இது என்னங்கடா சமுதாயம்? உளுத்துப்போன சமுதாயம்.
எங்கப்பத்தாவெல்லாம், வயித்துலேயும், நெஞ்சுலேயும் அடிச்சு கத்திக்கிட்டு, அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு, ஐயோ, ஐயோ, உசிரு போய்க்கிட்டு இருக்கே; பாவிகளா, காப்பாத்துங்களே என்று பதறி துடிச்சுக்கிட்டு இருக்கும்.
எங்க மாமாவெல்லாம், பதறாமல், தன்னம்பிக்கையோடு, முதலுதவி செய்து, தங்களது தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு, ஓடுவாங்க.
இது என்னடா சமுதாயம். அப்படியே கல்லுமாதிரி நின்னுக்கிட்டு இருக்கேங்க; தாயின் கருப்பயையில் உருவானேங்களா; இல்லே, அம்பத்தூர் தொழிற் பட்டறையில் வார்த்து உருவாக்கப்பட்ட இயந்திரங்களா?
ஆல்வார்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி பகுதிகளில் ஆளை வெட்டுவது என்பது புதிதல்ல; செங்கோட்டை நடுத்தெருவிலே, பட்டப்பகலிலே ஒரு ரவுடியை வெட்டி இருக்காங்க; வெட்டப்பட்டவன், ஊரே வெறுக்கின்ற ரவுடி; ரத்தம் ஒழுகிக் கொண்டு இருக்கும்; வெட்டுப்பட்ட ரவுடி, கெஞ்சுவான்; யாரும் உதவ மாட்டாங்க; பொம்பளைக உட்பட சாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ரவுடியை வெட்டியவனுக்கு, தங்களது வீட்டில் தஞ்சம் தருவார்கள்; ரவுடியை வெட்டியவன் ஹீரோ ஆயிடுவான்; தென்காசி கோர்ட்டில் சரண்; தென்காசி ஜெயிலில், சகல வசதி; குற்றாலத்துச் சாரல்; பொதிகை மலையில் தவழ்ந்து வரும் தென்றல்; சுத்தமான தண்ணீர்; ஹீரோ, சில வாரங்கள் ஜெயிலில் இருந்துவிட்டு, ஜாமினில் வெளியே வந்துடுவான். வழக்கு, வாய்தா போட்டுக் கொண்டே, அடுத்த முப்பது வருடங்கள் தொடரும். முப்பது வருடம் கழித்து, போதுமான ஆதாரம் இல்லையென்று, ஹீரோ விடுதலை. இது, அந்த பகுதியில், மிகவும் வழக்கமான, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சி.
அதே சமயத்தில், ஒருத்தன் முருங்கை மரத்திலிருந்து விழுந்து விட்டால், ஊரே பதறிப்போய், அவனுக்கு முதலுதவி எல்லாம் செய்து, மருத்துவமணைக்கு தூக்கிட்டுப்போய், எலும்பு முறிவை சரிசெய்து விடுவார்கள். அப்படித்தான் மக்களைப் பார்த்த அனுபவம். உள்ளிருந்து வரும் உணர்ச்சியை, அப்படியே வெளியே கொட்டி விடுவார்கள். அன்பான உணர்ச்சியாக இருந்தாலும் சரி; ஆத்திரம், கோபமான உணர்ச்சியாக இருந்தாலும் சரி; கொட்டி விடும் மனிதர்களைத்தான் பார்த்த அனுபவம்.
இது என்னடா சமுதாயம்; உணர்ச்சியற்ற ஜடம்மாக நின்னுக்கிட்டு இருக்கீங்க; இரத்தக்கறைப் படிந்துவிடும் என்று ஒதுங்கி ஓடுறானே; அவென் உடம்புலே ஓடுறது, நிச்சயம் சாக்கடையாகத்தான் இருக்கும்.
அந்த வீடியோ, பல்வேறு முரண்பட்ட எண்ணங்களை மனதில் உருவாக்குகிறது. அறிவியல் வளர்ச்சி; கைக்குள் அடங்கும் வீடியோ கேமரா; அந்த பதட்டமான சூழ்நிலையிலும், அந்த காட்சியை வீடியோ எடுக்க வேண்டும் என்று தோன்றிய அந்த எண்ணம்; எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்ட சமுதாய பொறுப்புணர்வு; அவையனைத்தையும் பாராட்ட முடிகிறது. அதே சமயத்தில், இந்த வீடியோ எடுத்த ஆளாவது, அந்த மனிதனை காப்பாற்ற முயற்சி எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கு; மனிதனுடைய அடிப்படை குணம் அழிந்துபோய் விட்டது.
சமுதாயம் உளுத்துப்போய் இருக்கின்றது; அரசாங்க நிர்வாகம் செயல்திறன் இழந்து இருக்கின்றது.
இந்திய அரசாங்க நிர்வாகம், செயல்திறன் அற்று இருக்கிறது என்ற உண்மையைத் தெள்ளத்தெளிவாக உணரமுடிகிறது. இந்திய அரசாங்க நிர்வாகம், சத்திய சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்திய நாட்டின் தலைமை நிர்வாகி, மன்மோகன் சிங்; தமிழக மாநிலத்தின் தலைமை நிர்வாகி, கருணாநிதி; இவர்கள் இருவரைத்தவிர, அரசாங்கத்தின் அனைத்து பிரிவினரும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்திருக்கின்றார்கள். மாநிலத்தின் அமைச்சர்கள்; ஐ.ஏ.எஸ் கலெக்டர்; காவல்துறை அதிகாரிகள்; அனைவரையும், சத்தியம் சோதித்து விட்டது. உண்மை நிலைமையை, சத்தியத்தை, முகத்தில் அடித்து உணர வைத்து விட்டது, அந்த வீடியோ.
வீடியோ பார்த்த அனைவருமே பதட்டப்பட்டு விட்டார்கள். நேரில் பார்த்துக்கொண்டு இருந்த அந்த ஜடங்கள், எந்தவித பதற்றமும் இல்லாமல், காட்சி முடிவதற்காக காத்துக்கிடந்து இருக்கின்றார்கள். வெட்டியவன் மீது வரும் ஆத்திரத்தைவிட, வேடிக்கைப் பார்த்த, அந்த ஜடங்கள் மீதுதான் எரிச்சல் வருகிறது. வெட்டியவன் உயிரைப் பறிக்கவில்லை. வேடிக்கையைப் பார்த்த ஜடங்கள்தான், உயிரைப் பறித்து விட்டது.
அரசாங்க நிர்வாகம் செயல் திறன் அற்று வெறுமனே இருக்கின்றது. சும்மா ஒப்புக்கு, அரசாங்கம் என்று ஒன்று இருக்கின்றது. வேலைக்கு ஆட்கள் இருக்கின்றார்கள். மாதம் முதல் தேதி, சம்பளம் வாங்கி விடுவாங்க. ஆனால், செயல்திறன்மிக்க அரசாங்கம் அமைந்திருக்கிறதாவென்றால், இல்லை என்பதே உண்மை. Director General of Police Jainஐ பதவியிறக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தாகி விட்டது. அத்துடன், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டாகி விட்டது. இனி, அரசாங்கம் செயல் திறத்துடன் செயல்பட ஆரம்பித்துவிடும். ஜெயின் செய்த ஒரே தவறு: ஆட்சியாளர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். சென்னையில் அமர்ந்து கொண்டு, ஆழ்வார்குறிச்சி பகுதியை நிர்வாகிப்பதென்பது மடமை. உள்ளூர் அரசாங்கத்தை வலுவாக அமைத்து; உள்ளூர் அரசாங்கத்துக்கு பொறுப்பினை வழங்கி; திறம்பட செயல்பட வழிவகைகளை வகுத்து அளித்திருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் எதை கேட்க விரும்புகிறார்களோ அதைச் சொல்வதற்கு, அரசாங்க நிர்வாகிகள் தேவையில்லை. ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, சரியான தகவலை, சரியான வழிமுறைகளை எடுத்துச் சொல்ல வேண்டியது, அரசாங்க நிர்வாகிகளின் தார்மீகப் பொறுப்பு.
அரசாங்க நிர்வாகத்தை சீரமைத்தால், செயல்திறனுடன் மக்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்துவிடும். அது மிக எளிதான காரியம். நகர அரசாங்கத்தை வலுப்படுத்தினால் போதும். வலுப்படுத்திவிட்டு, பொறுப்புகள், சின்னச்சின்ன பொறுப்புகள், சாலைப்பாதுகாப்பு, தீயணைப்பு, உள்ளூர் காவல் என்று, நகர அரசாங்கத்தை சீரமைக்க வேண்டும். சென்னையிலிருந்து நிர்வாகம் செய்வது இயலாத காரியம். ஆழ்வார்குறிச்சியை, டெல்லியிலிருந்து நிர்வாகம் செய்வதென்பது இயலாத காரியம் என்று அறிவார்கள். ஆழ்வார்குறிச்சியை, டெல்லியிலிருந்து சிறப்பாக நிர்வாகிக்க முடியாதோ; அதுபோல, சென்னையிலிருந்தும் நிர்வாகிக்க முடியாது.
அரசாங்க நிர்வாகம், எளிதில் சரிசெய்யக்கூடிய பிரச்சனை. ஆனால், சமுதாயம், வெளித்தோற்றத்தில் ஒன்றும் தெரியவில்லை; உள்ளே, உளுத்துப்போய் இருக்கின்றது. சமுதாயத்தில் உள்ள அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் ஒழிய, சமுதாயத்தை சீரமைக்க முடியாது.
இன்று நாம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சி, படிப்படியாக, சீராக இருந்திருக்குமேயானால், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் எடுத்திருக்கும். நூறு ஆண்டுகளில் அடையக்கூடிய பொருளாதார வளர்ச்சியை, வெறும் இருபது ஆண்டுகளில் அடைந்து விட்டோம். அந்த வேகமான வளர்ச்சி, நம்மிடம் இருந்த அடிப்படை மனிதப்பண்பை அழித்துவிட்டது. மக்கள் அனைவருமே, எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும், பொருளாதார இலக்கை; எந்த வழி என்பது முக்கியமல்ல; இலக்கை அடைவதுதான் முக்கியம்; திருடுவது, ஏமாற்றுவது, எதுவும் தப்பேயில்லை; எதுவும் தவறுயில்லை; லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது, ஓட்டு வாங்குவதற்கு, என்று எதுவுமே தவறில்லை, தப்பில்லை; மாட்டிக் கொள்ளாமல், எப்படி செய்வதென்ற திறமைதான் முக்கியம்; அந்த திறமையை வளர்த்துக் கொள்; சட்டசபையில் நடந்த விவாதத்தில்கூட, நெல்லையில் மாட்டிக் கொண்டது யாரு? என்றுதான் வினா எழும்பியது. ஆக, திறமையை வளர்த்துக் கொள்; மாட்டிக் கொள்ளாமல், தவறை எப்படிச் செய்வதென்ற திறமையை வளர்த்துக் கொள். வீடியோவில் மாட்டிக்கொண்டாலும், எப்படி வெளிவருவது என்பதுதான் முக்கியம். உண்மையை ஒத்துக்கொண்டு, அதற்கேற்ற நடவடிக்கை எடுப்பது தேவையற்றது. அதுதான், நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய, வாழுகின்ற இன்றைய சமுதாயம்; ஆரோக்கியமற்ற, உளுத்துப்போன சமுதாயம்.
அந்த தாசில்தார் அம்மா, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய், இலஞ்சம் வாங்கிடுச்சாம்; மாட்டிக்கொண்டது; அதை தொலைக்காட்சியிலே பெரிசா படம்பிடிச்சு காட்டுறாங்க. அதிலேயிருந்து மக்கள் கற்றுக்கொள்ளும் பாடம், மாட்டிக் கொள்ளாமல், தவறு செய்வதெப்படி என்ற திறமையை வளர்த்துக்கொள்வது. நேர்மையாக, நியாயமாக வாழ நினைப்பவன், சாமார்த்தியம் இல்லாதவன் என்று கருதப்படுகின்றது. இந்த சமுதாயத்தில், அனைவருமே ஏமாற்றுவார்கள், நாமதான் ஏமாறாமல், நம்மை பாதுகாத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைதான், மக்கள் கடைப்பிடிப்பது.
ஒருகாலத்தில், மதுரையில் ரவுடிகள் என்று பார்த்தால், மதுரை முத்து, பழக்கடைப் பாண்டி என்று ஒரிருவர் இருந்தார்கள். அவர்கள்கூட பிற்காலத்தில், மக்களின் நன்மதிப்பை பெறும் முயற்சியில் ஈடுபட்டார்கள். முயற்சியில் வெற்றியும் அடைந்தார்கள். நகர தந்தை என்று மக்கள் மரியாதை செலுத்தும் இடத்துக்கு, தன்னை உயர்த்திக் கொண்டார், மதுரை முத்து. இன்றைக்கு, மக்கள் அனைவருமே பெரும் சாமர்த்தியசாலிகளாகி விட்டனர். நாலு பேரு, நம்மை நல்லவன் என்று மதிக்கணும் என்ற எண்ணம் அறவேபோய்விட்டது. கோடி வந்து விட்டால், அனைவரும் மதிக்கத்தான் செய்கிறார்கள். அந்த கோடி எப்படி வந்தது என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஆக, நேர்மை, உண்மை, சத்தியம் அனைத்தையும் சாமார்த்தியம், சாணக்கியத்தனம் அழித்து விட்டது, முற்றிலுமாக. அதன் விளைவே, இன்று நாம் காணும், மனிதர்கள், ஜடங்களாக, நம் முன் நிற்கிறார்கள். உணர்ச்சியற்ற, மனிதத்தன்மை முற்றிலும் அழிந்த ஜடங்கள். மனித சமுதாயத்தை அழித்துவிட்டு, ஜடங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கி விட்டோம். இதில் அரசியல்வாதிகளை மட்டும் குறைச் சொல்வது சரியன்று. அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.
ஜெயகாந்தன் கதையில் வரும் வெட்டியான், சவத்தை புதைக்கின்றபோது, உணர்ச்சியற்ற ஜடமாக பாடினானே, பாட்டு: நந்தவனத்திலே ஓர் ஆண்டி; நாலாறு மாதமாய் குயவனை வேண்டி; கொண்டு வந்தானே ஒரு தோண்டி; அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி. அதுபோல், இன்று ஜடங்களாக நிற்பவர்கள்; இரத்தக் கறை தன் சவாரி சூட்டில் படிந்துவிடும் என்று ஒதுங்குபவர்கள், தங்களது உறவுகள், அப்படி துடிதுடித்து இருக்கும் வேளையில், ஜடங்கள், மீண்டும் மனிதர்களாவார்கள்.
நல்லவேளை, அந்த உடலை எடுத்துச்சென்று, உறுப்புகளை தானம் செய்து, பல உயிர்களை காப்பாற்றி விட்டோம் என்று விளம்பரம் செய்யாமல் இருந்தேங்களே, அந்தளவுக்கு சமுதாயம் சீரழிந்து போய்விடவில்லை என்ற ஆறுதலோடு, முடிக்கின்றேன்.