மரம்; படுத்து விட்டா நெடு மரம்; செத்த விறகுக்காகுமா; தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா; அவ்வளவுதான் வாழ்க்கை. இது மிகவும் எளிமையான பாட்டு என்பதாலும், அதற்கு சிவாஜி கணேசன் ஆடும் ஆட்டத்துக்காகவும், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டாக இருந்தது. இந்த பாட்டை சிறுவர்கள், அர்த்தம் தெரியாமல் பாடி ஆடுவார்கள்; பாட்டை கேட்கும் பெரியவர்கள், அந்த ஒரு நிமிடத்தில், வாழ்க்கையின் சத்தியத்தை உணர்ந்து, அந்த ஒரு நிமிடமாவது, உண்மையான வாழ்க்கையை வாழ்வார்கள்.

    சமுதாயத்துக்கு, கருத்துகள் சொல்லும்போது, எச்சரிக்கையுடனும், கவனத்துடனும், பொறுப்புடனும், வார்த்தைகளைத் தேர்வு செய்து சொல்ல வேண்டும்.

    கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய்; கொண்டு வந்தால் தந்தை; சீர் கொண்டு வந்தால் தங்கை; கொலையும் செய்வாள் பத்தினி; உயிர் காப்பான் தோழன். இதில், தாயை உயர்வாக சொல்வதற்காக, தந்தை, தங்கை, பத்தினியை தாழ்த்தி சொல்லப்பட்டு இருக்கின்றது. தோழன்னை மிக உயர்வாக சொல்லப்பட்டு இருக்கின்றது. சமீபத்தில் நடந்த பட்டிமன்றத்தின் தலைப்பு கூட, இளமையில் உயர்வானது, காதலா, நட்பா.

    இந்த ஒப்பிடுவது, ஒன்றை உயர்த்தி, மற்றவற்றை தாழ்த்துவது, விளையாட்டு, கேலி என்று ஆரம்பித்து, பழக்கம், பின்பு வழக்கமாகி, இன்று நமது கலாசாரமாகவே மாறி விட்டது. இதெல்லாம், உனக்கு சிவாஜி பிடிக்குமா? எம்.ஜி.ஆர் பிடிக்குமா? சிறந்த மருத்துவம், ஆங்கில மருத்துவமா, சித்த வைத்தியமா, ஹோமியோபதியா, ஆயுர்வேதமா. கம்ப்யூட்டரில், unix or windows; java or dot net; சிறந்தது, பரத நாட்டியமா, குச்சுப்புடியா, கதக்களியா.

    ஆக, எதையும் அநுபவிப்பதில்லை. சிவாஜி கணேசனின் படங்களில் உள்ள நல்லதையும் ரசித்து அநுபவிப்பதில்லை; எம்.ஜி.ஆர் படங்களில் உள்ள நல்லதையும் பார்த்து அநுபவிப்பதில்லை.

    ஒப்பிடுவது, ஒன்றை உயர்த்திச் சொல்வதற்காக, மற்றவகைகளைத் தாழ்த்தி சொல்வது, இன்று நமது கலாசாரமாகவே மாறிவிட்டது. வள்ளுவன் சொன்னது, மெய்ப்பொருள் காண்பது அறிவு. ஆக, சிவாஜி படங்களிலும் நல்ல மனிதநேய விசயங்கள் இருக்கும்; எம்.ஜி.ஆர் படங்களிலும் புரட்சிகரமான, எழுச்சியூட்டும் விசயங்கள் இருக்கும். நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வது நன்று. அதேபோல், மனித வாழ்வுக்கு, காதலும் வேண்டும், நட்புறவும் வேண்டும். இதில் எதற்கு ஒப்பிட்டு, இது அதைவிட உயர்ந்தது என்று சொல்கிறோம். அதேபோல், அனைத்து மருத்துவ முறைகளிலும் நல்லவைகள் இருக்கும். அதுதான் அமெரிக்கர்களின் தனிசிறப்பு. மற்றவர்கள் கொண்டுவரும் விசயங்களில், அவர்கள் மெய்ப்பொருள் காண்கிறார்கள். சரியென்று உணர்ந்தால் ஏற்றுக் கொள்கிறார்கள். யோகவின் பலனை அறிந்து ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

    ஆதலால், தாய், தந்தை, தங்கை, பத்தினி, நண்பன் என்று அனைத்து உறவு முறைகளும், மனிதனுக்கு, சாம்பார், ரசம், தயிர் போல தேவைப்படுகிறது. இதில் ஏன் ஒன்றை உயர்த்த, மற்றவைகளை தாழ்த்தி சொல்ல வேண்டும். இன்றைக்கு பார்த்தீர்களானால், பத்தினி, ஆழ்வார்குறிச்சியில் கொலை செய்து விட்டாள். நட்புறவு என்பது பாய்பிரண்ட், கேர்ல் பிரண்ட் என்றாகி விட்டது. தாயாவது ஆனந்தப் படுகிறாளா? அதுவும் இல்லை. “கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்,” என்று சொல்லி, மற்றவர்கள் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று நினைக்கின்றாள். உறவுகளை, ஒப்பிட்டு, உயர்த்தி தாழ்த்துவதைவிட, உறவுகளின் உண்மைகளை மக்கள் உணரவைக்க வேண்டும். வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ. அவ்வளவுதான் வாழ்க்கை; அனைவரும் எளிதாக உணரக்கூடிய உண்மை.

    நமது முன்னோர்கள் செய்த ஆராய்ச்சிகள் எல்லாம் அகம் சம்பந்தப்பட்டது. அகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வழிமுறையை வகுத்துத் தந்துள்ளார்கள். ஆசை, கோபம், களவு கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம்; அன்பு, பண்பு, அடக்கம் கொண்டவன் மனித உருவில் தெய்வம் என்று அகத்தூய்மையின் பெருமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இறப்பின் அர்த்தத்தையும் அறிந்திருக்கின்றார்கள். கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன? படுத்து விட்டால் நெடுமரம்; தீயிலிட்டால் கரியும் மிஞ்சாது என்று உணர்ந்து, சாம்பலை நினைவு படுத்த, திருநீரை நெற்றியில் அணியும் பழக்கம் ஏற்பட்டது. இறப்புக்குப்பின், இந்த உடலுக்கு அர்த்தமில்லை என்ற உண்மையை உணர்ந்து எரித்து விடும் பழக்கம் ஏற்பட்டது. அதுவும், மகன் கொள்ளி வைக்கும்போது, தனக்கும் ஒரு நாள் இதே நிலை என்பதை உணரும் வாய்ப்பாக இருந்தது. அது, நமது கலாசாரம். நம் முன்னோர்கள் செய்த ஆராய்ச்சியெல்லாம், அகம் சம்பந்தப்பட்டது. கம்ப்யூட்டரில், சாப்ட்வேர் என்ற மென்பொருள், அகம் போன்றதாகும்.

    மேலை நாட்டு முன்னோர்கள் செய்த ஆராய்ச்சியெல்லாம், புறம் சம்பந்தப்பட்டது. அவர்கள், இறப்புக்குப்பின், கூடு விட்டுப் போன ஆவி, மீண்டும் ஒரு நாள், அந்தக் கூட்டுக்குள் திரும்ப வரும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையின் காரணமாக, இறந்த உடலை எரிக்காமல், மண்ணில் புதைக்காமல், பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். இறந்தவர்களின் உடலை அறுத்து, அதில் உள்ள உறுப்புகளை நீக்கிவிட்டு, உடலை பதம் செய்து பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். அப்படி ஆரம்பித்த பழக்கமுறை, பிற்காலத்தில் மருத்துவதுறைக்கு முன்னோடியாக அமைந்து உள்ளது. இப்படி உடலை பதம் செய்யும்போது, எலும்புகள் முறிந்துவிடும்; அந்த சமயத்தில் முறிந்த எலும்புகளை ஒட்டவைத்திருக்கின்றார்கள். ஆக, மேலை நாட்டு முன்னோர்கள் செய்த ஆராய்ச்சியால், மருத்துவதுறையில் அறுவை சிகிச்சை; எலும்பு முறிவை சரிசெய்தல் என்று முன்னேறி இருக்கின்றது.

    ஆக, நமது முன்னோர்களினால், அகம் சிறப்படைந்தது; அவர்களது முன்னோர்களினால், புறம் சிறப்படைந்துள்ளது. தற்பொழுது, போட்டி இல்லாமல், ஒப்பிட்டு, உயர்வு தாழ்வு பார்க்காமல், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், மெய்ப்பொருளை கண்டு, புதியதோர் உலகம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.