சவால்கள், சோதனைகள், பிரச்சனைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை.
வீடுகளில் பிரச்சனைகள் ஏற்படும்போது, பெரியவர்கள் ஒன்றுகூடி, அமர்ந்து, ஆலோசித்து, பேசி முடிவெடுப்பார்கள். பெரியவர்களின் மீது உள்ள அன்பினால், மதிப்பினால், அவர்கள் எடுத்த முடிவினை மனதில் ஏற்று, வீட்டில் உள்ள அனைவரும் செயலாற்றுவார்கள்.
வீடு போலத்தான் நாடும். நாட்டில் உள்ள பெரியவர்கள், ஒன்று கூடி அமர்ந்து, ஆலோசித்து, பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படி பெரியவர்கள் எடுக்கும் முடிவினை, அவர்களின் மீதுள்ள நன்மதிப்பினால், நாட்டு மக்கள் ஏற்று செயலாற்றுவார்கள். எடுத்த முடிவு, அனைவரும் எதிர்பார்த்த, விரும்பிய முடிவாக எப்பொழுதும் இருக்க முடியாது. ஆனாலும், இந்த தருணத்தில், இதுதான் சரியான முடிவு என்று மக்கள் உணர்ந்தால், மனதார ஏற்றுக் கொள்வார்கள்.
நாட்டில், அவ்வப்பொழுது உருவாகும் சவால்களை, சோதனைகளை, பிரச்சனைகள, தங்கள் சார்பில் அமர்ந்து, ஆலோசித்து, பேசுவதற்காகத்தான், மக்கள், தங்களது வாக்குகளை அளித்து, தங்களது பிரதிநிதிகளை மக்களவைக்கும், மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைக்கும் அனுப்பிவைக்கின்றார்கள். ஆனால், நமது மக்களாட்சியில், மக்களின் பிரதிநிதிகளுக்கு பேச வாய்ப்பு அளிப்பதில்லை. பாராளுமன்றம், மாநிலங்களில் சட்டப்பேரவை - எப்பொழுதும் மூடியே கிடக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்றத்தில், ஆற அமர்ந்து, ஆலோசித்து, பேச சந்தர்ப்பமே அமைவதில்லை.
மக்களாட்சி சிறப்பாகச் செயலாற்றும் வேளையில், நாட்டு பெரியவர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அந்த சூழ்நிலையில், மன்மோகன் சிங், பொறுப்புடன் பாராளுமன்றத்துக்கு வந்தமர்ந்து, மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து உரையாற்றுவார். அந்த உரை:
"மதிப்பிற்குரிய இந்திய மக்களின் பிரதிநிதிகளே! உங்களுடன் எனது மனம்திறந்து, இந்த உரையினை ஆற்றவிரும்புகின்றேன். எனது உரையை முழுமையாக, கவனத்துடன் கேட்டு, பிறகு, நீங்கள் அனைவரும் இந்த பிரச்சனையின் நல்லது கெட்டதுகளை சீர்தூக்கிப் பார்த்து, நன்கு ஆலோசித்து, அனைவரும் சிந்தித்து, பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவின்படி, நான் இந்திய நாட்டை நல்வழியில் நிர்வாகிக்க உதவும்.”
ஆக, பாராளுமன்றத்தில் உள்ள நாட்டுப் பெரியவர்கள் அனைவரும், மன்மோகனின் உரையை கவனத்துடன் கேட்டு, பிறகு, அனைவரும் ஒன்று கூடி, அமர்ந்து, ஆலோசித்து, அனைவருக்கும் கருத்து சொல்வதற்கு வாய்ப்பளித்து, அனைவரது கருத்துக்களையும் கேட்டு, சீர்தூக்கிப் பார்த்து, ஆராய்ந்து, நாட்டுப் பெரியவர்கள், நல்லதோர் முடிவெடுத்து, அதன்படி மன்மோகன் சிங் நிர்வாகம் செய்வது - சிறப்பான மக்களாட்சியாக அமையும்.
ஆனால், இன்று நாம் நடத்தும் மக்களாட்சியைப் பாருங்கள். ஆம், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தும் ஆட்சிதான் மக்களாட்சி. சும்மா, அரசியல்வாதிகள்மீது பழிபோட்டுவிட்டு, நாம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது சரியல்ல.
இன்றைக்கு, நாம் அனைவரும், மக்களாட்சியை, ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாக நடத்திக் கொண்டு இருக்கின்றோம். நாம் நடத்தும் மக்களாட்சி கேளிக்கை நிகழ்ச்சி, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாட்டுபோல் அமைந்திருக்கின்றது. விளையாட்டு கேளிக்கை நிகழ்ச்சிகள், இரு அணிகளுக்கிடையே நடக்கும் போட்டியாக அமையும். இரு அணிகளும் பரபரப்புடன், விறுவிறுப்புடன் மோதிக் கொள்ளும். போட்டியில், அம்பயர் என்று நடுவர்கள் போட்டியினை நடத்துவார்கள். அந்த போட்டியின் இறுதியில், வெற்றி, தோல்வி என்று ரிசல்ட் தெரிந்துவிடும். மக்கள், தங்களது காசினை செலவழித்து, போட்டியினைக் கண்டு ரசிப்பார்கள்.
தற்பொழுது நடந்தேறிய பாரத் பந்த், ஏறக்குறைய ஒரு விளையாட்டு கேளிக்கை நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது. அகில இந்தியா அளவில், இரு அணிகள் களம் இறங்கினார்கள். இறுதியில் வெற்றி என்று ஒரு அணியினரும், தோல்வி என்று மற்றொரு அணியினரும் அறிவித்து விட்டனர்.
நாம் நடத்தும் மக்களாட்சி கேளிக்கை நிகழ்ச்சிகளில், நாட்டு மக்கள் இரு அணியாக பிரிந்து, நாம் அனைவரும் கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றோம். நாமே நடுவர்கள். வெற்றியும் நமக்கே; தோல்வியும் நமக்கே. பாரத் பந்த், வெற்றி பெற, நாட்டு மக்களாகிய நாம் ஏற்படுத்தும் சேதாரம்; மக்கள் வேலை செய்யாததால் ஏற்படும் இழப்பு; அதற்கான விலையை நாம்தான் கொடுக்க வேண்டும்.
அதைத்தவிர, பாரத் பந்த், தோல்வி அடைய, அரசு நிர்வாகம் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள்; பாதுகாப்புக்கான அதிக செலவு; ஆக, அரசு நிர்வாகம் கூடுதல் செலவு செய்துதான், பாரத் பந்த் தோல்வி அடையச் செய்ய முடிகிறது. அதற்கான விலையையும் நாம்தான் கொடுக்க வேண்டும்.
மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சியை எதிர்த்து, இந்த மாதிரியான போராட்டம் நடத்தினார். அதில் ஒரு அர்த்தம் இருக்கின்றது. இப்ப, நடக்கும் மக்களாட்சி, நாம், இந்திய தேசத்து குடிமக்களாகிய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்தும் மக்களாட்சி. இப்ப போராட்டம் நடத்துவது அர்த்தமற்றது. காந்தி காலத்தில், இலண்டனில் உள்ள பாராளுமன்றத்தில், பிரிட்டீஷ் மக்களின் பிரதிநிதிகள் முடிவெடுக்கும் நிலை இருந்தது. பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில், காந்தி சென்று பேசி, நமது கருத்தை சொல்ல இயலாது என்பதால், காந்தி, இந்திய மக்களை தெருவுக்கு அழைத்துவந்து போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.
இப்ப அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. புது டெல்லியில் உள்ள நமது பாராளுமன்றத்தில், நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில், பாராளுமன்றத்தில், நாட்டுப் பெரியவர்கள், ஆற அமர்ந்து, ஆலோசித்து, பேசி முடிவெடுப்பதுதான் சரியான முறை. அதை விட்டுப்புட்டு, பாரத் பந்த், முற்றிலும் கேளிக்கை நிகழ்ச்சி. அதன் வெற்றிக்கும் சரி, தோல்விக்கும் சரி, மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகின்றது.
பத்திரிக்கைகள், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எழுதிட ஆசை; ஆனால், இன்றைய சூழ்நிலையில், பத்திரிக்கைகள், முதலில் விழிப்புணர்வு அடையவேண்டும் என்று எழுதுவதே சரி.
இல்லாத மேடை ஒன்றில், எழுதாத நாடகத்தில், எல்லோரும் நடிக்கின்றோம்; நாமே எல்லோரும் பார்க்கின்றோம். வீணாவது, நமது வரிப்பணமே. வெற்றியும் நமக்கே; தோல்வியும் நமக்கே.