இன்றைய காலகட்டத்தில், மனுநீதி சோழன். காவலா. வாசலில் ஆராய்ச்சி மணியை, யார் அடிப்பது?
காவலன் வாசலுக்குச் சென்று பார்த்து, ஒரு பசு, நீதி கேட்டு வாசலில் மணியை அடிக்கின்றது. நம்ம இளவரசர், வீதியில் ரதத்தில் செல்லும்போது, பசுவின் கன்று மீது ஏற்றி விபத்து நடந்து விட்டது. அதற்கு, பசு ஆராய்ச்சி மணியை அடிச்சுக்கிட்டு இருக்கு.
இன்றைய காலகட்டத்தில், மனுநீதி சோழன் சொல்கிறார், “பாவம் பசு. அறிவில்லா ஜீவன். அதற்கு தெரியவில்லை; நாம் வெளியில் கட்டி வைத்திருக்கும் ஆராய்ச்சி மணி, வெறும் அலங்காரத்துக்கு என்று; மனுஷன் மணி அடிச்சாலே, நாம நீதி வழங்குவதில்லை; இதிலே, பசுவுக்கெல்லாம் நீதி கேட்குது. மொதல்ல, அந்த ஆராய்ச்சி மணியை கழட்டி, எங்கேயாவது கண்ணுக்கு தெரியாத இடத்திலே வைச்சுடு. அந்த பசுவுக்கு, வாழ்நாள் முழுவதும் வைக்கோள் தருகின்றோம் என்று அறிவித்து விடு.”
சோழ நாட்டிலிருந்து, பாண்டிய நாட்டுக்கு வந்தால், இன்றைய காலகட்டத்தில், பாண்டிய மன்னன் அரசவையில்:
என்னம்மா, உன் பேரு என்ன? அதென்ன கையிலே வைச்சுக்கிட்டு இருக்கே.
அரசே, என் பெயர் கண்ணகி. உங்களது அரண்மனை ஆட்கள், தவறுதலாக, என் கணவனைக் கொன்று விட்டார்கள்.
உடனே, பாண்டியன் நெடுஞ்செழியன், “என்ன ஒரு coincidence. அன்று மதுரையில், ஆளை மாற்றி கொன்னுட்டாங்க; இன்று, ஆழ்வார்குறிச்சியில், ஆளை மாற்றி கொன்னுட்டாங்க. சரி மேலே சொல்லு.”
கண்ணகி, சிலம்பை உடைக்கப் போகும்போது, பாண்டியன், “என்னம்மா, நீ. அழகான சிலம்பை உடைக்கப்போறே; சிலம்பை உடைச்சா போன உயிர் திரும்ப வந்துடும்மா. அந்த சிலம்பையும் அரசியின் காலில் அணிந்து அழகு பார்க்கலாம். உனக்கு எவ்வளவு காசு வேணுமோ, அதை வாங்கிட்டு, பூம்புகாரிலே போய் வாழு. அங்கே சோழன்கிட்டே சொல்லி, நல்ல வேலையா நான் வாங்கி தருகிறேன்.” மதுரையும் தீக்கிரையாகாமல் தப்பியது.
நவீன சிலப்பதிகாரம் என்ற நல்லதோர் காவியம் படைப்பதற்கு, சிறந்த கேரக்டர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தார், இளங்கோ அடிகள். இன்று நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, கேட்டு, படித்து, இளங்கோ அடிகளுக்கே சந்தேகம் வந்து விட்டது. நாடு, மக்கள், நாகரிகம், கலாசாரம் - எல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கின்றதா அல்லது சீரழிந்து இருக்கின்றதா என்று. அன்று படைத்த சிலப்பதிகாரமே போதும் என்று எண்ணி, நவீன சிலப்பதிகாரம் படைப்பதை கைவிட்டு விட்டார்.