நாகப்பட்டிணம் பஸ் நிலையம். ஒரு சூட்கேஸ் பெட்டி, கேள்வி கேட்பாரன்றி கிடக்கின்றது. வெடிகுண்டோ என்று பொதுமக்கள் பயப்படுகின்றார்கள். காவல் துறையினர் வந்து, மிக கவனத்துடன் சூட்கேஸ் பெட்டியைத் திறந்து பார்த்தால், சிறுவனின் உடல். மறுநாளே, பிள்ளையைப் பறிகொடுத்த தாய், காவல் நிலையத்துக்கு ஓடிவந்து தான் ஈன்றெடுத்த மகனின் உடலை அடையாளம் காட்டி, மயங்கி விழுகின்றார். அடுத்த நாள் துப்பு துலங்கி விடுகின்றது. பூவரசி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்படுகின்றாள்.
அரசு நிர்வாகம், மிகச்சிறப்பாக செயலாற்றி இருக்கின்றார்கள். இதைவிட சிறப்பாக, உலகில் உள்ள எந்த அரசு நிர்வாகமும் செயலாற்ற முடியாது. காவல் துறையினர், நீதித்துறையினர், மற்ற அரசு நிர்வாகிகள், அனைவரும் தங்களது கடமையை, சிறப்பாக செயலாற்றி இருக்கின்றார்கள். எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவு செயல்திறன். அதையும்விட, அந்த நேரத்தில் உருவான சவால்; ஆச்சரியமான உண்மை; பொதுமக்கள் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கூடியது, அரசு நிர்வாகத்துக்கு ஏற்பட்ட மாபெரும் சவால். அந்த சவாலை திறம்பட எதிர்கொண்டு செயலாற்றி இருக்கின்றார்கள், நமது அரசாங்க நிர்வாகிகள். அதிகாரிகள் என்ற வார்த்தை, ஆங்கிலேயன் காலத்தில் இருந்த அதிகார வர்க்கத்தைக் குறிக்கும் சொல்; நிர்வாகிகள் என்ற சொல், நிர்வாகத்தை சிறப்பாக செயலாற்றுபவர்கள் என்ற பொருள்படும்.
அரசு நிர்வாகம் சீரும் சிறப்பும் அடைந்து வருகின்றது. கலாசாரம். ஒரு விஷயம் மட்டும் மிகுந்த ஆச்சரியத்தையும், சமூகத்தின் மீது நம்பிக்கையையும், மதிப்பையும் வளர்த்து இருக்கின்றது. அதாவது, பொது மக்கள், பெருந்திரளாக, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கூடியது. அந்த செயலின் மூலம், சமூகத்தில் இன்னும் பொறுப்புணர்வு உள்ள மக்கள் வாழ்கின்றார்கள் என்ற உண்மையை உணரமுடிகின்றது.
நாகப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் கொண்டு வரப்பட்ட பெட்டி....
இதுபோன்ற நிகழ்வு, வளர்ந்த மேலை நாடுகளில், அதாவது அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் நடைபெறுவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள், வளரவே இல்லாத நாடுகளான ஆப்கானிஸ்தான், இராக் போன்ற இடங்களிலும் நடைபெறுவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள், அழிவில் இருந்து மீளாத நாடுகளான இலங்கையிலும் நடைபெறுவதில்லை. ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் இலங்கையில், மனித உயிர்கள் அழிக்கப்படுகின்றன; ஆனால், நம்ம ஊர் நாகப்பட்டிணம் பேருந்து காட்சிகள் போல், உலகில் மற்ற எந்த பகுதிகளிலும் நடைபெறுவதில்லை.
ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் இலங்கையில் நடைபெறும் மனித உயிர் அழிப்பு - அப்பழுக்கற்ற மெய்யான அழிவு செயல்; அங்கு எந்தவித போலித்தனமும் இல்லை; போலித்தனம் இல்லாத காரணத்தினால், அபாயமான சூழ்நிலையை மக்கள் உணர்ந்து நடந்து கொள்ள முடிகின்றது. நம்ம ஊரில் அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிப்படைக் காரணம் - போலித்தனம்.
குடும்பத்தின் அன்றாடப் பிரச்சனைகளை எதிர்கொண்டு, இரண்டு குழந்தைகளை, ஆரோக்கியமாக வளர்க்க வேண்டிய பொறுப்பு; அதைத்தவிர கல்வி, ஹோம் வோர்க்; என்று வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் மனைவியிடம், கணவன் காட்டும் அன்பில், போலித்தனம் மிகுந்து காணப்படுகின்றது; கணவன், மனைவிடம் மட்டும் தன்னோட போலித்தனத்தை காட்டவில்லை; தான் ஈன்றெடுத்த பிள்ளைகளிடமும், போலித்தனத்துடன் நடந்து கொள்கின்றான். மனைவிக்கு, போலியான கணவன்; ஈன்றெடுத்த மகவுகளுக்கு, போலியான தந்தை.
தொழில் புரியும் இடத்தில், வேறு பெண்களுடன் உறவு; அங்கேயாவது உண்மை இருக்கின்றதா; உறவு காதலுக்கா அல்லது இலவச செக்ஸுக்கா; எதுவுமே இலவசமாக வருவதில்லை; கட்டாயம் கல்யாணம் பண்ணு என்று கட்டாயப்படுத்தும்போதே, அங்கே காதல் அழிந்து விடுகின்றது.
பெண்மையின் தாய்மையை பெருமைப்படுத்திய கலாசாரம், நம் முன்னோர்கள் உருவாக்கிய கலாசாரம். அன்னை, தாய், அம்மா, மாதா என்று தெய்வத்துக்கு இணையாக பெண் கருதப்பட்டாள். மீனாட்சி, காமாட்சி, விஷாலாட்சி, காளியாத்தா என்று வழிபட்டார்கள். கருவுக்கு உயிர் கொடுத்து, பத்து மாதம் சுமந்து, மனித உயிர்களை உலகுக்கு கொண்டு வருபவள் பெண். அப்படிப்பட்ட பெண், இன்று சர்வசாதரணமாக, மனித உயிரைப் பறிக்கின்றாள்.
பூவரசி என்ற பெண், அந்த சிறுவனின் உயிரைப் பறிக்கக்கூடும் என்று யாராலும் எண்ணிப்பார்த்து, முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருக்கவே முடியாது. அதுதான் போலித்தனத்தினால் உருவாகிவரும் அபாயமான சூழ்நிலை. ஒரு பெண்ணிடம், தன் குழந்தையை ஒப்படைக்க, தாய்மார்கள் இனி தயங்குவார்கள். புலியின் குகையில் தன் குழந்தையை விடுவதும், ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பதும் ஒன்றே என்ற நிலை உருவாகி இருக்கின்றது.
இதுதான் இன்றைய தமிழகம்; இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் பற்றி அறியவில்லை; ஆனால், தமிழகத்தில், போலித்தனம் மிகுந்து கிடக்கின்றது. இந்த நிலை, அபாயகரமான ஆப்கானிஸ்தான், இராக், மற்றும் இலங்கையில் இல்லை. ஒருவகையில் பார்த்தால், அந்த நாடுகளைவிட, தமிழகத்தில், இந்த போலித்தனத்தினால், கலாசாரம் சீரழிந்து கிடக்கின்றது.
போலித்தனம் என்பது என்னவென்றால், அகமும், புறமும் வேறுபட்டு இருக்கும் நிலை. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும், தருமர், ஹரிச்சந்திரன், இராமர், காந்தி, அண்ணாதுரை போல் வாழவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. துரியோதனன், இராவணன், கோட்சே, கூனி, சகுனி என்று தீயவர்களும் எல்லா காலகட்டங்களிலும் வாழ்ந்திருக்கின்றார்கள். நல்லவர்களின் அகத்தில் நல்லெண்ணங்கள் உருவாகும்; நல்லவர்கள் புறத்தில் ஆற்றும் செயலும் நற்செயல்களாகவே அமையும். அதுபோல், தீயவர்களின் அகத்தில் தீய எண்ணங்கள் உருவாகும்; தீயவர்கள் புறத்தில் ஆற்றும் செயலும் தீமை பயப்பதாகவே அமையும். ஆக, நல்லவர்களும், தீயவர்களும் சமூகத்தின் அங்கமாக இருப்பது, இயற்கையான விசயம். S.V.ரெங்காராவ், சகஸ்ரநாமம், சுப்பையா, கண்ணாம்பா, N.S.கிருஷ்ணன், மதுரம் என்று அகமும், புறமும் நல்லவர்களும் சமூகத்தின் அங்கமாக திகழ்ந்தார்கள்; அதே சமூகத்தில், P.S.வீரப்பா, நம்பியார், அசோகன், M.R.ராதா என்று அகமும், புறமும் அப்பழுக்கற்ற வில்லன்களும் அங்கம் வகித்தார்கள். அந்தமாதிரியான சமூகம், இயற்கையான ஒன்று; போலித்தனம் இல்லாதது.
இன்றைய சூழ்நிலை அப்படியில்லை. நாம் கண்ணெதிரே பார்க்கின்ற மனிதர், S.V.ரெங்காராவா அல்லது M.R.ராதாவா தெரியவில்லை; என்னதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும், என்னதான் ஞானக்கண்ணோடு நோக்கினாலும், அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்று அறியவே முடிவதில்லை. அவர்கள் ஆற்றும் செயலின் மூலம் ஏற்படும் விளைவின் மூலமே, அந்த மனிதரது எண்ணத்தை உணரமுடிகின்றது.
இந்த பூவரசி என்ற பெண், இப்படி கொடூரமான காரியத்தை நிறைவேற்றுவாள் என்று யாராலும் அறிய முடியாத நிலையே, போலித்தனம் ஆகும்; நடந்து முடிந்த விளைவின் மூலம், போலித்தனத்தினால் ஏற்படும் பாதிப்பை இன்றைய சமூகம் உணரவேண்டும். அகம் வேறு; புறம் வேறு; அதுவே போலித்தனம்.
அகம், புறம் எப்படி வேறுபட்டு இருக்கும். அகத்தில் உருவாகும் எண்ணத்தை புறத்தில் வெளிப்படுத்துவது - சத்தியமான செயலாகும். அதாவது, மனிதன் உண்மையை கடைப்பிடிக்கும்போது, அகமும், புறமும் ஒரே நிலையை அடையும். உண்மையை மறைக்கும்போது, அகமும், புறமு வேறுபட்டுப் போகும்; பொய் பேசுவதும், உண்மையை மறைப்பதும் ஒன்றே; ஆக, அந்த மாதிரியான செயல், மனிதனை, போலியான மனிதனாக மாற்றி விடுகின்றது. போலியான மனிதன், எந்திரன் ஆவான்.
ஆக, இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய சவால், போலித்தனம் மலிந்து கிடப்பது. இந்த நிலை, கலாசார சீரழிவினால் ஏற்பட்டது.
ஆக, இந்த பூவரசி பிரச்சனை - இந்த கட்சி, அந்த கட்சி என்ற அரசியல் பிரச்சனை அல்ல; விலைவாசி உயர்வு, பங்கு மார்க்கெட் சரிவு என்ற பொருளாதார பிரச்சனையும் அல்ல; உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற சமூகப் பிரச்சனையும் அல்ல; இந்தியா, பாகிஸ்தான் என்ற நாடுகளின் பிரச்சனையும் அல்ல; இந்த பூவரசி பிரச்சனை, முழுக்க முழுக்க கலாசார சீரழிவினால் ஏற்பட்ட பிரச்சனை.
கலாசார சீரழிவு என்றால், கல்யாணத்துக்கு முன் செக்ஸ் அல்லது கல்யாணத்துக்குப் பின் செக்ஸ் என்பது அல்ல; கல்யாணம் மட்டுமே கலாசாரம் அல்ல; கலாசாரம் என்பது, மனிதனின் அகத்தை தூய்மைபடுத்தும் விஷயம். போலித்தனம் இல்லாது வாய்மையைக் கடைப்பிடிக்கும் செயல். நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழும் வாழ்க்கைமுறையினை மனிதனுக்கு வகுத்தளிப்பது, கலாசாரம்.
கல்யாணத்துக்குப் பின் பிற பெண்களுடன் உறவு, சிலப்பதிகாரத்தில் இருக்கின்றது. சிலப்பதிகாரத்தில், கண்ணகி, கோவலன், மாதவி, பாண்டிய மன்னன் - எந்த போலித்தனமும் கிடையாது. கோவலன் பிள்ளையை, மாதவியிடம் நம்பிக் கொடுத்து விட்டுப் போகலாம். அவள், தான் ஈன்றெடுத்த மகவைப்போல் தாய்மையைக் காட்டி கவனித்திருப்பாள்.
இந்த பூவரசி செய்த செயல், எந்த காவியத்திலும் இதுவரை வந்ததில்லை; ஏன், நம்ம சின்னத்திரை நெடுதொடரிலும், இத்தகைய கொடூரம் கற்பனையிலும் உதிக்கவில்லை.
ஆக, போலித்தனம் இல்லாத சமூகத்தை எங்ஙனம் உருவாக்குவது. அதுதான் இன்றைய காலத்தின் மாபெரும் சவால். வீடுகளில், பள்ளிகளில், இலக்கியங்களில், பொது வாழ்வில் என்று அனைத்து இடங்களிலும், அதாவது அனைவரும் போலித்தனத்தினைக் கைவிட்டு, சத்தியத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்தால், போலித்தனம் சமூகத்தில் இருந்து, படிப்படியாக விட்டு விலகும்.
போலித்தனம் இல்லாத சமூகத்தில் பெரும்பாலானோர் மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியாகவும், நேருவாகவும், பட்டேல் ஆகவும், சரோஜினி அம்மையாராகவும் நல்லொழுக்கத்துடன் நேர்மையாக வாழ்வார்கள்; ஓரிரு கோட்ஸேக்கள் தவிர்க்க முடியாது. ஆனால், நல்லவர்கள் தெளிவாகத் தெரிவார்கள்; அதுபோல், தீயவர்களையும் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
போலித்தனம் மிகுந்து கிடக்கும் சமூகத்தில், நல்லவர் யாரு, தீயவர் யார் என்று அறிய இயலாத நிலையில், அனைவரையும் கண்டு அனைவரும் பயந்து வாழும் சூழல் உருவாகிவிடும். அது மிகவு ஆபத்தான சமூகமாகிவிடும்.