கேரளத்தில், மாநில முதல்வர், நியமனம் செய்யப்படுகின்றார். ஆந்திரத்தில், மாநில முதல்வர், நியமனம் செய்யப்படுகின்றார். கர்நாடகத்தில், மாநில முதல்வர், நியமனம் செய்யப்படுகின்றார். ஆனால், தமிழகத்தில்...
தமிழகத்தில், கவர்னர் மற்றும் தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில், முதல்வர் நியமனம் செய்யப்படுவதில்லை. தமிழக மக்கள், முதல்வரை தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழக வரலாற்றிலேயே, தமிழகத்தில் எந்தக்காலத்திலும், முதல்வர் நியமனம் செய்யப்படுவதில்லை.
தமிழக முதல்வர்கள், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா - டெல்லியில் இருந்து நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்தில், மக்கள் என்றுமே தெள்ளத் தெளிவாக சிந்தித்து செயலாற்றுகிறார்கள். தமிழகத்தில், மக்கள், தங்களது உரிமையை, முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை. தமிழக மக்களின் உரிமையை, டெல்லியில் உள்ள யாரும் பறித்துக் கொள்ள முடியாது.
வரலாற்றை புரட்டிப் பார்த்தால், உண்மையிலேயே, தமிழகத்தில் இருந்து, தலைவர்கள் டெல்லிக்கு சென்று, பிரதமரை நியமனம் செய்து இருக்கின்றார்கள். ஆனால், டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வந்திருந்து, முதல்வரை நியமனம், இதுவரை நடந்திருக்கவில்லை. இனியும் நடக்க வாய்ப்பு இல்லை. காமராஜரைக்கூட, இங்குள்ள மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். காமராஜரை, டெல்லியில் இருந்து, யாரும் நியமனம் செய்யவில்லை.
தமிழக மக்கள், என்றும் சீர்தூக்கிப் பார்த்து தேர்ந்தெடுப்பது, மக்கள் தலைவரை. தமிழக வரலாற்றில், மக்கள் தலைவர், இயக்கங்களையும் தாண்டி உயர்ந்திருப்பார். உண்மையிலேயே, இயக்கங்கள், தலைவரை தூக்கி நிறுத்தவில்லை. தலைவர்தான், இயக்கம் என்ற பாரத்தை தன் தலையில் சுமந்து நிற்கின்றார்.
தமிழக வரலாற்றிலேயே, தலைசிறந்த தலைமைப் பண்புடன் திகழ்ந்தவர், அண்ணாதுரை. சுதந்திரத்துக்குமுன், மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி; சுதந்திரத்துக்குப்பின், அண்ணாதுரைதான், அகில இந்திய அளவில், சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
சிறப்பான தலைமைப் பண்புடையவர்களால், இது சரியான செயல் அல்லது இது தவறான செயல் என்று மெய்ப்பொருளைக் காணமுடியும். அப்படி அவர்கள் மெய்ப்பொருளைக் காணும்போது, தன் மனதுக்கு சரி என்று பட்டதை, மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி, சரியான காரியத்தை, தலைமையேற்று நடத்தி விடுவார்கள்.
இந்தியா, பிரிட்டீஷ்காரர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தபோது, அதை வரவேற்பதே சரியான செயல் என்று அறிந்து, எந்தவித தயக்கமும் இல்லாமல், தலைமையேற்று கொண்டாடி இருந்திருக்கின்றார், அண்ணாதுரை. அதைத்தவிர, இந்தியா பரிபூரண சுதந்திரம் அடைந்துவிட்ட பிறகு, ஆட்சி பொறுப்பேற்பதே சரியான செயல் என்று அறிந்து, தன் முன்னே வந்துகிடக்கும் வாய்ப்பினை தெளிவாக கண்டு உணர்ந்து, அந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
அண்ணாதுரை, தன்னம்பிக்கை உடையவர்; ஆதலால், மற்றவர்களைக் கண்டு அச்சம் கொள்ளவில்லை; அச்சம் கொள்ளாததால், அடிமைகளை உருவாக்கவில்லை. தன்னம்பிக்கை உள்ள தலைவர்களை தூக்கிப் பிடிக்க ஆட்கள் தேவையில்லை. சிறிய விளக்கைத்தான் தூக்கிப் பிடிக்க ஏணி தேவை. சூரியனை தூக்கிப்பிடிக்க அடிமைகள் தேவையில்லை. தன்னம்பிக்கை உள்ள தலைவர்கள் எரிமலை மாதிரி; உள்ளிருந்து சக்தி பீறிட்டு வெளிவரும். எரிமலையைப் பத்தவைக்க தீக்குச்சிகள் தேவையில்லை.
தமிழக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், மற்றும் ஒரு உண்மை விளங்கும். அதாவது, தமிழக வரலாற்றில், எப்பொழுதுமே புதுமை; எப்பொழுதுமே, புதிய பாதை; தமிழகத்தில் உதயமான நான்கு முதல்வர்களுமே, தனித்துவத்துடனே உதயமானார்கள். யாரும், முன்பு கடைப்பிடிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. அனைவருமே துணிச்சலுடன் முயன்றார்கள். முயற்சி, மெய்வருத்தக் கூலி தந்தது.
பாரம்பரியமிக்க, வரலாறு படைத்த காங்கிரஸ் கட்சியைக் கண்டு அஞ்சாமல், தன் மன உறுதியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, பூஜ்ஜியத்தில் இருந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர், அண்ணாதுரை.
அண்ணாதுரைக்குப் பிறகு, வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு இருந்திருந்தால், நெடுஞ்செழியன் தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருப்பார். ஆனால், கருணாநிதி, துணிச்சலுடன் முயன்றார்; தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கவும் செய்தார்.
பிறகு, எம்.ஜி.இராமச்சந்திரன், மிகவும் துணிச்சலான முயற்சி. அண்ணாதுரைக்கும் சரி, கருணாநிதிக்கும் சரி, எம்.ஜி.இராமச்சந்திரனுக்கும் சரி - யாரும் தங்க தாம்பாளத் தட்டில் வைத்து, முதல்வர் பதவியை தானம் செய்யவில்லை. அனைவரும் போராடியே பெற்றனர்.
அதன்பிறகு, ஜெயலலிதா. எம்.ஜி.இராமச்சந்திரனின் மறைவுக்குப்பிறகு, ஜெயலலிதாவுக்கு, முதல்வர் பதவியை யாரும் தூக்கிக் கொடுத்திடவில்லை. துணிச்சலுடன் போராடி, முயற்சி செய்து, முதல்வர் பதவியை அடைந்தார்.
ஆக, தமிழகத்தில், மக்கள்தான் மாநில முதல்வரை தேர்ந்தெடுக்கின்றார்கள். டெல்லியில் இருந்து, தமிழக மாநில முதல்வர் நியமனம் செய்யப்படுவதில்லை. ஆக, காங்கிரஸ், தமிழகத்தில் ஆட்சி என்பது எப்பொழுதும் நிறைவேறாது. தமிழக மக்களுக்கு தெளிவாகத் தெரியும்; இவர் மக்கள் தலைவர்; இவர் நியமனம் செய்யப்பட்ட தலைவர். ஆக, மற்ற மாநிலங்களில் வேலைசெய்யும் பார்முலா, தமிழகத்தில் வேலைக்கு ஆகாது.
ஒரே ஒரு வழி இருக்கு. அதாவது, மம்தா பானர்ஜி வழி; அதாவது, இப்ப ஜெகன்மோகன் ரெட்டி வழி. அதுமாதிரி, காங்கிரஸ்ஸில் இருந்து தலைவர்கள் உதயமானால், வழி பிறக்க வாய்ப்பு இருக்கு. அதைவிட்டுப்புட்டு, நியமனம் வேலைக்கு ஆகாது.
இறுதியாக, தமிழகத்தைப் பொறுத்தவரை, வரையறுக்கப்பட்ட வழிமுறைகள், கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடு, இவைகளை உடைத்தெறிந்துவிட்டு, புதுமையான வழியில், புதிய சிந்தனையுடன், தமிழகத்தில் தலைவர்கள் உதயமாகி இருக்கின்றார்கள். புதுமையே, தமிழகத்தின் வழக்கம்.