இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
  • Tamilnadu Congress MLA

    இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்; அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்.

    பழனிவேல்ராஜனைப் பற்றி, இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேளுங்கள்; பெயரை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதென்பார்கள். மதுரை மக்களிடம் கேட்டீர்கள் என்றால், யாரு அவரு என்று எதிர்கேள்வி கேட்பார்கள். இன்னும் சில வாரங்களில், சுதர்ஸனத்தை மக்கள் மறந்து விடுவார்கள்.

    இதுதாங்க இன்றைய காலத்து உண்மை; நாற்பது ஆண்டுகள், பொது வாழ்வில் ஈடுபட்டு இருந்தவரின் முடிவு இதுதான்; தன் வாழ்நாள் முழுவதும், தான் சார்ந்திருந்த கட்சிக்கும், அதன் தலைவருக்கும் தனது வாழ்க்கையை அர்பணித்த தொண்டர், சுதர்ஸனம். தேசிய கட்சிக்காக வாழ்க்கையை அர்பணிப்பவர்கள், சுதர்ஸனம் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, டெல்லியில் இருந்து அன்னை சோனியா வருவாங்க என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள். டெல்லியில் இருக்கும் தலைவர்களுக்கு, இந்தியா முழுவதும் தொண்டர்கள். ஒவ்வொரு தொண்டனுக்கும், டெல்லியில் உள்ள தலைவர்களால் நேரடியாக சென்று இறுதி மரியாதை செலுத்த இயலாது. ஆக, உண்மையை உணர்ந்து, அதற்கேற்ற அளவுக்கு உங்களது வாழ்க்கையை உங்களது தலைவர்களுக்காக அர்பணியுங்கள்; முழுவதுமாக அர்பணித்து விடாதீர்கள்.

    ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறோம்; மேனேஜர் உத்தரவு இடுகிறார்; செய்கின்ற வேலைக்கு தகுந்த ஊதியம் கொடுக்கின்றார்கள். அவ்வளவுதான் உறவு, நமக்கும் அந்த மேனேஜருக்கும். அன்னை; ஆத்தா; அப்பத்தாவென்று வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள். உங்களது அன்பு, அவர்களுக்கு தேவையுமில்லை; உங்களது அன்பைப்பெற, அவர்களுக்கு தகுதியுமில்லை. ஆக, கொடுக்கின்ற காசுக்கேத்த வேலையை செய்து கொடுங்கள்; வாழ்க்கையை முழுவதுமாக வீணாக்காதீர்கள்.

    சரி, தேசிய கட்சியில்தான் இந்த பிரச்சனை; மாநில கட்சியில் மரியாதை எப்படி? அதையும் பார்த்து விடலாம். நெருப்பு என்று சொன்னால், வாய் சுடுவதில்லை. சுதர்ஸனத்துக்கு வந்த மாரடைப்பு, மாநில கட்சிக்காரங்களுக்கு வந்திருந்தால், நிலைமை எப்படி என்று பார்க்கலாம். சாதரண வட்டம், மாவட்டத்துக்கு மாரடைப்பு வந்திருந்தால், செய்தி வெளியே வந்திருக்காது; ஆற்காடு வீராசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், என்ன முடிவெடுத்திருந்திருப்பார்கள்; தெரியாது. அன்பழகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், ஒரு வேளை மாநாடு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்திருக்கலாம். நிச்சயம், சுதர்ஸனத்தைவிட, ஒரு படி மேலே சென்று மரியாதை செலுத்தி இருந்திருப்பார்கள். ஆக, மாநிலக் கட்சியில் சேர்ந்து தொண்டாற்றுங்கள்; தேசிய கட்சியைவிட அதிகம் மரியாதை கிடைக்கும். ஆனால், உங்க சாவுக்கு, மாநாட்டையே ரத்துசெய்து விடுவார்கள் என்று மட்டும் கனவு கோட்டையைக் கட்டி விடாதீர்கள்.

    தெரியவில்லை; எது நாகரீகம்; எது பண்பாடு; எது சரி; எது தவறு; தமிழர் கலாசாரம் எதுவென்று தெரியவில்லை. ஆனால், நாம் பார்த்து, வளர்ந்த மதுரையில், ஒரு வீட்டில் கல்யாணம் என்றால், ரோட்டு முழுக்க கல்யாணப் பந்தல், ஒரு வாரத்துக்கு முன்னமே போட்டு விடுவார்கள். அந்த தெருவில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சமைத்து சாப்பிடுவார்கள். கல்யாண வீட்டுக்கு வந்த உறவுகள், சொந்தங்கள், அந்த தெருவில் உள்ள மற்றவர்களின் வீடுகளில் தங்குவார்கள். எதிர்பாராதவிதமாக, அந்த தெருவில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறக்க நேரிட்டால், கல்யாணத்தை ஒத்திவைத்துவிட்டு, அனைவரும் துக்கத்தில் பங்கு கொள்வார்கள். அதுதான், மதுரையிலே நாங்க பார்த்து வளர்ந்த கலாசாரம்.

    சரி, அது அந்தக்காலம்; இன்றைய காலகட்டத்தில், இப்படி எதிர்பாராதவிதமாக விபரீதம் ஏற்பட்டால், மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தேடிப்பார்த்தால் - ஏ.ஆர்.ரஹுமான். அவன் மனிதன்; பணம், புகழ் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல், நிகழ்ச்சி ரத்து; அவன் மனிதன். இத்தனைக்கும் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை; ஆனாலும் நிகழ்ச்சி ரத்து. இன்றைய காலகட்டத்தில், அவன் மனிதர்களில் மாணிக்கம்; அமெரிக்காவில், ஒரு ஊரில் நடந்த நிகழ்ச்சியில் விபத்து நடந்து விட்டது. உயிரிழப்பு ஒன்றும் ஏற்படவில்லை; ஆனாலும், ரஹுமான், அமெரிக்காவில், பல்வேறு நகரங்களில், நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டார். ஏனென்றால், ரஹுமானுக்கு பணத்தைவிட, புகழைவிட, செல்வாக்கைவிட, மனித வாழ்வின் மதிப்பு உயர்வானது என்ற உண்மை தெரிந்திருக்கின்றது.

    சோதனைகளும், சவால்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை; சோதனைகளும், சவால்களும் புதியவைகளாகவே இருக்கும். முதன் முதலில், சுணாமி வந்தது, நமக்கு புதியது; சவாலானது. மீண்டும் மீண்டும் வருவது சவாலாக இருக்க முடியாது. ஆக, சோதனைகளும், சவால்களும் எப்பொழுதும் புதியவைகளாகவே இருக்கும். சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளவே, தலைவன் தேவை. வழக்கமான பணிகளை நிறைவேற்ற தலைவன் தேவையேயில்லை. ஆக, தலைவன் என்பவன், சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவனாக இருக்க வேண்டும். சவால்கள் எல்லாம் புதிது என்பதால், பழைய அல்லது ஏற்கனவே அறிந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது. புதிய சவால்களை எதிர்கொண்டு, புதிய வழிமுறையைக் கடைப்பிடித்து, செயல்படுத்துவதே, தலைவனின் தனிச்சிறப்பு.

    புதிய வழிமுறையை எப்படி அறிந்து கொள்வது. பல மாதங்களாக, பல் வேறு அரசு துறைகள் செயல்பட்டு, ஏற்பாடு செய்த மாநாடு. இப்படி எதிர்பாராதவிதமாக, சட்டப்பேரவை உறுப்பினர் மரணம்; அதுவும், அந்தக் கட்சியின் பேரவைத்தலைவர்; அவர்களது ஆதரவில்தான், இத்தனை ஆண்டுகள் ஆட்சியே நடக்குது; இப்ப என்ன செய்வது என்ற கேள்வி எழும்போது, சரியான வழிமுறையை அறிந்து கொள்வது எளிதல்ல. சுணாமி வந்தபொழுது, பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில், தலைவனோ, தலைவியோ, தன்னை உயிரிழந்தவர்களின் இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்; சொந்தங்களை இழந்து தவிப்பவர்களின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது, சரியான வழிமுறை புலப்படும். இந்த தருணத்தில், தலைவன் தன்னை, சுதர்ஸனம் இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்; தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், என்ன முடிவு எடுக்கப்படும் என்று ஆராயவேண்டும். சுதர்ஸனத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தாரின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும்.

    சுதர்ஸனம் இடத்திலும், அவரை இழந்து தவிப்பவர்களின் இடத்திலும், தலைவன் தன்னை வைத்துப் பார்த்து எடுக்கும் முடிவும், அதன் பிறகு அவன் கடைப்பிடிக்கும் வழிமுறையும் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட உண்மையான தலைவன், மாநாட்டையே அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கலாம்; அல்லது, வெளி நாடுகளில் இருந்து வந்த அறிஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளூர் ஆட்களின் கூத்து, கும்மாளம், பட்டிமன்றத்தை ரத்து செய்திருக்கலாம்; குறைந்தபட்சம், அடக்கி வாசிச்சிருக்கலாம். சில தலைவர்கள், துக்கத்தை தாங்கள் தாங்கிக் கொண்டு, தாங்கள் முக்கியமான உரைகளில் பங்கேற்று, மற்ற கேளிக்கை நிகழ்சிகளை தவிர்த்திருக்கலாம்.

    பட்டிமன்றம். அதனை ரசிக்க நேரம் காலம் இல்லையா? எப்படி; எப்படி, பட்டிமன்றத்தை, இந்த தருணத்தில் ரசிக்க முடிகின்றது; வீட்டிலே இழவு; பொணத்தை, சுடுகாட்டுக்கு இன்னும் எடுத்து செல்லவில்லை; உங்களாலே, எப்படி பட்டிமன்றத்தை ரசித்து கேட்க முடிகின்றது. மிகவும், கேவலமான, அருவருப்பான, இழிவான செயல். இத்தகைய சூழ்நிலையில், இத்தகைய தருணத்தில், லியோனியின் பேச்சை ரசித்துக் கேட்பது, தரம் தாழ்ந்த இழிவான செயல்.