சமுதாயத்தில் களைகள்
  • Society Weeds need to be identified

    வயல்காட்டில் பயிர்கள் வளரும்; பயிர்களோடு சேர்ந்து, களைகளும் வளரும். பயிர்கள் வளமாக வளர, அந்த களைகளை பிடுங்கி விடுவார்கள்; அப்படி களை எடுக்காவிட்டால், நிலச்சத்து, நீர்ச்சத்து என்று அனைத்து சத்துக்களையும், களையே உறிஞ்சி எடுத்து விடும். பயிர்களுக்கு உயிர்ச்சத்து சரியான முறையில் கிடைக்காமல் போய்விடும். ஆரோக்கியமான சத்துக்கள் கிடைக்காததால், பயிர்கள் வளமான வளர்ச்சியை அடைய முடியாத நிலை ஏற்படும்.

    ஆக, சமுதாயத்திலும் களைகள் உருவாவது இயற்கையான விசயம். சமுதாயத்திலும் களை எடுக்க வேண்டும். அப்படி களை எடுக்கும்போதுதான், சமுதாயம் ஆரோக்கிய வளர்ச்சி அடையும். களை எது, பயிர் என்று அறிந்து களை எடுக்க வேண்டும். தவறுதலாக, களை என்று பயிரை, வேரோடு பிடுங்கி விடக்கூடாது.

    இன்றைய சமுதாய பிரச்சனையே, பயிர் எது, களை என்று அறிய முடியாத நிலை. பயிர்களைவிட, களைகள் பெருகிக் கிடக்கின்றது. காலத்தில் களை எடுக்காததால், அது பெருகி, கருவேல முள் காடுமாதிரி பரந்து விரிந்து கிடக்கின்றது.

    ஆயிரம் கோடி ரூபாய், வீட்டு மனை மோசடி. இது தற்போதைய காலகட்டத்தில், மக்களால் பேசப்படுகின்ற, பத்திரிக்கைகளால் எழுதப்படுகின்ற, சமுதாய களை. ஆயிரம் கோடி என்பது களை அல்ல; அது கருவேல முள்காடு. இதற்கு முன்னால், இப்படி மாபெரும் அளவு, சமுதாயம் மோசம் செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தால், ஆம், பலமுறை, பலரால், பெரிய அளவில் மோசடி அரங்கேறி இருக்கின்றது. இதுதான், இறுதி மோசடி, இனிமேல் இந்த அளவு சமுதாயத்தை, யாராலும் மோசம் செய்ய முடியாது என்று உறுதியாக கூறமுடியுமா என்று கேட்டால், இல்லை, இது மாதிரி மோசடி இன்னும் பல அரங்கேறத்தான் செய்யும், வருங்காலங்களில் என்பதுதான் உண்மை.

    இந்த மாதிரி Large Scale மோசடி ஏற்படுவதற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம், சமுதாயம் சீர்கெட்டு இருக்கின்றது; இரண்டாவது காரணம், அரசு நிர்வாக அமைப்பு, செயல் திறன் இன்றி, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

    ஆயிரம் கோடி மோசடி செய்தவன், மோசம் போன மக்கள், இந்த அளவு மோசடி அரங்கேறுகிறது என்பதை அறிய இயலாத அரசாங்க நிர்வாகிகள் - அனைவருமே, நாம் வாழும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மோசடி செய்தவனும், நம்ம கல்விசாலையில் பயின்றவன்; மோசம் போன மக்கள், செயல் திறன் அற்ற அரசாங்க நிர்வாகிகள் என்று அனைவருமே, நமது கல்வி சாலையில், நமது கல்வி முறையில், கற்று, தேர்ச்சிப் பெற்ற மனிதர்கள். ஆக, நமது இன்றைய கல்வி முறை, இன்றைய சமுதாயம், எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது என்று பாருங்கள்; ஆயிரம் கோடி அளவு மோசடி செய்யும் பலே கில்லாடி; உண்மை எது, போலி எது அறிய முடியாத மக்கள்; சமுதாய சீர்கேட்டை கண்டு, அதனை சீர்செய்ய முடியாத அரசாங்க நிர்வாகிகள் என்று அனைவரையும், நாமே உருவாகுகின்றோம். ஆக, நாம் இன்று உருவாக்குவது பெரும்பாலும் களைகளாகவே சமுதாயத்தில் இருக்கின்றது. ஆரோக்கியமான, வளர்ச்சி அடைந்த பயிர்கள் மிகச் சொற்பம்; களைகள் ஏராளம்.

    சமுதாயத்தையும் சீரமைக்க வேண்டும். அரசு நிர்வாகத்தையும் சீர்படுத்த வேண்டும். ஆயிரம் கோடி மோசடி செய்தவன், மக்களை ஏமாற்றவில்லை; அவன் மக்களாட்சிக்கு சவாலாக உருவெடுத்திருக்கின்றான். அரசு நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களின் கவனம் எல்லாம், எதிரணியில் இருப்பவர்களின் மேலேயே இருக்கின்றது. எதிரணியில் இருப்பவர்கள், மக்களாட்சிக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களாட்சியின் எதிரி, ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தவன் தான். களை உருவாவதை அறிய முடியாத நிலை, அரசாங்க நிர்வாகத்தின் மிகப் பெரிய சவால். செயல்திறன்மிக்க அரசாங்க நிர்வாகம் என்பது, உழைக்காமல், மக்களை ஏமாற்றி, மோசடி செய்து பொருள் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே உருவாக இடம் கொடுக்காத நிலையை அடைவது. அதுதான் சிறப்பான அரசாங்க நிர்வாகம். உழைக்காமல், நேர்வழியில் செல்லாமல் பைசா காசு, இங்கே சம்பாதிக்க் முடியாது என்ற நிலை.

    மக்கள் ஏமாறுகிறார்கள்; உண்மை என்னவென்றால், மக்கள், ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தவனிடம் ஏமாறவில்லை; மக்கள் ஏமாந்தது, தங்களது அரசாங்கம் சிறப்பாக செயல்படுகிறது என்று நம்பி, ஏமாந்துபோய் இருக்கின்றார்கள். நமது அரசாங்கத்தில், மோசடி தொழில் செய்வதற்கு வாய்ப்பில்லை, என்று அரசாங்கத்தின் மேல் முழுநம்பிக்கை வைத்து ஏமாந்துபோய் இருக்கின்றார்கள். நமது அரசாங்க நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ் படித்த சிறப்பான நிர்வாகிகளால், திறம்பட நிர்வாகிக்கப்படுகிறது என்று நம்பி, மக்கள் ஏமாந்துபோய் இருக்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில், பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, நாம் நடத்தும் இந்த செயல் திறன் அற்ற அரசாங்கம் தேவைதானா என்ற கேள்வி எழும்பக்கூடும்.

    அரசாங்கம் என்று ஒன்று இல்லையென்று வைத்துக் கொள்வோம். ஊரில் கவால் நிலையம் இருக்காது. போலிஸ்காரங்க, வரி வசூலிப்பவர்கள் என்று யாரும் இருக்க மாட்டாங்க. நீ உழைச்சு சம்பாதித்த பணம் முழுவதும் உனக்கே சொந்தம்; அத்தனையும் வெள்ளை பணம்; அரசாங்கம் என்று ஒன்று இல்லையென்றால், வரி இல்லாத வாழ்க்கை; வரி இல்லையென்றால், கறுப்பு பணமும் இல்லை; உன் வீட்டுக்கு, உன் தெருவுக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமா; உன் தெரு ஆட்கள் கூடி பேசி, தண்ணி லாரிகாரர்களிடம் பேசி முடிவு செய்துக்கோ; கழிவு நீர் வெளியேற்றம், உங்க தெரு ஆட்களோடு கூடி பேசி, முடிவெடுத்துக்கோ.

    வீடுகளில், பீரோவில், நகை பணம், மக்கள் வைக்க மாட்டார்கள். இப்ப எதுக்கு, வீட்டு பீரோவில் பணத்தை வைக்கிறார்கள்; ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான்; ஊரிலே போலிஸ் ஸ்டேஷன் இருக்கு; அங்கே ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டர் என்று நிறைய பேர் இருக்காங்க; ஆதலால், எவனும் தைரியமாக வீட்டுக்குள் நுழைந்து திருட மாட்டான்; அப்படி திருட முயற்சி செய்தாலும், போலிஸ்லே மாட்டிடுவான்; தப்ப முடியாது; என்ற நம்பிக்கையின் அடிப்படையில், வீட்டுல் பீரோவில் பணம், நகை வைக்கின்றார்கள், மக்கள். அரசாங்கத்தின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை போய்விட்டால், மக்கள் வீட்டு பீரோவில் பணத்தை வைக்க மாட்டார்கள். குடத்துக்குள் நகை, பணம் என்று வைத்து, வீட்டு கொல்லைப்புறத்தில், ஆழமாக குழித்தோண்டி புதைத்து வைத்து விடுவார்கள். மீண்டும், புதையல் என்ற பழைய நிலைக்கு மக்கள் சென்று விடுவார்கள்.

    ஆக, உண்மை நிலையை மக்கள் உணரவேண்டும். பாதிப்பு அடைந்தவர்கள், நிச்சயம் குரல் எழுப்ப ஆரம்பித்து விடுவார்கள். இருக்கவே இருக்கு; அருமையான வசனம் - கட்டபொம்மன் வசனம். வரி, வட்டி, கிஸ்தி; உனக்கு ஏன் கொடுக்க வேண்டும், வரி; செயல் திறன் அற்ற அமைப்பு, அப்படியே காலம் காலமாக தொடர முடியாது; மாறுவதைத்தவிர வழியேயில்லை; மக்களாட்சி சிறப்பாக செயல்பட ஒரே வழி - வலுவான, பொறுப்பான உள்ளாட்சி அரசாங்கம். உள்ளாட்சி அரசாங்கத்துக்கு அதிகாரம் அளித்து, சுயாட்சி அமைத்து கொடுக்க மனமில்லையென்றால், மாற்று வழியும் ஒரே வழி; அது சர்வாதிகாரம் மட்டுமே. சர்வாதிகாரத்தினால் மட்டுமே, சென்னையிலிருந்து கொண்டு ஆழ்வார்குறிச்சியை சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும்; சென்னை என்ன, டெல்லியிலிருந்துகூட, ஆழ்வார்குறிச்சியை சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும், சர்வாதிகாரத்தினால்.

    ஆக, இப்படியே செயலற்ற நிலை தொடர வாய்ப்பில்லை; அதுவும் இப்ப இருக்கின்ற நிலை, கட்டாயமாக தொடர முடியாது. கல்வி ஒளி அறைக்குள் வரும்போது, இருள் அகன்றுவிடும். கல்வி அறிவை, மக்களுக்கு அளித்துவிட்டு, தேர்தல் சின்னம் நிலையாக இருக்கும் என்று எண்ணுவது, மடமை. தேர்தல் சின்னம் என்பது அச்சாணி. தேர்தல் சின்னம் இல்லையென்ற சூழ்நிலை உருவாகும்போது, கட்சிகள் மறைந்து போகும். கட்சியின் சொத்துக்களுக்கு பங்காளிகள் சண்டை; சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று ஒருவன் வந்தானால், கட்சியின் சொத்துக்கள், மக்களின் சொத்துக்களாகிவிடும். மைசூர் மகராஜா கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்; அவரது மாளிகை, அரசாங்கத்தின் சொத்தாகும் என்று.

    மனித சமுதாயத்துக்கு ஆற்றும் சேவையே, அழியாத சொத்து. காலம் கடந்தும் நிலைத்து நிற்கும். மற்ற, அனைத்து அசையும் சொத்து, அசையா சொத்து, எல்லாம் நிலையற்றது.