வந்திருந்த வெளிநாட்டு தமிழறிஞர்கள் அனைவரும் அவர்களது நாடுகளுக்கு திரும்பிச் சென்று விட்டனர். அங்கு, அவர்கள் தொடர்ந்து தமிழாராய்ச்சியில் ஈடுபட்டு, நம் முன்னோர்களின் அருமை பெருமைகளை, கலாசாரம், பண்பாட்டினைக் கற்று, அதன் பொருள் அறிந்து, அதன்படி வாழவும் முயற்சி செய்வார்கள்.
இங்கு நம்முடன், ஒரு ஆறுமாதம் தங்கியிருந்து, நாம் வாழும் இன்றைய வாழ்வுமுறை, இன்றைய கலாசாரம், நமது பண்பாடு, இவையனைத்தையும் பார்க்க நேரிட்டால், போதுமடா சாமி, நீங்களும் உங்க கலாசாரமும், உங்க பண்பாடும், உங்க மொழியும், என்று இழிவாக பேசி, காறி உமிழ்ந்துவிட்டுச் சென்று விடுவார்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில், நாம் இன்று வசித்தாலும், நாம் அனைவரும் தேடி, நாடி படிப்பது - தினமணி, தினமலர், தினத்தந்தி, மாலைமலர், விகடன், குமுதம், துக்ளக், மற்றும் பல தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள். இவைகளைத்தவிர, நாம் பார்ப்பது தமிழ் தொலைக்காட்சிகள்; சன் டீவி, ஜெயா டீவி, கலைஞர் டீவி, விஜட் டீவி, பொதிகை மற்றும் பல டீவிக்கள் . இவைகள் அனைத்தும் குட்டைகள்; இவைகள் அனைத்தும், நாம் இன்றைய காலகட்டத்தில் ஊறுகின்ற குட்டைகள். இந்த குட்டைகளில் ஊறிக்கொண்டு இருக்கும் நாம், எங்ஙனம் தெளிவான சிந்தனையைப் பெறமுடியும்.
வந்திருந்த வெளிநாட்டு தமிழறிஞர்கள், நாம் ஊறுகின்ற குட்டைகளுக்கு வருவதேயில்லை; இந்தமாதிரி குட்டைகள் இருக்கிறதென்றுகூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி குட்டைகளின் அருகில் வரநேரிட்டாலும், வீசும் துர்நாற்றத்தைக்கண்டு விலகி, ஓடிப்போய் விடுவார்கள். நாம் இந்த குட்டைகளின் மத்தியிலேயே வாழ்வதால், வீசும் துர்நாற்றத்தை அறியமுடிவதில்லை.
தினம்தோறும் நமது நாளிதழ்களில் வெளிவரும் அறிக்கைகள், பேட்டிகள்; அதைத்தவிர இன்றைய காலகட்டத்தில் வெளிவரும் செய்திகள். அத்தனையும் நமது இன்றைய வாழ்வுமுறை, கலாசாரம், பண்பாடு என்று அனைத்தையும் பிரதிபலிக்கின்றது. பூவிருந்தமல்லியில் இடைத்தேர்தல் உண்டா இல்லையா என்ற கேள்வி; திருவண்ணாமலையில் சிறுவன் நகைக்காக, தனக்கு சாப்பாடு போட்ட வயதான அம்மாவைக் கொலை; போரூரில், தனக்கு சாப்பாடு போட்டு, தன்னை கவனித்து வந்த அத்தையைக் கொலை; எண்பது வயதான தந்தை, அறுபது வயதான தனது மகன், தன்னைக் கவனிப்பதில்லை என்று காவல் நிலையத்தில் புகார்; அதையும்விட கொடுமையிலும் கொடுமை - தாய்மார்கள், குழந்தைகளை கடத்தல்; இதைத்தவிர, அனைத்து துறைகளிலும், போலித்தனம்; ஏமாற்று வேலை; மோசடி.
ஆக, நாம் இன்றைக்கு உருவாக்கி இருக்கின்ற சமூகம் - யாரும் யாரையும் நம்பாதே; அனைவரும் ஏமாற்று பேர்வழிகள். நம் முன்னோர்கள் உருவாக்கிய சமூகம் மற்றும் சமுதாயம் - நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. இன்று நாம் அமைத்துக் கொண்டிருப்பது, அனைவரும் அயோக்கியர்கள்; ஒழுக்கம் கெட்டவர்கள். ஆக, ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக எப்பொழுதும் இருங்கள்; யாரையும் நம்பி மோசம்போய் விடாதீர்கள்.
கல்விசாலை, மருத்துவமணை, ஆலயம் என்று ஒரு இடம் விடாமல், அனைத்து இடங்களிலும், ஒழுக்கம் சீர்கெட்டு இருக்கின்ற நிலைமை இன்று. தனிமனிதன் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு வெட்கப்படுவதில்லை; ஒட்டுமொத்த சமூகமே ஒழுக்கம் சீர்கெட்டு இருக்கும்போது, தான் ஒருவன்மட்டும் ஒழுக்கத்தை கடைப்பிடித்து ஏன் வாழவேண்டும் என்று அனைவரும் ஒழுக்கம் கெட்டு வாழ்கின்றனர்.
ஆக, இன்றைய சமூக சீர்கேட்டை அனைவரும் அறிய வேண்டும்; உணர வேண்டும். அந்த உணர்வுதான், சீர்திருத்தத்துக்கு வழி வகுக்கும். தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் உணரவேண்டும், தங்களின் இன்றைய நிலையை. பத்திரிக்கைகள் சுயசோதணையை மேற்கொள்ள வேண்டும். அந்த சுயசோதணையில், பத்திரிக்கைகள் அறிந்து கொள்வார்கள்; தாங்கள் குட்டைகளா அல்லது தெளிந்த நீரோடைகளா. குட்டைகள் என்று அறிந்தபிறகு, எங்ஙனம் தெளிந்த நீரோடையாக மாறுவது என்ற வழியைத் தேடும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
ஆக, இன்றைய காலகட்டத்தில், நாம் அனைவரும் ஊறுகின்ற தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும், துர்நாற்றம் வீசும் குட்டைகளே; தமிழ் பத்திரிக்கைகள், தெளிந்த நீரோடைகளாக மாற்றம் அடையும்போது, நாம் அனைவரும் புத்துணர்வு அடைவோம். தெளிந்த நீரோடையில் நீராடும்போது, நாம் அனைவரும் சுகம் அடைவோம். தென்றல் வீசத் தொடங்கும். மக்கள் அனைவரும், அகத்தூய்மை, மற்றும் புறத்தூய்மை அடைவார்கள்.