மக்களே போல்வர் கயவர்.
  • Fake India

    போலி மதிப்பெண் சான்றிதழ்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் பாராட்டுக்குரியவர். பத்திரிக்கையாளர்களிடம், இன்றைய நிலையை, ஒளித்து மறைக்க முயலாமல், எடுத்துச் சொன்னது, பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த உண்மைகளின் மூலம், சமுதாய சீரழிவை, மக்கள் உணர வழிவகுக்கும்.

    வள்ளுவரின் சொல்படி,
    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.

    நோயாளியின் சொல்லினாலும், நாடியினாலும், பிற உடற் குறிகளாலும், other lab tests results, இவைகளின் மூலம் - நோய் இன்னதென்று ஆய்ந்து அறியவேண்டும். அதன் பிறகு, நோய் உண்டான கரணியத்தை; அதாவது, எதனால் இந்த நோய் உண்டானது என்ற காரணத்தை ஆராய்ந்து அறிய வேண்டும். அதன்பின், அந்நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை ஆய்ந்துகொண்டு, அதனை நிறைவேற்ற வேண்டும்.

    சமுதாயம் சீரழிந்து கிடக்கின்றது. இந்த சீரழிவுக்கெல்லாம், Band-aid போட்டு குணப்படுத்திட முடியாது. சீரழிவின் காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். சும்மா, அவசர அடியில், ஏமாறுகிறவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்வது பொறுப்பற்ற செயல்.

    ஏமாற்றுகின்றவனும், ஏமாறுகின்றவனும் நம்ம சமூகத்தில் அங்கம் வகிப்பவர்கள்; நாம் வாழும் சமுதாயத்தில்தான் அவர்களும் வாழ்கிறார்கள். ஏமாறுகின்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் கூறிய அறிவுரையை, வாசலில் உள்ள, காமராஜர் கேட்டு, கேலிச் சிரிப்பு சிரித்திருப்பார்; சத்தியமூர்த்தி பவனில் இருப்பவர்களுக்கு, அதன் அர்த்தம் விளங்கியிருக்காது; அவர்களின் ஏமாறும் நிலை, என்றும் தொடரும்; இங்குள்ளவங்களும் ஏமாற்றுகிறார்கள்; டில்லியில் இருப்பவர்களும், அவர்களை ஏமாற்றுகிறார்கள்.

    இந்த போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது என்ற உண்மை வெளியாகி இருக்கின்றது. ஆக, இது அவுங்க ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை; அல்லது இவுங்க ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை என்று அரசியல்வாதிகளின்மீது பழிபோட முடியாது. அது பொறுப்பற்ற செயலாகிவிடும். நாம் நடத்தும் மக்களாட்சியில் உள்ள நிறை, குறைகளுக்கு நாம் அனைவருமே பொறுப்பு என்பதனை, மக்களாகிய நாம் உணரவேண்டும்.

    அரசு நிர்வாகம், நன்கு படித்த சிவில் சர்வீஸ் நிர்வாகிகளை வைத்து செயலாற்றி வருகிறது. ஒரு மோசடியை, எட்டு வருடங்களாக, எந்தவித அச்சமின்றி, துணிகரகமாக செய்து வந்திருக்கின்றார்கள். இதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. எந்த மோசடியையும் கவனித்துப் பாருங்கள்; மோசடிக்காரன், பல கோடிகளுக்கு அதிபதி என்ற நிலையை அடைந்தபிறகே, கைதாகின்றான்; அந்த நிலையில், கெட்டிக்கார வழக்கறிஞருக்கு, சில கோடிகள் செலவழிக்க எந்தவித தயக்கமும் இல்லை; சில மாதங்கள் விசாரணை என்ற பெயரில் சிறைவாசம்; அப்புறம் பெயில், ஜாமீன்; விடுதலை.

    ஆக, நீதித்துறையின் விசாரணை; தண்டனை என்று அனைத்துமே போலியாகத்தான் இருக்கு; நமது நீதித்துறையின் தனிச்சிறப்பு, என்னவென்றால் - தீர்ப்பு வழங்கி தண்டனை கிடையாது; விசாரணையே தண்டனை. ஜாமீன் கிடைத்தால் - விடுதலை; ஜாமீன் கிடைக்காவிட்டால் - தண்டனை. பள்ளியில், மாணவர்களின் மதிப்பெண் போல், நீதிபதிகளுக்கு, மதிப்பெண் அளிக்க வேண்டும்; இவர் எடுத்துக் கொண்ட வழக்கு - 10; அதில் ஜாமீன் கொடுத்தது - 7; ஜாமீன் கொடுக்காதது - 3; விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கியது - 0. நீதிபதிகள், விசாரித்து தீர்ப்பு வழங்குவது - விவாகரத்து வழக்கு மட்டுமே.

    நமது அரசு நிர்வாக அமைப்பும், தீர்ப்பு வழங்க இயலாத நீதித்துறையும்தான் - நமது மக்களை தைரியமாக குற்றம் செய்ய தூண்டுகிறது. ஆக, நிர்வாக சீர்திருத்தம், இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் இன்றியமையாதது. நம்ம மக்கள் அனைவருமே அயோக்கியர்கள்; நம்ம மக்களுக்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுத்துத்தான், அவர்கள் தப்பு செய்வதை தவிர்க்க முடியும். இந்த வழிமுறையைத்தான் மேலை நாட்டினர் பின்பற்றுகின்றனர்.

    நமது முன்னோர்கள் வழிவகுத்து உருவாக்கியது, கலாசார சீர்திருத்தம். அனைவரும் நம் மக்களே; ஏமாற்றுகின்றவனும் நம்ம மக்களே; ஏமாறுகின்றவனும் நம்ம மக்களே. ஏன், எதற்கு இந்த போலி மதிப்பெண் சான்றிதழ் வழியை நாடுகின்றார்கள். அந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களை அணுகி, எதற்கு இந்த குறுக்கு வழியில் செல்கிறீர்கள்; அந்த பள்ளிக்கூடங்களுக்கு சென்று, எப்படி இத்தகைய மாணவர்களை உருவாக்குகின்றீர்கள்; உங்க பள்ளியில், நேர்மை, உண்மை, சத்தியம் என்ற நற்குணங்களுடன், மாணவர்கள் உருவாதில்லையா?

    ஆக, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை; என்னைச் சொல்லிக் குற்றமில்லை; காலம் செய்த கோலமடி என்று சொல்வதைத்தவிர வேறு வழியேயில்லை. Band-aid சிகிச்சையெல்லாம் வேலைக்காகாது; படிப்படியாக, இரண்டு வழிகளிலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கலாசார சீர்திருத்தம் என்று இரண்டு வழிகளிலும் செயலாற்ற வேண்டும். அகமும், புறமும் தூய்மையாகவுள்ள ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதென்பது, மிகப்பெரிய சவால்.

    சமூகத்தில் புதைந்து கிடக்கும், மற்ற போலித்தனங்களும் வெளிவருவது சிறந்தது; வெளிக் கொண்டு வாருங்கள், இன்னும் எஞ்சியிருக்கும் மற்ற போலிகளையும். போலிகளையும், போலித்தனத்தையும் வெளிக் கொண்டு வருவது, சமூகத்துக்கு ஆற்றும் சிறந்த தொண்டு; மாபெரும் சேவை; உங்களது பொறுப்பான செயலாற்றலினால், நாளைக்கு, வருங்காலங்களில் உருவாக இருந்த போலிகளை தடுத்து நிறுத்தியிருக்கின்றீர்கள். அத்தகைய போலிகளின் செயலினால் ஏற்படும் தீங்குகளில் இருந்து, நாளைய சமுதாயத்தை காப்பாற்றி இருக்கின்றீர்கள். உயர்கல்வித்துறை அமைச்சர், பாராட்டுக்குரியவர்.