இது வளர்ந்த நாட்டில் காணப்படும் காட்சி. நாடு வளர்ந்திருக்கின்றது; அறிவியலில், பொருளாதாரத்தில். ஆனால், மனிதப்பண்பில், குணத்தில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றதா? சைக்கிள் நிச்சயம் களவு போய்விடும். எத்தனை வகையான பூட்டுக்கள் போட்டாலும், கண்டிப்பாக களவு போய்விடும். அங்குள்ள மக்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். அந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் யாரையும் நம்பவே முடியாது. ஆக, நாடு வளர்ந்திருக்கின்றது; ஆனால், சமுதாயம் தாழ்ந்து இருக்கின்றது.
தற்போதைய நிலைமை தெரியவில்லை. ஆனால், இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை. மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில், இரவு நேரங்களில், வீட்டுக்கு வெளியே வாசலில், கயிற்று கட்டிலில் படுத்து உறங்குவார்கள். வீட்டு வாசல் கதவு திறந்திருக்கும். மக்கள் எந்தவித திருட்டு, கொள்ளை பயமின்றி வாழ்ந்தார்கள். அந்த கிராமங்களில், முச்சந்தியில் ஒரு பொருளை வைத்தால், பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். அடுத்தவரது பொருளை, எடுக்க மாட்டார்கள். ஒருவர் வீதியில் தவறவிட்ட பொருளை, மற்றவர்கள் எடுத்துச் சென்று, உரியவரிடம் ஒப்படைப்பார்கள். ஊருக்கு புதிதாக வரும் நபர்களை, சந்தேகக் கண்ணோடு, திருடர்களாகவும், தீவிரவாதிகளாகவும் பார்த்து, கேள்விகளை கேட்க மாட்டார்கள். புதிதாக ஊருக்குள் வருபவர்களை, தங்களது வீட்டுக்கு வரும் விருந்தினர்களைப்போல் பாவித்து, இனிமையாகப் பழகுவார்கள். விலாசம் காட்டி வழிகேட்டால், வீட்டுக்கே அழைத்துச் செல்வார்கள். அந்த கிராமங்கள், அறிவியலிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சியை அடையாமல் இருந்திருக்கலாம். ஆனால், நிச்சயமாக, அந்த சமுதாயம், மிக உயர்ந்த நிலையை அடைந்த சமுதாயம்.
வீடுகளுக்கிடையில் வேலிகள் இல்லாத சமுதாயம். ஒவ்வொருத்தரும், காலையில், தங்கள் வீட்டைப் பெருக்கி, தண்ணீர், பிறகு சாணம் தெளித்து, கோலம் போட்டு விட்டால், அந்த தெருவே சுத்தமாகிவிடும். இந்த வீட்டுப் பெண்ணுக்கு, பக்கத்து வீட்டு ஆம்பளைகள் அனைவரும், அண்ணன் முறையாகி விடுவார்கள். மதம் வேறு, சாதி வேறாக இருக்கும். ஆனால், உறவு முறை, மதினி, மச்சான், மாப்ளே, கொழுந்தன், என்று வலிமை அடைந்துவிடும். தங்கள் வீட்டு உணவை, பக்கத்து வீட்டோடு பகிர்ந்து உண்ணுவது வழக்கம். இந்த வீட்டுப் பிள்ளை அடுத்த வீட்டுக்குச் சென்று விளையாடும். அந்த தாய், விளையாடும் அனைத்து குழந்தைகளுக்கும் சாப்பாடு ஊட்டி விடுவாள். "டேய் ராமு, சாப்பிட வா," என்று தாய் அழைப்பாள். அதற்கு, "அம்சு பெரியம்மா வீட்டிலே சாப்பிட்டேன்," என்று சொல்வான் அந்த சிறுவன். அந்த சமுதாயம், நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமுதாயம். மனிதனை மனிதன் முழுவதுமாக நம்பிய சமுதாயம். அதுதான் உயர்ந்த சமுதாயம்.
வள்ளுவர், ஒளவையார் என்று ஆரம்பித்து சான்றோர்கள் பலரால், உருவாக்கப்பட்ட சமுதாயம். அந்த சமுதாயத்தில், அனைத்து மக்களுமே நேர்மையாகவும், உண்மையாகவும், சத்தியமாகவும் வாழ்ந்தார்கள். பொய் சொல்வது, ஏமாற்றுவது, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவது எல்லாம் தவறான செயல் என்று கருதிய சமுதாயம். அப்படிப்பட்ட சமுதாயம், சமீபகாலம்வரை உயிரோடு இருந்தது. அந்தமாதிரியான, சிறந்த பண்பாடு, உயர்ந்த எண்ணங்கள், குணங்கள் நிறைந்த சமுதாயத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
கவசங்கள் தீர்வாகாது. புதுசு புதுசா கவசங்களை உருவாக்கி, உடம்பெல்லாம் கவசம் அணிந்து கொண்டு வாழ்வது சிறந்த முறையாகாது. மக்கள் அனைவரும் நல்ல குணம் கொண்டவர்களாகி விட்டால், கவசங்களின் எண்ணிக்கைகள், தேவைகள் குறைந்து விடும். இன்றைய காலகட்டத்தில், எது தவறு, எது சரி என்று மக்கள் உணரமுடியவில்லை. அன்று ஒரு நாள், ஒரு அம்மா, காரில் வந்து இறங்குனாங்க; அடையாறு மெயின் ரோட்டில், அடையாறு பேக்கரி கடைக்கு அருகில், இந்த சினிமா டிவிடி கடை இருக்கு. கடைக்குள் நுழைந்து, The Sound of Music படம் இருக்கா என்று கேட்டு வாங்கினார்கள். குவாலிட்டி எப்படி என்று கேட்டார்கள். அந்த கடைக்காரர் சொன்னார், “ஒரிஜினலைவிட சூப்பராக இருக்கும்.” இந்தமாதிரி கள்ளத்தனமாக பொருட்கள் வாங்க வேண்டுமானல், முன்பெல்லாம் பாரிஸ் கார்னரில் இருக்கும் பர்மா பஜாருக்குத்தான் போக வேண்டும். இப்ப, அந்த அடையாறு மெயின் ரோட்டிலேயே குறைந்தது ஐந்து கடைகளை எளிதாக காணமுடிகிறது. விற்பவனும் தப்பு என்று எண்ணவில்லை; வாங்குபவர்களும், தாங்கள் சட்டத்துக்கு புறம்பான காரியத்தில் ஈடுபடுகின்றோம் என்ற எண்ணமில்லை; தமிழ்த் திரையுலகமும், The Sound of Music திருட்டு விசிடியில் விற்கப்படுவதை கண்டுகொள்ளவில்லை. ஆட்டை கடிச்சவன், மாட்டை கடிப்பான்; கடைசியில் மனுசனையும் கடிப்பான். நம்மளை கடிச்சவுடன், உடனே கவசங்களைத்தேடி ஓடுகின்றோம். புது புது கவசங்கள், சமுதாய சீர்கேடுக்கு தீர்வாகாது.
அன்றைக்கு, சைதாப்பேட்டையில் இருக்கும் மாநாகராட்சி அலுவலகத்துக்கு சென்று இருந்தேன். அங்குள்ள அதிகாரியிடம், வீட்டு வரி செலுத்த வேண்டும் என்றவுடன், அந்த அதிகாரி, “இரண்டாயிரம் கொடுத்துட்டு போங்க. நாளை காலையில், வீட்டைவந்து பார்க்கிறேன்,” என்றார். அந்த மாநகராட்சி அதிகாரி, காசு கேட்க எந்தவித கூச்சம் காட்டவில்லை; தயக்கமில்லை; அருகில் இருப்பவர்களைக் கண்டு அஞ்சவில்லை. முன்பெல்லாம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், வெளியே யாருக்கும் தெரியாமல் வாங்குவார்கள். ஆக, அந்த காலத்தில், இலஞ்சம் வாங்குவது தவறான செயல் என்று சமுதாயம் கருதியது. இன்றைய சமுதாயம், இலஞ்சம் வாங்குவதை உரிமை என்று எண்ணுகிறது. ஆக, இன்றைக்கு, எது சரி, எது தவறு என்று அறிய முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.
இத்தனை சைக்கிள்கள் இருக்கும் இடம், அமெரிக்காவில் உள்ள மிகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகம். இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் அத்தனை சைக்கிள்களும், உறுதியான பூட்டினால் பூட்டப்பட்டு இருக்கின்றது. சில சைக்கிள்கள், இரண்டு பூட்டுக்கள் இருக்கின்றது. இந்தக் காட்சியை பார்க்கும் வெளியுலக மக்கள் என்ன நினைப்பார்கள்?
இந்த பல்கலைக்கழகத்தில், நிறைய சைக்கிள் திருடுபவர்கள் இருக்கின்றார்கள், என்றுதான் நினைப்பார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவருமே சைக்கிள் திருடர்கள். இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பு சொல்லித்தரும் பேராசிரியர்களும் சைக்கிள் திருடர்கள். இந்த பல்கலைக்கழகத்தில், வேலை செய்யும் அனைவரும் பக்கா திருடர்கள். பூட்டுகள், கவசங்கள் தீர்வாகாது. நம்பிக்கையான மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வாகும். பூட்டுகள், கவசங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தால், அதி நவீன கவசங்களை உருவாக்கிக் கொண்டு இருக்க வேண்டும்.
இப்படி தெளிவாக எடுத்துச் சொன்னவுடன், அந்த பல்கலைக்கழக தலைமை நிர்வாகி வெட்கித் தலைகுனிந்தார். பூட்டுகள், கவசங்கள் - தனது நிர்வாகத்துக்கு ஏற்பட்ட இழுக்கு என்று எண்ணினார். இது, பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அனைவரது குணத்தை, பண்பை இழிவுபடுத்தும் செயல் என்று கருதினார். தன்னோட பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் நேர்மையானவர்கள்; நாளைய உலகை ஆளப்போகின்றவர்கள். இப்படி, பல்கலைக்கழக வளாகத்தில் போடப்படும் பூட்டுகளும், கவசங்களும்தான் சமுதாயத்துக்கு ஏற்ற சரியான வழி என்று எண்ணி, மேலும் வலுவான கவசங்களை உருவாக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆக, தலைமை நிர்வாகியான எனது கடமை, அவர்களை சரியான வழியில் அழைத்துச் செல்வது என்று எண்ணினார்.
அந்த பல்கலைக்கழக தலைமை நிர்வாகி, தீர்வு காண்பதற்கு முன்பு, நம்பிக்கையின்மை, சந்தேகம், பொய் சொல்வது, ஏமாற்றுவது, பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது - இந்த குணங்கள் எல்லாம் மனிதனுக்கு எந்த பருவத்தில் ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தன்னோட ஆராய்ச்சியில் சில வாலிண்டர்களை சேர்த்துக் கொண்டார். முதலாவதாக, ஆராய்ச்சியாளர்கள், ஆரம்பபள்ளிக்கு ஒரு மாதம் சென்றார்கள். ஆரம்ப பள்ளியில், மாணவ மாணவிகளின் நடத்தைகளைக் கண்காணித்தார்கள். ஆரம்பபள்ளி என்பது, கிண்டர் முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள பள்ளி. அங்கும், நான்காம், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கூடம் வந்தார்கள். அந்த சிறுவ சிறுமிகள், சைக்கிளை பூட்டுவதில்லை. மதியம் சாப்பாட்டு இடைவேளையில், மைதானத்தில் பிள்ளைகள் விளையாடுகிறார்கள். ஒரு சிலர், தங்களோட குளிருக்காக அணியும் ஜாக்கெட்டை, மைதானத்திலேயே மறந்து விட்டுச் சென்று விடுகிறார்கள். ஒரு சில குழந்தைகள், அந்த ஜாக்கெட்டுகளை எடுத்துச் சென்று, அலுவலத்தின் முன் வைக்கப்பட்டு இருக்கும், Lost and Found பெட்டியில் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். ஜாக்கெட்டை மறந்து விட்ட குழந்தைகள், அலுவலகத்துக்குச் சென்று, அந்த Lost and Found பெட்டியிலிருந்து தங்களோட பொருட்களை மட்டும் எடுத்துச் செல்கின்றனர். பலரது பொருட்கள், பல மாதங்களாக அந்த Lost and Found பெட்டியிலேயே கிடக்கின்றது. சில சமயம், iPod போன்ற விலையுயர்ந்த பொருட்களையும், குழந்தைகள், அடுத்தவர்களின் பொருட்களுக்கு ஆசைப்பட்டு எடுத்துச் செல்லாமல், உரியவரிடம் சேர்கும் முயற்சியே எடுக்கின்றது.
அடுத்த மாதம் Middle School. அதாவது, ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை. அந்த பள்ளியில், சைக்கிளில் வருபவர்கள் சாதரண பூட்டைக் கொண்டு பூட்டுகின்றார்கள். சின்ன சின்ன தவறுகள் தொடங்கி விடுகிறது, அந்தப் பருவத்தில். அடுத்த மாதம் High School. அதாவது, ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டு வரை. அங்கு சைக்கிள் நிறுத்தும் இடத்தில், சைக்கிளை பூட்டி வைக்கவும். சைக்கிள் தொலைந்தால், நிர்வாகம் பொறுப்பில்லை. அந்த பள்ளி பருவத்தில், தவறுகள் அதிகம் அரங்கேற ஆரம்பித்து விடுகிறது.
ஆக, பல்கலைக்கழக தலைமை நிர்வாகி உண்மையை உணர ஆரம்பித்தார். இந்த படிப்பு, பல்கலைக்கழகம் அறிவியல், பொருளாதார அறிஞர்களை மட்டும் உருவாக்கவில்லை. சமுதாயத்தை சீர்கெடுக்கும் படித்தவர்களையும் உருவாக்குகிறது என்ற உண்மையை உணர்ந்தார்.
...கட்டுரை முழுமையடையவில்லை.