செம்மொழி மாநாடு புறக்கணிப்பு.
  • Covai Tamil Conference

    கலைஞர் கருணாநிதி எடுத்திருக்கும், செம்மொழி மாநாடு என்ற மாபெரும் முயற்சி, நிச்சயம் திருவினையாக்கும். கலைஞர் கருணாநிதி, அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், தமிழ்ப் பேரறிஞர்கள், உலகமெங்கும் வந்து கொண்டிருக்கும் சான்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என்று அனைவரது முயற்சி, கட்டாயாம் மெய்வருத்தக் கூலி தரும். நல்லதோர் பலன் அளிக்கும். வெற்றி, தோல்வி என்று திருவள்ளுவர் சொல்வதில்லை. முயற்சி, மெய்வருத்தக் கூலி தரும்.

    ஆக, கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்று நடத்தவிருக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாடு, நல்லதோர் செயல்; பனை ஓலைச் சுவடுகளில் இருந்து, இண்டர்நெட் வரை தமிழ் மொழியின் வளர்ச்சியைக் கண்டவர், கலைஞர் கருணாநிதி; இன்று உலகெங்கும் இருந்து, பலரும் தமிழ் அமுதத்தை விரும்பி பருகுவதைப் பார்த்து, தாய் விதவிதமாக படைப்புகளை உருவாக்கி படைப்பதுபோல், கலைஞர் நற்பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். இதுவரை எப்படியோ, ஆனால், செம்மொழி மாநாடு, தன்னலம் கருதாமல், பொது நலத்தை மனதில் கொண்டு செயல்படுத்தும் மாநாடு; அனைவருமே சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

    என்னமோ தெரியவில்லை; மனசு கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. எப்படி சமாதானம் சொல்லிப் பார்த்தாலும், சமீபத்திய இலங்கை நிகழ்வுகளையும், செம்மொழி மாநாட்டையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒருவகையில்; என்ன காரணம் என்று விளங்கவில்லை; எப்படி கதைப்பதென்று தெரியவில்லை; மனம் அமைதி அடைய மாட்டேங்கிறது. இரண்டு மனம் வேண்டும்; இலங்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை மறந்து வாழ ஒன்று; செம்மொழி அமுதம் பருகிட இன்னொன்று; ஆனால், இருப்பதோ ஒரு மனம். வசந்த மாளிகையில் வாழ்கின்றவனும், மன அமைதியின்றி தவிக்கின்றான்; அந்த தவிப்பில் இருந்து தற்காலிக விடுதலை பெற மதுவின் துணையை நாடுகின்றான்.

  • Covai Tamil Conference

    இந்தச் சிறுமி, சிரித்த முகத்துடன், கையில் பச்சிளங் குழந்தையோடு இருக்கும் படம், ஜனவரி 13, 2009 இல் இலங்கையில் உள்ள தருமபுரத்தில் எடுக்கப்பட்டது. நாம் காணும் கனவு: இந்த சிறுமி, கோவை செம்மொழி மாநாட்டுக்கு வந்திருந்து, அங்குமிங்கும் மற்ற சிறுவர் சிறுமியர்களோடு, ஓடி விளையாடிக் கொண்டு இருக்கின்றாள். மேடையில், ஒலிப்பெருக்கியில், அழைக்கின்றார்கள். அடுத்ததாக, இலங்கை தருமபுரத்தில் இருந்து, சிறுமி மீனாட்சி, தமிழ்ப் பாட்டு பாடுவாள் என்று. அவள் விளையாட்டு ஆர்வத்தில், ஒலிப்பெருக்கியில் விடும் அழைப்பைக் கண்டுகொள்ளவில்லை. மாநாட்டு அரங்கில் அமர்ந்திருந்த நான், அந்த சிறுமியிடம் சென்று, “பாப்பா, உன்னை அழைக்கின்றார்கள். வா. என்னோடு வா,” என்று அழைத்துச் சென்று, மேடை ஏற்றிவிட; அவள் விளையாடிய மூச்சிரைக்க, பாரதியாரின், ஓடி விளையாடு பாப்பா பாட்டை, ராகத்தோடு, முழு அர்த்தமும் புரிந்து, ரசித்துப் பாடுகிறாள். அவள் பாடி முடித்தவுடன், அரங்கமே கைதட்டலில் அதிருகிறது. அந்த அதிர்வு, பாராட்டெல்லாம் தலைக்கு ஏறாமல், அந்த சிறுமி ஓடிச் சென்று விட்டாள், அவளது விளையாட்டைத் தொடர்வதற்கு.

    பெயர் தெரியாத அந்த சிறுமிக்கு, மதுரை மீனாட்சியின் பெயரை சூட்டியாகி விட்டது. அந்த தருமபுரத்து சிறுமி, கோவைக்கு வந்திருந்து, பாரதியாரின் பாப்பா பாட்டைப் பாடுவதென்பது, ரொம்ப பேராசை; அது முடியாது; ஆனால், எங்களால், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று அறிந்து சொல்ல முடியும்.

    வேண்டாங்க; அந்த சிறுமி, கோவைக்கு வரவே தேவையில்லை. அந்த சிறுமி, இன்னும் உயிர் வாழ்கின்றாள் என்று மஹிந்தா ராஜபக்சேயிடம் கேட்டுச் சொல்லுங்கள். உடனடியாக புறக்கணிப்பை வாபஸ் பெற்றுக் கொள்வேன். அடுத்த பிளைட்டை பிடித்து, கோவையில் வந்திறங்குவேன்.

  • Covai Tamil Conference
  • Covai Tamil Conference
  • Covai Tamil Conference
  • Covai Tamil Conference
  • Covai Tamil Conference