மெய்ப்பொருள் காண்பது அறிவு
  • Meipporul

    இது முழுக்க முழுக்க பத்திரிக்கையாளர்களுக்காக எழுதப்படும் கட்டுரை. பத்திரிக்கையாளர்கள், நம்முடைய பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்று, நாம் வசிக்கும் ஊர்களிலே, நம்முடனே சேர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஆக, பத்திரிக்கையாளர்களும் நம் மக்களே.

    பத்திரிக்கைகள் சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயம் பலாப்பழம் என்றால், பத்திரிக்கைகள் ஒரு பலாச்சுளை. பெஞ்சமின் பிராங்களின் மற்றும் சுப்பிரமணி பாரதியார் போன்ற சான்றோர்கள் பத்திரிக்கைகளின் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஆக, பத்திரிக்கைகளின் நோக்கம் - சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். செய்திகளை வெளியிடுவது, அறிக்கைகளை வெளியிடுவது, மற்றும் விளம்பரங்கள் - பத்திரிக்கை வியாபாரத்துக்கு மிகவும் அவசியம். அவைகளைத்தவிர, பத்திரிக்கைகளால் சமுதாயத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். பத்திரிக்கையாளர்கள், மெய்ப்பொருளைக் காணவேண்டும். பத்திரிக்கையாளர்கள், மெய்ப்பொருளைக் காணும்போது, அவர்கள் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். விழிப்புணர்வுடன், மக்கள், வாழ்க்கையை வாழத்தொடங்கும்போது, சொல்வாரை நோக்காது சொல்லும் பொருளையே நோக்கி, கொள்ளுவது அல்லது தள்ளுவது அறிவு என்று உணர்வார்கள்.

    முன்பெல்லாம் என்றவுடன் இராமர் வாழ்ந்த காலம் என்று ரொம்ப பின்நோக்கிச் சென்றுவிட வேண்டாம். உதாரணத்துக்கு, “சங்கராபரணம்,” என்ற திரைப்படம் வெளிவந்திருந்த காலம். அந்த காலகட்டத்தில், திரைப்படங்கள் வெளிவந்தவுடன், பத்திரிக்கைகளில் திரை விமர்சனம் வெளிவரும். அந்த விமர்சனம், ஒவ்வொரு பத்திரிக்கையிலும் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும். ஒவ்வொரு பத்திரிக்கையும் வெவ்வேறு கண்ணோட்டத்துடன் விமர்சனம் எழுதியிருப்பார்கள். திரைப்படம் ஒன்றுதான்; ஆனால், பார்க்கும் கண்ணோட்டம் வெவ்வேறானது. அந்தமாதிரி பத்திரிக்கைகள் செயலாற்றும்போது, படிக்கும் வாசகர்களுக்கு அழுப்பு ஏற்படுவதில்லை; பல பத்திரிக்கைகளையும் ஆர்வத்துடன் படித்தார்கள்; பல பத்திரிக்கைகளைப் படித்து, பலவித கண்ணோட்டங்களிலும் பார்க்க கற்றுக் கொண்டார்கள்; பலவித கருத்துக்களையும் படித்து, காது கொடுத்து கேட்கும் பழக்கம் ஏற்பட்டது; அனைத்துக் கருத்துக்களையும் கேட்டு, அலசி ஆராய்ந்து, மெய்ப்பொருளைக் கண்டு, வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

    இன்றைக்கு, பல வித கருத்துக்களே கிடையாது; ஏனென்றால், பலவித கண்ணோட்டத்தில் எந்தப்பொருளையும் யாரும் பார்ப்பதில்லை; உண்மையைச் சொல்லப்போனால், யாரும் கண் விழித்து எதையும் பார்ப்பதேயில்லை; கண் இருந்தும் குருடர்களாக வாழ்க்கையை வாழத்தெரியாமல் தவிக்கின்றார்கள்; சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் போலித்தனம், அனைவரையும் கண்ணை திரைப்போட்டு மறைத்திருக்க்கின்றது.

    பத்திரிக்கைகள் இன்று மக்களுக்கு வழங்குவது, சத்துணவு அல்ல; போதைத் தரும் விஷயங்கள்தான்; பத்திரிக்கைகள் வழங்கும் போதையை உண்டு, அந்த ஒரு நாள் மக்கள் மகிழ்ச்சியில் கழிக்கின்றனர்; போதை இறங்கியவுடன் அடுத்த போதையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்; மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், நாள் ஒன்றுக்கு போதை என்று, தினம் தினம் புதுசு புதுசாக போதை வியாபாரம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. பத்திரிக்கையில், விருவிருப்பு, பரபரப்பு செய்திகள் வெளியிடுவதே வழக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறது. அப்படியே படித்து பழகியதால், மக்களின் எதிர்பார்ப்பும் அப்படியே அமைந்து விட்டது. உண்மையில் விருவிருப்பு செய்திகளின் ஆயுட்காலம், ஒரு நாள் மட்டுமே. மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, பள்ளியில் படிக்கும்போது, பக்கத்தில் இருந்த மாணவனைப் பார்த்து காப்பி அடிக்க மாட்டேன் என்று வகுப்பு ஆசிரியர் சொல்லியும் செய்ய மறுத்து விட்டார். அது விருவிருப்பு செய்தி அல்ல; ஆனால், அந்த நிகழ்ச்சி சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. அது பள்ளிப்பருவத்தில் நடந்த நிகழ்ச்சி; ஆதாலால், பெரிய தத்துவ புத்தகங்கள், பகவத் கீதை என்று படித்து, காந்தியின் செயல் அமையவில்லை; இயற்கையாக அமைந்த குணம் அது. ஆக, சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தி, பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கின்றது. நல்ல சத்துணவுகளை மக்களுக்கு அளிக்க, பத்திரிக்கையாளர்கள் மெய்ப்பொருளைக் காண வேண்டும், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்.

  • Meipporul

    மனிதர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு பார்க்கும்போது, யானையின் வால் கயிறு போன்றும், வயிற்றுப் பகுதி பெரிய மதில்சுவர் போன்றும், காது முறம் போன்றும் தோற்றமளிக்கின்றது. கண்ணைக் கட்டிக்கொண்டு பார்க்கும் பார்வையில் அவர்கள் காண்கின்ற பொருட்களும் சரியானவையே. பத்திரிக்கைகள் தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு இந்த மனிதர்களைப்போல் வெவ்வேறு கருத்துக்களைச் சொல்வதும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கைகள் அனைவரும் கண்ணைக் கட்டிக்கொண்டு பார்ப்பதும் மட்டுமின்றி, அனைவரும் ஒரே இடத்தில் நின்று கொண்டு, ஒரே கண்ணோட்டத்தில், ஒரே பொருளை மட்டுமே பார்க்கின்றார்கள். அதாவது, அனைத்துப் பத்திரிக்கைகளும், யானையின் வாலைப் பிடித்துக் கொண்டு, இது கயிறு என்று, அனைவரும் ஒரே குரலில் உரக்கக் கூறுகின்றார்கள். அந்த காரணத்தினால், மக்கள் அனைவருமே யானையை முழுவதுமாக பார்க்க வாய்ப்பே கிடைப்பதில்லை. அனைவரும், யானையைப் பார்த்து, இது கயிறு என்று ஒருமித்த குரலில் ஒலிக்கின்றனர்.

    மெய்ப்பொருள் என்பது பெரிய வித்தை இல்லை; குழந்தையாக இருந்தபோது அனைவரும் மெய்ப்பொருளைத்தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. இன்றைய கல்வியும், நாம் கல்வி கற்கும் முறையும்தான், நம் கண்களை மூடி, மெய்ப்பொருளைப் பார்க்க முடியாமல் தடுத்து விடுகிறது. யானையைப் பார்த்து யானை என்று சொல்வதுதான் மெய்ப்பொருள் காண்பது.

    இந்த ராஜ்யசபை தேர்தலைப்பற்றி பத்திரிக்கைகளில் வெளியாகியிருக்கும் செய்திகளைப் படித்துப் பாருங்கள். அனைத்துப் பத்திரிக்கைகளும் வெளியிட்ட செய்தி, இவர்களுக்கு இரண்டு சீட், அவர்களுக்கு மூன்று, மீதியுள்ள காங்கிரஸுக்கு ஒன்று. ஆக, ஆறு சீட்; ஆறு வேட்பாளர்கள்; ஆக தேர்தல் நடத்த தேவையின்றி, அனைவரும் போட்டி இன்றி தேர்வு என்று பத்திரிக்கைகள் அறிவித்து விட்டார்கள். ஒரு பத்திரிக்கையைப் படித்தால் போதுமானது; அடுத்த பத்திரிக்கையைப் படிக்கத் தேவையேயில்லை.

    இந்த ராஜ்யசபை தேர்தலை ஒட்டி வெளிவரும் போதையூட்டும் பத்திரிக்கை தலைப்புகள், செய்திகள் என்னவென்றால், பா.ம.க வுக்கு சீட் இல்லை; ராஜதந்திரம். பத்திரிக்கைகளின் கண்ணோட்டம், நாம் எவ்வாறு மக்களாட்சியை செயல்படுத்துகிறோம் என்று இருந்தால் பத்திரிக்கைகளின் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருக்கும். பத்திரிக்கைகளின் கண்ணோட்டம் எல்லாம், அரசியல் கட்சிகள் எப்படி செயலாற்றுகிறது என்ற பார்வையில் அமைந்திருக்கின்றது. அந்த காரணத்தில், நாம் மக்களாட்சியை சீரும் சிறப்புமாக செயல்படுத்த முடியாமல், அனைத்துமே கேலிக்கூத்தும், கேளிக்கை அம்சமாக அமைந்து விட்டது. உண்மையிலேயே, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும், சினிமா போன்ற கலைத் துறைகளும்தான் கேளிக்கை அம்சங்கள். உண்மையென்னவென்றால், அங்கு தொழில் புரிபவர்களும் சரி, ரசிக்கும் மக்களும் சரி, கேளிக்கை அம்சமான சினிமாவை, மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள்; சினிமாவில், மெய்ப்பொருளையும் மக்கள் காண்கின்றார்கள்.

    அன்று ஒருவர், ஒரு நிகழ்ச்சியில் கமலஹாசனிடம் சொல்கிறார். “உன்னைப் போல் ஒருவன்,” படத்தில் ஒரு சீனில், கமலஹாசன் கையில் துப்பாக்கி இருக்கும்; கண்ணில் கண்ணீர் கசியும்; துப்பாக்கியைக் கொண்டு, அந்த கண்ணீரை துடைத்துவிடும் காட்சி, மிக அற்புதம் என்கிறார். ஆக, கேளிக்கை அம்சமான சினிமாவில், மக்கள் மெய்ப்பொருளைப் பார்க்கின்றார்கள். ஏனென்றால், அந்த துறை அத்தனை சிறப்பு வாய்ந்த துறை; அந்த துறையில் செயலாற்றிய அனைத்து முன்னோர்களும், சான்றோர்களாவார்கள். போலித்தனம் இருக்கும் இடத்தில் படைப்பாற்றல் இருக்க முடியாது. படைப்பாற்றலை வெளிப்படுத்தும் மனிதன், முழுச்சுதந்திரத்தை அனுபவிக்கும் மனிதனாக இருப்பான். திரைத்துறையில், யாரும் யாரையும் அடிமைப்படுத்துவதில்லை; யாரும் யாருக்கும் அடிமையாவதுமில்லை. அதேபோல் சமீபகாலம்வரை கிரிக்கெட் மக்களின் மதிப்பை பெற்று இருந்தது. மக்களுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்கின்றது. LBW எல்லாம் மக்கள் அறிவார்கள். ஆக, கேளிக்கை அம்சங்களில், மக்கள் மெய்ப்பொருளைக் காண்கின்றார்கள்.

    மக்களாட்சி, அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் அங்கம் வகிக்கும் முக்கியமான விசயம் ஆகும். ஆனால், தங்களது வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் மக்களாட்சியில் மெய்ப்பொருளைக் காண்பதில்லை. மக்களாட்சியில் மக்களின் எதிர்பார்ப்பு எல்லாம் அரசியல் கேலிக்கூத்தும் கேளிக்கை அம்சங்களும் மட்டுமே. இந்த ராஜ்யசபா தேர்தல், அனைத்து மக்களும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விசயம். இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டு, ராஜ்ய சபைக்கு செல்லும் இவர்கள், தமிழக மக்களின் பிரதிநிதிகளாகச் செல்கிறார்கள். மெய்ப்பொருள் என்னவென்றால், அந்த கட்சிகளின் பிரதிநிதிகளாக அவர்கள் செல்வதில்லை. நம் அனைவரின் பிரதிநிதியாக செல்கிறார்கள். அங்கு சென்று என்ன செய்யப் போகின்றார்கள். அது மிகவும் முக்கியம். மெய்ப்பொருள் என்னவென்றால், அங்கு சென்று, அனைத்திந்திய மக்களின் வாழ்வில் முன்னேற்றம் அல்லது பின்னேற்றம், அதாவது பல கோடி மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படக்கூடிய முடிவுகளை, இவர்கள் எடுக்கப் போகின்றார்கள். இவர்கள் எடுக்கப் போகும் முடிவின்படிதான், இவர்கள் காட்டும் பாதையில் இந்தியா நடந்து முன்னேற்றம் காணப் போகின்றது. ஆக, இந்த ராஜ்யசபைத் தேர்தல் - சாதரண கயிறு இல்லை; மெய்ப்பொருளைக் கண்டால், இது மாபெரும் யானை என்ற உண்மையை உணர்வீர்கள்.

    பத்திரிக்கைகள் மெய்ப்பொருளைக் காணவேண்டும்; கண்டு மக்கள் விழிப்புணர்வு பெற வழி செய்ய வேண்டும். ராஜ்யசபா என்றால் என்ன, அங்கு செல்லும் மக்களின் பிரதிநிதிகளின் கடமை என்ன, மக்களுக்கும் இந்த பிரதிநிதிகளுக்கும் என்ன உறவு, என்ன செயலாற்ற வேண்டும், எப்படி செயலாற்ற வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை காணச் செய்தால், அது பத்திரிக்கைகள் மக்களுக்கு ஊட்டும் சத்துணவு. மேலும் எழும்பும் கேள்விகள்: சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓட்டு உரிமை உண்டா? விஜய்காந்த், சட்டப்பேரவையின் உறுப்பினர்; அவரது வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கலாமா? கட்சி சாராத மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஓட்டு உரிமையைப் பறிக்கலாமா? நியமனம் செய்யப்பட்ட ஒரு உறுப்பினருக்கு ஓட்டு உண்டா? இன்னும் பற்பல கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். கேள்விகள் எழும்போதுதான், மக்களாட்சி மலரும்.

    உங்க பத்திரிக்கை அலுவலகத்தில் ஒரு எடிட்டர் வேலை காலியாக இருக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி எடிட்டரை வேலைக்கு தேர்வு செய்கிறீர்கள்? வேலை காலி என்று விளம்பரம் செய்கிறீர்கள்; ஒரு வேலைக்கு பத்து பேர் தங்களது RESUME அனுப்பி வைக்கின்றார்கள்; அதில் ஐந்து பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கின்றீர்கள்; அந்த ஐந்து பேரும் தகுதியில்லை என்று கருதினால், மீண்டும் விளம்பரம் வெளியாகிறது. நீங்கள் இந்த ராஜ்யசபா தேர்தல் போல், எடிட்டரை தேர்வு செய்வதில்லை. ஒரு வேலைக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்திருக்கின்றது; ஆதாலால், எந்தவித நேர்முக தேர்வும் இல்லாமல், அப்பாயிண்மெண்ட் ஆர்டரை அவருக்கு வழங்குவதில்லை. எடிட்டர் வேலை அத்தனை முக்கியமான வேலை. இந்த ராஜ்யசபை மக்கள் பிரதிநிதி வேலை மிகவும் முக்கியமான பொறுப்பு; ஆனால், நாம் அனைவரும் பொறுப்புணர்வு இல்லாமல் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றோம். ஆக, தேர்தல் கட்டாயம் நடைபெற வேண்டும். தேவையான அளவு ஓட்டு பெறாதவர், தகுதியற்றவர் என்று நீக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், புதிதாக வேட்புமனுத் தாக்கல் செய்து, மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்