And so, my fellow Americans, ask not what your country can do for you; ask what you can do for your country. John F. Kennedy
நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டுக்கு நீ என்ன தொண்டாற்றினாய் என்று எண்ணிப் பார். அது அமெரிக்க ஜனாதிபதி, ஜான் கென்னடியின் பொன்மொழி. தன்னிகரற்ற, தன்னலமற்ற, உயர்ந்த எண்ணங்களை உள்ளத்தில் கொண்டு உலாவரும் தலைவர்கள், கென்னடி, மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி போன்றோர்கள், மக்களைப் பார்த்து, அப்படி சொல்லலாம். ஆனால், கார்பரேட் நிறுவனத்தின் தலைவர்கள், பில் கேட்ஸ் மற்றும் நாரயணமூர்த்தி, தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களைப் பார்த்து, இந்த பொன்மொழியை உதிர்க்க முடியாது.
நிறுவனம், உனக்கு, என்ன செய்தது என்று கேட்காதே; நிறுவனத்துக்கு நீ என்ன சேவை செய்தாய் என்று எண்ணிப் பார் என்று சொல்வது, சுத்த ஏமாற்றுத்தனம். ஆக, கட்சிகள், இன்று கார்பரேட் வழிமுறைகளைப் பின்பற்றுதல், காலத்தின் கட்டாயம். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மாதச் சம்பளம், உடல் ஆரோக்கிய காப்பீட்டுத் திட்டம், மற்றும் போனஸ், ஸ்டாக் ஆப்ஷன், நிறுவனத்தில் பங்கு, வேலையில் பணிபுரியும்போது இறக்க நேரிட்டால், குடும்பத்துக்கு காப்பீடு.
மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியின் செயல்பாடுகள், தான் ஒரு மாநிலத்துக்கு நிர்வாகத் தலைமையாக வேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்தது அல்ல; அது நேருவும், ஜின்னாவும் அந்த நோக்கத்தில் செயலாற்றினார்கள். மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, மக்களை உப்புச் சத்தியாகிரகம் போராட்டத்துக்கு அழைத்தால், அது அவரது சுயமுன்னேற்றத்துக்காக அல்ல. மக்களின் விடுதலைக்காக, மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமைப் பொறுப்பேற்று மக்களை வழிநடத்தினார். அந்த மாதிரி தலைவர்கள் பொன்மொழி உதிர்க்கலாம், மக்களைப் பார்த்து. நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நீ நாட்டுக்கு என்ன தொண்டாற்றினாய் என்று எண்ணிப் பார். இன்றைய தலைவர்கள், கட்சி உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நீ கட்சிக்கு என்ன தொண்டாற்றினாய் என்று எண்ணிப்பார் என்று சொல்வது, முழுக்க முழுக்க ஏமாற்றுத்தனம்.
ஏமாற்றும் தலைவர்கள், மக்களை மட்டும் ஏமாற்றுவதில்லை; கூட்டணிக் கட்சிகளை மட்டும் ஏமாற்றுவதில்லை; தங்களது கட்சியினரையும் ஏமாற்றத்தான் செய்கிறார்கள். பல ஆண்டுகள், தங்களது இளமைப் பருவம் தொடங்கி கட்சி தொண்டாற்றுகின்றவர்கள், நாளடைவில் கட்சிக்கு பாரமாக ஆகிவிடுகிறார்கள். அவர்களால் கட்சிக்கு புதிய பலன் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஏதாவது ஒருவகையில், வருத்தத்துடனேயே கட்சியில் இருக்கின்றார்கள். முன்பெல்லாம், இந்த கட்சியில் வருத்தம் ஏற்பட்டவுடன், அந்தக் கட்சிக்கு போவார்கள்; அதேபோல், அங்கு வருத்தம் அடைந்தவர்கள் இங்கு ஓடி வருவார்கள். தலைவர்களும் பாரம் தொலைந்தது என்று பெருமூச்சு விட்டார்கள். இப்பொழுது அந்த போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுப் போய்விட்டது. கட்சியின் பாரம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. பழைய ஆட்கள் ஆற்றும் சேவை குறைவு; ஆனால், அவர்கள் உரிமையோடு கொடுக்கும் தொல்லை அதிகம்; அவர்களை ஒன்றும் கேள்வி கேட்க முடியாது; கேட்டால், ஆட்சியில் இல்லாதபோது, கூட இருந்தது நாங்க, மறந்துடாதீங்க என்பார்கள்.
உள்ளூர் வியாபாரி, அரிசி விலையை உயர்த்தியவுடன் அதனை சமாளிக்க பர்மாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது வழக்கம். அதுபோல, பழைய ஆட்களை சமாளிக்க, மாற்றுக் கட்சியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாஜிக்கள். ஆக, இன்றைய தலைவர்கள் தங்களது தலைமைப் பண்பால் உயர்ந்த நிலையை அடைவதில்லை. கூட்டணிக் கட்சிகள் தூக்கிப் பிடிப்பதால் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். கூட்டணி கட்சி மட்டும் அல்ல; தங்களது கட்சி தலைவர்களும், தங்களை தாழ்த்தி, குனிந்து தங்களது முதுகை வளைத்து இருப்பதால், அதில் ஏறி நின்று கொண்டு, தலைவர்கள் காட்சி அளிக்கின்றார்கள். அடிமைகள், அடிமைகளாக தொடர்ந்ததாக சரித்திரத்தில் இல்லை. குனிந்து வளைந்திருக்கும் அடிமைகள் நிமிரும்போது, தலைவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.
இன்றைய காலகட்டத்தில், சிறிய கட்சி அல்லது பெரிய கட்சி என்ற சிறப்பு, தலைவரின் தலைமைப் பண்பால் அமைவதில்லை. அந்த கட்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பை வைத்தே, அது பெரிய கட்சி என்ற சிறப்பினை அடைகிறது. ஆக, சொத்தின் அடிப்படையில், தங்களது வேலையாட்களுக்கு, வர்த்தக நிறுவனங்கள், பங்குகளை வழங்குகிறது. அதுபோல, கட்சிகளும், அதனது உறுப்பினர்களுக்கு, அவர்கள் ஆற்றிய சேவையையின் அடிப்படையில் பங்குகளை வழங்குவது நியாயமான முறையாகும். சொத்தில் பங்கு ஒன்றும் இல்லை என்று ஒட்டு மொத்தமாக ஏமாற்றினால், பிறகு மொத்த சொத்துக்கு உலைவைத்து விடுவார்கள். இல்லாதவர்கள் அனைவரும், அனைத்து காலகட்டத்திலும் ஏற்கும் கொள்கை - பொதுவுடமையாகும். கட்சி, மக்களின் சொத்து; ஆக, கட்சிகளின் சொத்து, மக்களின் சொத்து என்றாக்கி விடுவார்கள்.
ஆக, கட்சிகள், கார்பரேட் வழிமுறையினை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. கட்சி என்ன செய்தது என்று கேட்காமல் சேவையாற்று என்று இனி சொல்லி, உறுப்பினர்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. உறுப்பினர்கள் அனைவரும் விழித்துக் கொண்டார்கள். பொதுநல சேவைக்காக, யாரும் கட்சியில் சேர்வதில்லை. தங்களது சுய முன்னேற்றம் தான், அவர்களின் தலையாய நோக்கம்.