பீட்டர் டெரக்கர் எழுதிய முதல் புத்தகம்; The End of Economic Man (1939). அந்த புத்தகத்தின் முகப்புரையில்,
“It is what Joseph Schumpeter (1883 – 1950) did when he identified the “innovator” as the social force that turns economies upside down; the innovator does not behave economically, does not try to optimize, is not motivated by economic rationale – he is a social phenomenon.”
அன்றிலிருந்து, இன்று வரை, பொருளாதார வல்லுனர்களின் ஆதிக்கம் அதிகம் செலுத்தி வந்தனர். பொருளாதார வல்லுனர்களின் வாக்கு, வேத வாக்காக மதிக்கப்பட்டது. சமீப காலம் வரை, Alan Greenspan, அமெரிக்காவில் அனைவரும் மதிக்கும் பொருளாதார நிபுணர்; அவரது கண் அசைவுக்கு பல அர்த்தங்களைக் காண்பர்; அவர் சொன்ன வார்த்தைகளுக்கும், சொல்லாத வார்த்தைகளுக்கும், ஓராயிரம் அர்த்தங்களை காண்பர்.
இன்று, நம்ம நாட்டிலும், பொருளாதார வல்லுனர்களின் வாக்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி உள்ளனர். பொருளாதார வல்லுனர்கள், the economy is in recession; என்றவுடன், நாட்டு மக்கள் மனம் நொந்து நூலாகிப் போய்விடுகின்றனர். பொருளாதார நிபுணர்கள், the economy is in depression; என்றவுடன், நாட்டு மக்கள், அதுவும் அமெரிக்க நாட்டு மக்கள் வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணி விடுகின்றனர்.
கடந்த பத்து வருடங்களாக, பொருளாதார வல்லுனர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்; பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது; அல்லது பொருளாதாரம் அழுத்த நிலை, அல்லது தாழ்ந்த நிலை, அல்லது குழிவு நிலையில் தங்கி, தேங்கி கிடக்கின்றது; பொருளாதாரம், முன்னேற்றம் அடையும் நிலையில் இல்லை; இன்னும் முழுவதுமாக குழிவு நிலையை அடையவில்லை; ஆகவே, மேலும் குழிவை நோக்கி, பொருளாதாரம் வெகு வேகமாக தாழ்வடைந்து கொண்டு இருக்கின்றது.
ஆக, இதுதான் உலகெங்கும் வாழும் பொருளாதார நிபுணர்கள் அருளும் அருள் வாக்கு; பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் வேளையில், இந்த பொருளாதார நிபுணர்களை, யாரும் கண்டு கொள்வதில்லை; பணம் புழக்கம் தடைபடும் வேளையில், பொருளாதார நிபுணர்களின் வாக்கு, வேத வாக்குப்போல் பாவிக்கப்படுகின்றது. அந்த நேரத்தில்தான், இவர்கள் மேலும் மக்கள் மனம் நோகும் வகையில் வாக்கினை அளிப்பார்கள். இந்த பொருளாதார வல்லுனர்களின் பிடியில் இருந்து, மக்களை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டார், பீட்டர் டெரக்கர். ஆதலால், தனது முதல் புத்தகத்துக்கு, பீட்டர் டெரக்கர் கொடுத்த தலைப்பு: பொருளாதார வல்லுனர்களின் ஆதிக்கம் முடிவடைந்தது.
யார் இந்த பொருளாதார வல்லுனர்கள்; நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாதார முன்னேற்றத்துக்கு இவர்கள் ஆற்றும் செயல் என்ன; இந்த வல்லுனர்களால், பொருளாதாரத்தை புரட்டிப் போட முடியுமா; தாழ்வு நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை, உயர்வு நிலைக்கு, இவர்களால் எடுத்துச் செல்ல முடியுமா.
இவர்களால் முடியாதென்றால், பொருளாதாரத்தை புரட்டிப் போடும் சக்தி, யாரிடம் இருக்கின்றது; தேங்கிக் கிடக்கும் உலகப் பொருளாதாரத்தை, உசுப்பி எழுப்புவது யாரால் முடியும்; குழிவு நிலையை நோக்கி, வேகமாக தாழ்வடைந்து கொண்டு இருக்கும் பொருளாதாரத்தை, மேலும் தாழ்வடையாமல் தூக்கிப் பிடிக்க யாரால் முடியும்; தூக்கிப் பிடிக்க மட்டும் அல்லாமல், குழிவில் இருந்து, வெளியே, கொண்டு வந்து, உயர்வு நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய திறன் யாரிடம் இருக்கின்றது.
நாம் அனைவரும், கிரிக்கெட், அல்லது புட்பால், அல்லது கூடைப்பந்து, அல்லது டென்னிஸ் என்ற விளையாட்டு நிகழ்ச்சிகளை நாள்தோறும் கண்டு களிக்கின்றோம். கிரிக்கெட் மைதானத்தில், வேகாத வெய்யிலில், வேர்க்க விறுவிறுக்க, நின்று கொண்டு விளையாட்டு வீரர்கள் விளையாடுவார்கள். மைதானத்துக்குள் நுழையும்போதே, இன்று வித்தியாசமாக விளையாடி வெற்றியினை அடைய வேண்டும்; அல்லது, அதிக கவனத்துடன், கடினமாக உழைத்து விளையாடி வெற்றினை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்குவார்கள், விளையாட்டு வீரர்கள். தங்களது மெய்யை வருத்தி முயற்சி செய்வார்கள்; சில சமயம் நல்ல கூலி, நல்ல பலன் கிடைக்கும்; பல சமயங்களில், முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறும் நிலையும் ஏற்படும். நல்ல பலன் கிடைக்கும் பொழுது, வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிப்பார்கள்; அவுட்டாகும் பொழுது, அல்லது கால்பந்து விளையாட்டில் கோல் போடும் நல்லதோர் வாய்ப்பை தவற விடும் பொழுது, தங்களது மன வருத்தத்தையும் வெளிப்படுத்துவார்கள். வெற்றியென்றாலும், தோல்வியென்றாலும் மனம் உடைந்து வீட்டினுல் முடங்கிக் கிடக்காமல், அடுத்த விளையாட்டு களத்துக்கு தங்களை தயார்படுத்தும் செயலில் ஈடுபடுவார்கள்.
விளையாட்டு நிகழ்ச்சிகளைக் காணும்போது, தொலைக்காட்சியில், நன்கு உடையணிந்து, நாக்கை சுழற்றி, எதுகை மோனையோடு, விளையாட்டை விமர்சனம் செய்வார்கள்; இவர்கள் விளையாட்டு வர்ணனையாளர்கள். சில சமயம், இவர்கள் ஆற்றும் உரை: சச்சின் அந்த பந்தை அப்படி அடித்திருந்திருக்கக் கூடாது; முரளிதரன் பந்தின் வேகத்தை அறிந்து, சற்று முன்னே சென்று, பேட்டை ஒரு சுழட்டு சுழற்றி அடித்திருந்தால், அந்த பந்து, பௌண்டரியைத் தாண்டி சென்று இருந்திருக்கும். சச்சினுக்கு ஆறு ஓட்டங்கள் கிடைத்திருக்கும். இந்தியாவும் கோப்பையை வென்று இருந்திருக்கும்.
மக்கள் அனைவரும் சச்சினின் விளையாட்டையும் ரசித்துப் பார்ப்பார்கள்; இந்த வர்ணனையாளர்களின் வர்ணனைகளையும் கேட்டு ரசிப்பார்கள். ஆனால், ஒரு நொடிப் பொழுதும், இந்த வர்ணனையாளர், இத்தனை சிறப்பாக விளையாட்டின் நுணுக்கத்தை அறிந்து உள்ளாரே; சச்சினுக்குப் பதிலாக, இந்த வர்ணனையாளர் களத்தில் இறங்கி விளையாடினால், மிக எளிதாக வென்று இருந்திருக்கலாமே என்று, மக்கள் யாரும் எண்ணுவதில்லை.
விளையாட்டு வீரர் வேறு; வர்ணனையாளர் வேறு. விளையாட்டு வீரன், புத்துணர்வோடு, புதுமையான சிந்தனையோடு களத்தில் இறங்குவான்; பல நேரங்களில், எடுக்கின்ற அத்தனை புதிய முயற்சிகளும் பலன் அளிப்பதில்லை; ஆதலால், அந்த புதுமை பித்தன், மனம் தளர்ந்து விடுவதில்லை. அந்த புதுமை பித்தன், வெய்யிலைக் கண்டு அஞ்சுவதில்லை; கரடு முரடான களத்தைக் கண்டு ஒதுங்குவதில்லை; பலனை எதிர்பார்க்காமல், செயலாற்றுகின்றான்; பலன் கிடைத்தால் ஆனந்தம்; இல்லாவிடில் கொஞ்ச வருத்தம். அவ்வளவுதான், வாழ்க்கை முடிந்து விட்டதென்று வாடி விடுவதில்லை; எந்த புதிய முயற்சியிலும் ஈடுபடாமல், குழிவு நிலையில், தாழ்வடைந்து விடுவதில்லை. ஒவ்வொரு முறையும், புதுமையான சிந்தனையோடு களத்தில் இறங்குகின்றான்.
ஆக, the economy is in depression or in recession என்கின்ற பொருளாதார வல்லுனர்கள் - விளையாட்டு வீரர்கள் அல்ல; அவர்கள் வெறும் வர்ணனையாளர்கள்; வானிலை அறிவிப்பாளர்கள். அந்த வல்லுனர்களால், பொருளாதாரத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
புதுமை; புதுமை ஒன்றே பொருளாதாரத்தைப் புரட்டிப் போடும். புதுமை பித்தன்கள், அவர்கள் காற்று; தென்றலாக வருவார்கள்; எங்காவது தாழ்வு நிலை ஏற்படும்போது, புயலாக மாறுவார்கள். புதுமை பித்தன்கள், குழிவு நிலையில் தாழ்ந்து கொண்டு இருக்கும் பொருளாதாரத்தை, தூக்கி நிறுத்தி, உயர்த்தி, மேல் நிலைக்கு எடுத்துச் செல்வார்கள். ஆக, பொருளாதார வல்லுனர்களை புறந்தள்ளிவிட்டு, புதுமைப் பித்தன்களின் செயலாற்றலைக் கண்டு புத்துணர்வு அடையுங்கள்.