நம்மைச் சுற்றி, அன்றாடம் நிறைய புதிய, புதுமையான விசயங்கள், நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. நாம்தான் அவைகளை கண்டு ரசிப்பதில்லை. புதுமையாகவும், உண்மையாகவும், நம்மைச் சுற்றி நடக்கின்றன. அந்த நிகழ்வுகளின் மெய்ப்பொருளை அறிந்து, உணர்வு பூர்வமாக பங்கேற்று வாழ்வதுதான் வாழ்க்கை. இந்த படங்கள், மாலை மலர் மற்றும் தின மலர் பத்திரிக்கைகளில் வெளியானவைகள். சமுதாயப் பொறுப்புணர்வுடன் செயலாற்றும் பத்திரிக்கைகளுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்வோம். பத்திரிக்கைகளின் இந்த செயலின்மூலம், புதுப் புனல் உருவாகி, சமுதாயத்தில் தேங்கிக் கிடந்து துர்நாற்றம் அடிக்கும் சாக்கடையை வெளியேற்றிவிடும். சமுதாயம் தெளிந்த நீரோடையாகும்; நீரோடையின் கரைகளில், மலர்கள் பூத்துக் குலுங்கும்; மலர்களின் நறுமணத்துடன் தென்றல் வீசும்.
பள்ளிகளில், ஆசிரியர்களும், மாணவர்களும், தினம் தோறும், ஒரு பத்து நிமிடங்கள், இந்த படங்களை வகுப்பறையில் வைத்துக் கொண்டு கருத்துப் பரிமாற்றம் கொள்ள வேண்டும். இந்த செய்திகளைப் பொறுத்தவரை, ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் புதிய செய்திகள்; ஆக, அந்த சூழ்நிலையில் இருவரும் இணைந்து, அதாவது, ஆசிரியரும் மாணவர்களும் இணைந்து கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகும்; இணைந்து கற்றுக் கொள்ளும்போது, உறவுகள் பலப்படும்; ஆசிரியர், மாணவர்கள் உறவு பலப்படும்; உறவு பலப்படும்போது, பயம் விலகும்; பயம் விலகும்போது, அந்த பள்ளியில், ஆரோக்கியமான சூழல் உருவாகும்; ஆரோக்கியமான சூழலில், பயம் இல்லாமல் கருத்து பரிமாற்றம் அரங்கேறும்; பயமில்லாமல் கருத்து பரிமாற்றம் செய்யக்கூடிய சூழலே, சமுதாயத்தின் இன்றைய தேவை.
வீடுகளிலும் சரி; வேலை பார்க்கும் இடத்திலும் சரி; நாட்டிலும் சரி; சட்ட சபைகள் மற்றும் பார்லிமெண்ட்களிலும் சரி, பயமில்லாமல், அடிமைத்தனமில்லாமல், கருத்து பரிமாற்றம் நடைபெறுவதில்லை. வீடுகளில் பெற்றோர்களும், பிள்ளைகளும் இணைந்து கற்றுக் கொள்ளும் சூழல் உருவாக வேண்டும். பெரும்பாலும் பெற்றோர்கள், பழைய பஞ்சாங்களாக, தங்களுக்கு தெரிந்தவற்றை பிள்ளிகளிடம் திணிக்கும் செயலில் ஈடுபடுகின்றார்கள். இந்த மாதிரியான புதுமையான படங்களை பத்திரிக்கைகள் வெளியிடுவதன்மூலம், பெற்றோர்களும் பிள்ளைகளும் இணைந்து, தங்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இந்த படங்கள் பெற்றோர்களுக்கும் புதியவனவாக இருக்கும்.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கண்டு, அதன் மெய்ப்பொருள் காண்பதுதான் வாழ்க்கை; அவைகளைக் கண்டு கொள்ளாமல், நமக்கும் நம்மைச் சுற்றி அரங்கேறும் நிகழ்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்று கண்டு கொள்ளாமல் ஒதுங்கி வாழ முயல்வது, மடமையாகும்; பொறுப்புணர்வு இல்லாத செயலும் ஆகும். நம்மைச் சுற்றி நடப்பவைகளை, நாம் கண்டு கொள்ள முடியாமல், போலித்தனம் சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றது. அந்த போலித்தனம், ஒரு திரைபோல் நமது கண்களை மூடிக்கிடக்கின்றது. அந்த போலித்திரையை விலக்கி, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின், மெய்ப்பொருளைக் காண்பதே வாழ்க்கை. ஆனால், இன்றைய சமுதாயத்தில், போலித்தனம் கண்களை மறைத்திருப்பதால், மனிதர்கள் கண்கள் இருந்தும் குருடர்களாக வலம் வருகின்றனர்.
அகத்தி கீரை - அகத்தி கீரைக் கட்டை, இப்படி தலையில் தொப்பியாக உபயோகப்படுத்த நினைத்து; அதனை செயல்படுத்தவும் செய்திருக்கின்றாரே இந்த மனிதர் - இவர் வாழும் மனிதர்; இதுதான் புதுமை; இதுதான் சமயோசித புத்தி; இந்த செயல்தான் - மெய்ப்பொருள் காணும் செயல். மெய்ப்பொருள் காண்பது அறிவு; அறிவு என்பது சேகரித்து வைக்கும் பொருள் அல்ல; அறிவு என்பது செயல்; It is an action. இந்த மனிதர் போலித்தனம் ஏதுவும் இல்லாத மனிதராகத்தான் இருப்பார்; இந்த சூழ்நிலையில் இவர் யாருக்கும் அடிமையில்லை; சுதந்திரமாக, சுயமாக சிந்திக்கும் திறனை செயல்படுத்தி இருக்கின்றார்; உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது என்று ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு வாழ்க்கையை வாழாமல் வீணடிக்கவில்லை, இந்த மனிதர்; வெயிலைப் பார்க்கின்றார்; சாமான்களைக் கொண்டு சேர்க்கும் வேலையை எண்ணிப் பார்க்கின்றார்; மார்க்கெட்டில் இருந்த அகத்தி கீரையையும் பார்க்கின்றார்; அனைத்தையும் தெளிவாகப் பார்த்தாலே, மெய்ப்பொருள் விளங்கிவிடும்; மெய்ப் பொருளைக் கண்டு, செயலில் ஈடுபட்டு, இலக்கையையும் பத்திரமாக அடைந்து விட்டார். அகத்தி கீரைக் கட்டுதான் சிறந்த வழி, அவரது சூழ்நிலைக்கு. இதுதான் புதுமை; சாமான்களை இலக்கில் கொண்டு சேர்த்தவுடன், மனதில் ஏற்படும் ஒரு திருப்தி - அது இமயமலையின் உச்சியில் ஏறியதுபோல் இருக்கும். இந்த வெயிலில், அதுவும் சைக்கிள் ஓட்டுவதில், உடலில் உள்ள கழிவு வேர்வையாக வெளியேறி விடுகிறது; இவரெல்லாம் காசு கொடுத்து ஜிம்முக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை; செய்யும் செயலே, உடல் உழைப்பே - உடற்பயிற்சியாகி, உடல் ஆரோக்கியமாகிறது. இலவசம் தேடி, பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபடவில்லை; போலித்தனமாக மருந்து, காலாவதியான பொருட்கள் என்று சமுதாயத்தில் சீர்கேட்டை ஏற்படுத்தவில்லை. “உன் வாழ்க்கை, உன் கையில்,” என்ற உண்மையான தத்துவத்தின் அடிப்படையில், வாழும் மனிதர் இவர்.
புதுமை எங்கே, எப்படி உருவாகும் என்று வரையறுக்க முடியாது. பஞ்சாப் மாநிலத்தில், கிராமங்களில் நிறைய வாஷிங் மெஷின் விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது. அந்த வாஷிங் மெஷின் உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு ஒண்ணும் விளங்கவில்லை; கிராமங்களில் எதுக்கு மக்கள் மெஷின் வாங்குகிறார்கள்; அவர்கள் துணிகளை ஆற்றின் கரையில் அமர்ந்து கொண்டு துவைப்பதுதானே வழக்கம்; ஆக, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் கிராமத்துக்கு நேரடியாக சென்று மெய்ப்பொருளைக் காண விழைந்தார்கள். கிராமத்துக்கு சென்றபிறகுதான் அவர்களுக்கு உண்மை விளங்கியது. கிராமத்து மக்கள், பாலைத் தயிராக்கி, தயிரிலிருந்து லஸ்ஸி கைடைந்தெடுக்க, வாஷிங் மெஷினை உபயோகப்படுத்துகிறார்கள். ஆக, எங்கும் புதுமை; எதிலும் புதுமை; புதுமையே வாழ்க்கையை இனிமையாக்கும்.
“When wealth is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost, everything is lost”. அனைத்து மொழிகளிலும், அனைத்து கலாசாரத்திலும், அனைத்து நாகரீகத்திலும், முன்னிலைப்படுத்தப்படுவது: நல்லொழுக்கம்; நன்னடத்தை; அதன் பிறகு, உடல் ஆரோக்கியம்; நோயற்ற வாழ்வு; இறுதியாக பொருட் செல்வம். ஆனால், இன்றைய காலகட்டத்தில், நல்லொழுக்கம் முழுவதுமாக ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்டது; உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்காமல், பொருட் செல்வம் ஈட்டுவதில் மக்கள் அனைவரும் தங்களது வாழ்வை வீண் செய்கின்றனர்.
ஒழுக்கம் கெட்டு வாழ்வதுதான் இன்றைய நடைமுறை வழக்கமாக மாறிவிட்டது. சமீபத்தில், கிரிக்கெட் ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டு, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சசி தரூர், பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். “I am new to Indian Politics,” Sasi Tharur didn't say, “I am new to Indian Truth.” சசி தரூர், தான் இப்படி சில்லரைத்தனமாக ஊழல் புரிந்துவிட்டோமே என்று வருத்தப்படவில்லை; அவர் வருத்தமெல்லாம், மாட்டிக் கொண்டு விட்டோமே என்பதுதான். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பெரிய அளவில் ஊழல் புரிகின்றார்கள்; ஆனால் மாட்டிக் கொள்ளாமல், சமர்த்தியமாக, சாதுர்யமாக காரியத்தை நிறைவேற்றுகிறார்கள். அந்த சாதுர்யம், சாமர்த்தியம், திறமை, political skill தனக்கு இல்லையே என்றுதான் வருத்தமடைந்தார்; தற்பொழுது அந்த அரசியல் திறமையை வளர்த்துக் கொள்வதில் பயிற்சி பெற்று வருகிறார்.
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள்மீது ஊழல் குற்றம் சாற்றப்படும்போது, நாம் எதிர்பார்ப்பது - அமைச்சர் பதவி ராஜினாமா. ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை. நமது அளவுகோளின்படி, ஒழுக்கம் கெட்டவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர்வதில் நாட்டின் நல்லொழுக்கம் குறைந்து விடுவதில்லை. இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு எல்லாம், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர், எப்படி அந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு சமாளிக்கின்றார்; எத்தனை காலம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் சமாளிக்கின்றார்; விசாரணை கமிஷனை எவ்விதம் எதிர்கொள்கிறார். மக்களுக்கு, பத்திரிக்கைகளுக்கு இன்றைய தேவை - கேலிக்கூத்து, கேளிக்கை; அவைகளை, அன்றாடம் அரசியல்வாதிகள் அரங்கேற்றி வருகின்றனர்; மக்களும் அந்த போதை ஊட்டும் செய்திகளை, காசு கொடுத்து வாசித்து திளைத்திருக்கின்றனர்.
வீட்டிலோ, அலுவலகத்திலோ, அல்லது பொது வாழ்விலோ, ஒரு மனிதன் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ முற்பட்டால், நாம் அவனுக்கு வழங்கும் பெயர் - பொழைக்கத் தெரியாதவன். ஆக, அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. மக்களின், பத்திரிக்கைகளின் எதிர்பார்ப்பை, அரசியல்வாதிகள் பூர்த்தி செய்கின்றார்கள். ஆக, நல்லொழுக்கத்தை நாம் அனைவரும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், அரசியல்வாதிகளும் கடைப்பிடிக்க ஆரம்பிப்பார்கள். ஒழுக்கம் கெட்ட செயலில் ஈடுபட்டால், சமுதாயம் ஒதுக்கி விடும் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தால், அவர்கள் நிச்சயம் ஒழுக்கம் கெட்ட செயலில் ஈடுபடமாட்டார்கள்.
ஆக, நல்லொழுக்கம், நன்னடத்தை இன்றைய சமுதாயத்தில் முற்றிலுமாக இல்லையென்ற நிலையாகி விட்டது; அடுத்து உடல் ஆரோக்கியம். சமீபத்தில், உலக பணக்காரர்களை வரிசைப்படுத்தினார்கள்; அதுபோல், உடல் ஆரோக்கியம்கொண்ட மனிதர்களை வரிசைப்படுத்தினால், இங்கு கல்லைத் தூக்கிக் கொண்டு, நிலையாக நிற்கின்றாரே, இந்த மனிதர், நிச்சயம் இடம் பெறுவார். இவரெல்லாம், காசு கொடுத்து ஜிம்மில் போய் உடற்பயிற்சி செய்யவில்லை; அன்றாட உடல் உழைப்பே, அவருக்கு உடல் வலிமையை ஏற்படுத்தி இருக்கின்றது. உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் வாழ்வதற்கு உதவும் என்பதல்லாமல், வாழும் நாட்களில் எந்தவித வலியும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும். உடல் ஆரோக்கியம் சுவர் போன்றது; சுவர் இருந்தால்தான் சித்திரம்போல் வாழ்க்கையை வாழ முடியும்.
இன்றைய காலகட்டத்தில், மக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்காமல் இழந்து வருகின்றார்கள். உண்மையென்னவென்றால், இன்றைய மக்களால், தங்களது உடல் ஆரோக்கியம் சீர்கெடுகிறது என்ற உண்மையை உணரக்கூட முடிவதில்லை; வலி என்பது, உடல் நமக்கு சொல்லும் அறிகுறி; உடல் நம்மிடம் பேசும் மொழி; வலியை ஏற்படுத்தி, உடல் நம்மை எச்சரிக்கின்றது; கையில் வலி ஏற்பட்டால், அந்த கைக்கு ஓய்வு வேண்டும் என்று அர்த்தம்; மனிதர்கள் அந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் மவுஸ் கையில் வலி ஏற்படுத்துகிறது; அப்பொழுது, சற்று நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அர்த்தம்; ஓய்வெடுக்காமல், வலி நிவாரண மாத்திரையைப் போட்டுக் கொண்டு, வலி நிவாரண மருந்தை தடவிக் கொண்டு; அல்லது கையில் ஒரு கவசம் அணிந்து கொண்டு தொடர்ந்து மவுஸ்ஸில் வேலை செய்வது - மடமையான செயலாகும். இன்றைய அறிவாளிகளால், இந்த சாதரண உண்மையைக்கூட உணரமுடிவதில்லை. அவர்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்துக் கொண்டு, புதுசாக கை வாங்கலாம் என்ற நினைவில், இருக்கும் நல்ல கையை இழந்து கொண்டு இருக்கின்றார்கள்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது, ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்புணர்வாக இருக்க வேண்டும். சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று நாம் எடுத்துதான் சொல்ல முடியும்; சட்டம் போட்டு, தண்டனை அளித்து சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியாது. தனி மனிதன் பொறுப்புணர்வுடன் செயல்படும்போது, சிகரெட் குடிப்பது தனது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற உண்மையை உணர்ந்து செயலாற்றுவான். அதுபோல், உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்து, தனது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் செயலில் ஈடுபடுவான், தனி மனிதன் தனது பொறுப்புணர்வுயை உணர்ந்து செயலாற்றும்போது. உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்ச்சி செய்து, உடலில் தேங்கும் கழிவை வெளியேற்றாமல் இருக்கும் செயல் - அந்த மனிதனின் பொறுப்புணர்வு இல்லாத செயல்; It's irresponsible act of that individual.
ஆக, பத்திரிக்கைகளே, உங்களது புதுமையான செயல் பாராட்டுக்குரியது; சும்மா அரைத்த மாவையே அரைக்காமல், புதுமையான செய்திகள், மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.