Reward is also a punishment.
  • Reward is also a Punishment

    அமெரிக்காவில், கலேபோர்னியா மாநிலத்தில், அதிலும் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில், இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகள் பல்வேறு கலைகள் பயில, அவர்களை ஊக்குவிக்கின்றனர். அதில் பரத நாட்டிய கலையும் ஒன்று; பெரும்பாலும் பெண் குழந்தைகள், பரத நாட்டிய கலை பயில்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களும், தாங்கள், தங்களது சிறுவயதில் பரத நாட்டியக் கலையை கற்க வாய்ப்பை தவறவிட்டவர்கள், தற்பொழுது தங்கள் குழந்தைகளுக்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, குழந்தைகள் கலையைக் கற்க ஊக்கமும், உற்சாகமும் அளிக்கின்றனர்.

    இங்கு பல கலைக்கூடங்கள் சிறப்பான முறையில், பரத நாட்டியக் கலையை கற்றுக் கொடுக்கின்றனர். அதிலும், சில கலைக்கூடங்கள் மிகச்சிறப்பாகவும், தனித்துவத்துடனும் செயலாற்றுகின்றன. இந்த கலைக்கூடங்கள், நாட்டிய கலையை மட்டுமின்றி, இந்திய கலாசாரத்தையும் குழந்தைகள் அறியும்படி செய்கின்றனர். உதாரணத்துக்கு, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி போன்ற விஷேச நாட்களில், குழந்தைகள் குருவின் இல்லத்துக்கு சென்று, குருவுக்கு மரியாதை செலுத்துகின்றனர். இன்றைய காலகட்டத்தில், மனிதர்கள் அனைவரும், தனி உலகம் அமைத்துக் கொண்டு, தனியாக வாழும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த மாதிரி, அனைவரும் ஒன்றுகூடி விழா நடத்தும்போது, மனித சமூகம் ஒருங்கிணைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட அந்த நிகழ்ச்சிகளின்போது, ஒவ்வொரு குழந்தையும், தான் தனி மரம் இல்லை; பலாக்கனியில் தானும் ஒரு சுளை என்ற உணர்வு ஏற்படுகின்றது. சமூகத்தில், தானும் ஒரு அங்கம் என்ற உணர்வு ஏற்படும்போது, மனிதனுக்கு பொறுப்புணர்வு ஏற்படுகிறது; சிறந்த பண்பு உடைய சான்றோனாக மனிதன் உருவாக வழிவகுக்கின்றது.

    இந்த கலைக்கூடங்கள், நாட்டியக் கலையை மட்டுமின்றி, சிறந்த பண்பாட்டினையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, ஒரு முழுமையான மனிதர்களாக உருவாக்குகின்றன. அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு, வீட்டில் தாத்தா பாட்டி கிடையாது; பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் அறிவு வளர்ச்சி அடைகின்றது; ஓடி ஆடி விளையாடுவதில் உடல் வலிமை அடைகின்றது; ஆனால், அந்த குழந்தைகளின் அகம், அதாவது உள்ளம் வளர்ச்சி அடைவதில்லை; நல்லொழுக்கம் - கற்றுக் கொள்ள, அந்தக் குழந்தைகளுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. வீட்டில், இன்றைய இளம் பெற்றோர்களுக்கு, இந்திய கலாசாரத்தைப் பற்றிய அறிவு மிகவும் குறைவு; அதைத்தவிர, எந்த கலாசாரத்தைப் பின்பற்றுவது என்ற குழப்பம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த கலைக்கூடங்கள், அதிலும் அந்தக் கலைக்கூடத்தின் தலைமை குரு, மிகந்த பொறுப்புணர்வுடன், குழந்தைகளுக்கு நாட்டிய கலையுடன், நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொடுத்து, சிறப்பான மனித சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்.

    இன்றைய காலகட்டத்தில், வேலை பார்க்கும் இடங்களில், அது கூகுளே ஆகட்டும்; எந்நேரமும் போராட்டம்; எல்லாவிதமான போரட்டம். பள்ளிகளில், குழந்தைகளுக்கு அத்தனை படிப்பு சுமை; ஹோம் வோர்க்; கிரேடு. வீட்டிலே, குடும்பத்தில் எதுக்கெடுத்தாலும் பிரச்சனை, போராட்டம். இந்த கலை ஒன்றுதான், மனிதனுக்கு மன அமைதியும், உள்ளத்துக்கு ஆனந்தமும் அளிக்கின்றது. குழந்தைகள், இந்திய பாரம்பரிய உடையணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து செல்கின்றன. அதுவும் ஏதாவது நிகழ்ச்சி என்று வந்து விட்டால், பட்டு நாட்டிய உடை அணிந்து, நகைகளை அணிந்து, பிளாஸ்டிக் மல்லிகைப் பூவணிந்து; நம்ம கண்ணே பட்டுப் போய்விடும்; அத்தனை அழகு.

    நாட்டிய நிகழ்ச்சியின்போது, குடும்பமே ஒன்று சேர்ந்து, ஒன்றாக அமர்ந்து, ரசித்துப் பார்க்கும். அந்த கலைக்கூடத்தின் அத்தனைக் குழந்தைகளின் வளர்ச்சியை காணுவது ஆனந்தம்; அந்த குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சியை காண்பதுவும் ஆனந்தம்; சில குழந்தைகள், மிகுந்த அக்கறையுடன், நன்கு பயிற்சி செய்து, சிறப்பாக நடனம் ஆடுவதைக்கண்டு, உள்ளம் பூரிப்பு அடைகின்றது. சில குழந்தைகளின் நடனம், அத்தனை சிறப்பாக இல்லாவிடினும், குழந்தைத்தனத்தை இன்னும் இழக்காமல் இருப்பதைக் காண்பதிலும் மனம் மகிழ்ச்சி அடையத்தான் செய்கிறது. அதையும்தவிர, நன்கு பயிற்சி பெற்ற, இளைய சமுதாயத்தினர், தங்களது குருநாதர்களுடன் இணைந்து, சிறப்பான நடன நிகழ்ச்சியை அரங்கேற்றும்போது, அகம், புறம் அனைத்தும் ஆனந்தம் அடைகின்றது. ஆக, இந்த கலைக்கூடங்களின் நிகழ்ச்சிகளின் மூலம், குடும்பத்தினர் அனைவருமே இன்பம் அடைந்தனர்.

    ஆக, அனைத்தும் சிறப்புதான்; குறையொன்றுமில்லை என்று உரக்க சொல்லத்தான் ஆசை. ஆனால், சமீப காலங்களில், இந்த கலைக்கூடங்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கி விட்டது. அங்கும், குழந்தைகளை ஒப்பிடுதல், தரம் பார்த்தல், கிரேடு, சான்றிதழ் என்று ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், அனைத்து குழந்தைகளும், பெற்றோர்களும், அவையில் கூடியிருந்தனர். குழந்தைகளின் நாட்டியம் ஆடுவதைக்கண்டு, அனைவரும் பெருமிதத்துடன் ரசித்துப் பார்த்தனர். பிறகு, முதல் முறையாக, சில குழந்தைகளை, மேடைக்கு அழைத்து, சான்றிதழ் வழங்கப்பட்டது. சில குழந்தைகள், சான்றிதழை வாங்கிக் கொண்டுவந்து, தங்களது தாயிடம் கொடுத்துவிட்டு, மற்ற குழந்தைகளோடு தொடர்ந்து விளையாடுவதில் ஈடுபட்டனர். பல குழந்தைகளுக்கு, சான்றிதழ் கிடைக்கவில்லை; அந்த குழந்தைகள், குருநாதரின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை என்பது உண்மை. ஆனாலும், அந்த பிஞ்சு உள்ளங்களின் வாடிய முகம், பார்க்க வேதனை அளித்தது. இந்த வயதினிலே, வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை. நிகழ்ச்சியின் இறுதியாக, நமஸ்காரம் செய்ய, குருநாதர் அனைத்து குழந்தைகளை அழைத்தவுடன், வாடிய முகம் மலர்ந்து, சோகம் மறைந்தோடி விட்டது.

    நன்கு கடினமாக உழைத்த குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டியது குருவின் கடமை. ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது, என்பதுதான் குருவுக்கு மிகப் பெரிய சவால். இந்தக் குழந்தையை பாராட்டியாக வேண்டும்; அதேசமயம், மற்றக் குழந்தைகளின் உணர்வுகளை காயப்படுத்தவும் கூடாது. இந்த சவாலுக்கு, அமெரிக்க முறையிலும் தீர்வு காணலாம்; இந்திய கலாசார முறையிலும் தீர்வு காணலாம். அமெரிக்காவில், பள்ளிகளில் கிரேடு வழங்குகின்றார்கள். அப்படி வழங்கும் கிரேடு, A+ ஆகவே இருக்கட்டும்; கிரேடு, அந்த மாணவனின் வீட்டுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகின்றது. ஒருத்தரின் கிரேடு, மற்றவர்கள் அறிய வாய்ப்பில்லை. மேலும், சிறப்பாக படிக்கும் மாணவனுக்கு, Advanced Program என்று அதிக சவால்களை அளிக்கின்றனர். அந்த சவாலை, அந்த மாணவன் தன்னோட திறனால் எதிர்கொள்கின்றான்; அந்தமாதிரியான அதிக சவாலை எதிர்கொள்வதில், அந்த மாணவனுக்கு பெருமை, மனதில் ஒருவித திருப்தி என்று அனைத்து நல்ல குணங்களும், பண்புகளும் வளர்கின்றன. மற்றவர்களைவிட, தான் பெரிய திறமைசாலி என்ற கர்வம் மனதில் ஏற்படுவதில்லை; கூடிய சவாலை எதிர்கொள்வதில் மனம் மூழ்கிவிடுகின்றது.

    இந்திய கலாசாரப்படி, குருகுலத்தில் குருநாதர்கள், தாய்மை உள்ளத்துடன் செயலாற்றுவார்கள். தாய், தனது குழந்தைகளை ஒப்பிட்டு கிரேடு வழங்குவதில்லை. தாயுள்ளம் கொண்ட குருநாதர்கள், திறமையாக செயலாற்றும் வீரனைக் கண்டு பெருமிதம் அடைகிறார்கள். சிறப்பாக செயலாற்றும் வீரர்களுக்கு, அடுத்து அவர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலே போதும்; அவர்கள் சுய ஆர்வத்தால், கற்றுக் கொண்டு, தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, குருவிடம் அணுகி கேட்டு, தெளிவு அடைவார்கள். ஆதலால், குருநாதர், கற்றுக் கொள்ள சிரமப்படுபவர்களின் மீது கவனம் அதிகம் செலுத்த ஏதுவாகும். அடிப்படை உண்மை என்னவென்றால், சீடர்கள் கற்றுக் கொள்ள முழு ஆர்வம் காட்ட வேண்டும்; குருவின் சொல்படி நடக்க வேண்டும்; பிராக்டீஸ் கட்டாயம் செய்ய வேண்டும்; முயற்சியே செய்யாமல், சீடர்கள் இருக்கக் கூடாது.

    இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகள், முழுமையான குழந்தைகளாக வளர வாய்ப்பு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றது. “மாதா, பிதா, குரு, தெய்வம்,” குழந்தைகள் அறிவதில்லை. சிறப்பாக நாட்டியம் ஆடி, சான்றிதழ் வாங்கிய குழந்தை, சபையில் தனது நிலை உயர்வதை உணர்கின்றது. “நிலை உயரும்போது, பணிவு கொண்டால், உலகம் உன்னிடம் மயங்கும்,” என்று யாரும் அந்தக் குழந்தைக்கு சொல்லித் தருவதில்லை. வீட்டிலே பெற்றோர்களின் சொல் கேட்பதில்லை; தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்ற எந்தவித உறவுமுறையும் அருகில் இல்லை; வீட்டில், தன்னந்தனியாக, டீவியைப் பார்த்து வளர்கின்றது; பழைய சிவாஜி கணேசன் படங்களைப் பார்த்து, அன்பு, பாசம் என்று எந்தவித நற்குணமும் உருவாக வாய்ப்பே இல்லாமல் வளர்கின்றது. இந்த டான்ஸ் கிளாஸில்தான், இந்திய கலாசாரத்தின் அர்த்தத்தை அறிந்து, குழந்தைகள் நல்ல மனிதர்களாக உருவாகிக் கொண்டு இருந்தனர். தற்பொழுது, இங்கும் கிரேடு, சர்டிபிகேட், போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வு என்ற நிலை உருவாகி வருவதால், குழந்தைகள், மனிதர்களாக உருவாகமல், எந்திரன்களாக உருவாகிக் கொண்டு இருக்கின்றனர்.

    பரத நாட்டிய கலைக்கூடங்களுக்கு கற்றுக் கொள்ள வரும் குழந்தைகள், முதலில் அனுபவிப்பது - வீட்டிலே அடைந்து கிடப்பதிலிருந்து விடுதலை; அதற்கடுத்து, மற்ற குழந்தைகளை பார்த்து, பேசிப் பழகி, விளையாட கிடைக்கும் வாய்ப்பு. மற்ற குழந்தைகளுடன் ஆனந்தமாக சிரித்து பேசி, விளையாடுவது இணையற்றது. அந்த ஆனந்ததை இழக்க வேண்டுவது - தண்டனையாகும். அந்த சூழ்நிலையில்தான், Reward becomes a Punishment. அந்தக் குழந்தை விளையாட முடியாமல் தவிக்கின்றதே, அந்த தவிப்பு, அந்தக் குழந்தைக்கு தண்டனையாகி விடுகின்றது. அவையில், தனது பெயர் கூவி அழைக்கப்படுகின்றது; ஒன்றுக்கு இரண்டாக சான்றிதழ் வழங்கப்படுகின்றது; சான்றிதழ் வாங்கி வந்தவுடன், கூடியிருந்த பெரியோர்கள் வாழ்த்துகின்றார்கள்; அந்த வாழ்த்துக்கள் காதில் வந்து விழும்போது, தலைக்கு கர்வம் ஏறுகின்றது; சான்றிதழைக் கையில் வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் அலைகின்றது; ஆசையோடு சில பெற்றோர்களை அணுகும்போது, அவர்கள் கண்டு கொள்ளவில்லை; உடனே முகம் வாடி வருத்தம்; வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் உள்ளம் ஏங்கும் நிலை உருவாகி விட்டது; சக குழந்தைகளோடு விளையாடும் வாய்ப்பை இழந்து விடுகின்றது. சான்றிதழ் வாங்கி, தாயிடம் கொடுத்துவிட்டு, விளையாடும் குழந்தைகள் - அவர்கள் ஞானிக்கு சமம்; அந்த குழந்தைக்கு, எதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது என்று நன்கு தெரிகின்றது. சான்றிதழ் கிடைக்காத குழந்தைகளும், சிறிய வருத்தத்தில் இருந்து, மீண்டு வந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர். விளையாட முடியாத குழந்தைகள், எந்திரன்களாகி விடுகின்றனர். மனிதனின் இயல்பான குணங்களை இழந்து, சிறப்பான நாட்டியக் கலைஞரை உருவாக்குவது, சரியான செயலாகாது.

  • Reward is also a Punishment

    இந்தியாவில் மாநில அளவில், தேசிய அளவில் சிறப்பான திறமைகளைப் பாராட்டி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில், விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, பத்திரிக்கைகளில் அறிவித்து விடுகின்றனர். இவருக்கு பாரத ரத்னா விருது, அவருக்கு அர்ஜூனன் விருது என்று முதலிலேயே அறிவித்து விடுகின்றனர். தனக்கு விருது என்ற அறிவிப்பினைப் பார்த்தவர் ஆனந்தம் அடைகிறார்; தனக்கு எதிர்பார்த்த விருது கிடைக்காதவர் வருத்தம் அடைகிறார். ஆனந்தம், மற்றும் வருத்தம் எல்லாம் வீட்டிலேயே முடிந்து விடுகிறது. அவையில் தொடருவதில்லை. குறிப்பிட்ட நாளில், விருது கிடைத்தவர் டெல்லிக்கு சென்று, ஜனாதிபதியிடம் விருதினை அடக்கத்துடன் பெற்றுக் கொள்கிறார். விருதினை வாங்கிய கையோடு, உணர்ச்சிகரமான பேச்சு எல்லாம் கிடையாது.

    இங்கு, ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவைக்கு அழைக்கப்படுகின்றனர். சிறந்த நடிகைக்கான விருதுக்கு தகுதியானவர்கள் என்று ஐந்து பேரை அறிவிக்கின்றனர். அவர்கள் ஐவரும் ஒருவித எதிர்பார்ப்போடு அவைக்கு வருகின்றனர். பிறகு, டிரமாட்டிக்காக, ஒருவரின் பெயர் அறிவிக்கப்படுகின்றது. வெற்றி பெற்றவர், விண்ணுக்கும், மண்ணுக்கும் துள்ளிக் குதிக்கின்றார். மீதியுள்ள நால்வரும், அந்த அவையில் ஏமாற்றம் அடைகின்றனர். அனைத்தும், பெருமிதம், ஏமாற்றம் என்று அனைத்தும் ஒன்று சேர்த்து, உலக மக்களுக்கு கேளிக்கை நிகழ்ச்சியாக வழங்கப்படுகின்றது. அவையினில், அத்தனை பேர் மத்தியில், அந்த வாடும் முகங்களை கேமராவில் குளோசப்பிள் காண்பிப்பார்கள். ஆக, மக்களின் ரசனை தரம் தாழ்ந்து சென்று கொண்டு இருக்கின்றது.

    ஆனால், ஒரு நல்ல விசயம். இதுவரைக்கும் வெற்றி பெற்றவர், மேடைக்கு வந்து, “What took you so long to give me this award! I knew it; I deserve it; If I don't get it then who else can. At least, now let the world know, who is the best,” என்று கர்வத்துடன் உரையாற்றவில்லை. உலகமே வெற்றி பெற்றவரின் உரையை உன்னிப்பாக கவனிக்கின்றது. அனைவரும் உணர்ச்சிபூர்வமாக, தங்களது நன்றியறிதலை உலகுக்கு வெளிப்படுத்துகின்றனர். அந்த உரையைக் கேட்டபிறகே, உலக மக்கள், இவர் பரிசுக்கு தகுதியானவர் என்று ஏற்றுக் கொள்கின்றது. ஆஸ்காரிலும், நிலை உயரும்போது பணிவு கொள்கிறார்கள். அந்த கலைஞர்களைக் கண்டு, உலகமே மயங்குகிறது.

    பரத நாட்டியம் என்றவுடனே, அனைவரின் மனதிலும் நிறைந்து நிற்பவர், நாட்டியப் பேரொளி பத்மினி. அதுவும் அந்த தில்லானா மோகனாம்பாள், காலத்தால் அழியாத காவியமாகி விட்டது. பாடும் பாடலுக்கு ஏற்ப நடனம், அதையும்தவிர முகத்தில் காட்டும் பாவம்; மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்றபோதிலும் சரி, நலம்தானா, உடலும் உள்ளமும் நலம்தானா என்றபோதிலும் சரி, பத்மினியின் கண்கள் பேசும்; முகத்தில் அத்தனை சிறப்பான பாவத்தை வெளிக்காட்டுவார். உள்ளத்தில் உருவாகும் உணர்வுகள், முகத்தில் பாவமாக வெளிப்படும்.

    இன்று, “ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும், அள்ளித் தருவாள் கலைவாணி,” என்று பாடல் அமைந்திருக்கின்றது. அறுபத்து நான்கு means Sixty Four என்று மட்டுமே அறிந்து ஒரு கையில் ஆறு என்ற எண்ணினையும், மற்றொரு கையில் நான்கு என்ற எண்ணினையும் காட்டுகின்றார்கள். மெய்ப்பொருள் அறிந்து கற்றுக் கொள்ளாமல், அவசர அவசரமாக கலையை அரைகுறையாகக் கற்று, யாருக்கு என்ன பயன். அறுபத்து நான்கு கலைகள் இருக்கின்றனவா என்ற ஆச்சரியம், மிகச் சரியான பாவத்தை முகத்தில் வெளிப்படுத்த உதவும்.

    அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு, கலைவாணியையே தெரியாது. அவள் அள்ளிக் கொடுத்தால் என்ன; கொடுக்காவிட்டால் என்ன என்று வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆக, அந்தக் குழந்தைகள், அர்த்தம் புரியாமல், சரியான பாவத்தை நாட்டியத்தில் வெளிக்காட்ட கஷ்டப்படுவது முற்றிலும் உண்மை. அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும், பாவத்தை சரியாக காட்டுவது - சரியான செயல் அல்ல. அது, அந்தக் குழந்தையின் உள்ளத்தில், போலித்தனத்தை வளர்த்து விடும். பிற்காலத்தில், வாழ்க்கையில், சரியான உணர்வை வெளிப்படுத்த முடியாமல் தவிக்க நேரிடும். இன்றைய சமூகத்தில், இத்தகைய போலித்தனம் மலிந்து கிடக்கின்றது. செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட, சுதர்ஸனம் என்ற சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்து விட்டார்; அந்த மரணத்தின் பாதிப்பை உணராமல், தலைவர்கள் பட்டிமன்றத்தை ரசித்துக் கொண்டு இருக்கின்றனர்.

  • Reward is also a Punishment

    இந்த அறுபத்து நான்கு கலைகள் என்பது உதரணத்துக்காக எடுத்துக் கொண்டது; உண்மையிலேயே, ஒவ்வொரு பாடலுக்கும், அதன் முழு அர்த்தத்தை சொல்லிக் கொடுத்து, உள்ளத்தில் உருவாகி, முகத்தில் பாவத்தை வெளிப்படுத்தும் திறனை வளர்த்து விடுவதே சிறந்த பயிற்சி முறையாகும். ஆனால், இது அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டாலே சாத்தியமாகும். ஆக, பெற்றோர்கள், பாடலின் பொருளை தாங்கள் உணர்ந்து, பிறகு தங்களது மழலைச் செல்வங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த பொறுப்பை பெற்றோர்கள் முன்வந்து ஏற்க வேண்டும்.

    தற்பொழுது, நாட்டியக் கலைக்கூடங்களுக்கு வரும் பெற்றோர்கள், தங்களது குழந்தை என்ன கற்றுக் கொள்கிறது; எப்படி கற்றுக் கொள்கிறது என்று ஆர்வம் காட்டுவதில்லை. அங்கு, அந்த குருநாதர்கள் சொல்லிக் கொடுக்கும் விதத்தை காண்பதுவே, மனதுக்கு நிறைவு தரும்; அதைத்தவிர குழந்தைகள், அந்த நாட்டிய நடனத்தை கற்க எடுக்கும் முயற்சிகளை காண்பதுவும் ஆனந்தம். ஆனால், பெற்றோர்கள், இதையெல்லாம் விட்டுவிட்டு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டிக்கெட் கம்மியா அல்லது கேதே பசிபிக்கில் கம்மியா என்ற வம்பளப்புதான் நடந்து கொண்டிருக்கின்றது. It takes a village to raise a kid. பெற்றோர்கள், பொறுப்புணர்வுடன் செயலாற்றும்போது, தாங்களே முன்வந்து, பாட்டின் பொருளறிந்து, தம் மக்களுக்கு மட்டுமன்றி, அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுபார்கள், பெற்றோர்கள். பெற்றோர்கள், பொறுப்புணர்வுடன் செயலாற்றும்போது, குருநாதர்களும் ஆர்வத்துடன் நாட்டியக் கலையை பயிற்றுவிப்பார்கள்; குழந்தைகளும் ஆர்வத்துடனும், முழு ஈடுபாட்டோடு கலையைக் கற்றுக் கொள்வார்கள்.

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.
    நம்ம பெரியவர்கள், மழலைச் செல்வத்தின் அருமை பெருமைகளை அழகாக எடுத்துரைத்து குழந்தைகளோடு செலவிடும் நேரத்தில் இன்பத்தினைக் கண்டனர். இன்று, மேலை நாட்டவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது: Baby Sitting. அது உயர்வான சொல் அல்ல; அது குழந்தைகளைப் பாரமாக கருதும் சொல்; அங்கு அன்பு இல்லாத சூழல் உருவாகிறது.

    இறுதியாக, வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படம். பத்மினியும், வைஜெயந்திமாலாவும் நடனம் ஆடுவார்கள்; அற்புதமான நாட்டியம்; வேகம், விறுவிறுப்பு, கோபம் என்று மிகவும் கஷ்டப்பட்டு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக ஆடுவார்கள். அனைவரும் அந்த நடனத்தை ரசித்துப் பார்பார்கள். ஆனால், அது முழுக்க முழுக்க போட்டி என்பதால், இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் வசனம்: பி.எஸ்.வீரப்பாவின், சபாஷ்...சரியான போட்டி. ஆக, அத்தனை அற்புதமான திறமைசாலிகள், பத்மினியோ, வைஜெயந்திமாலாவோ மக்கள் மனதில் நிலைத்து நிற்கவில்லை. நிலைத்து நிற்பது, வீரப்பாவின், சபாஷ், சரியான போட்டி என்ற வசனம். ஆக, போட்டி, திறமைகளை வளர்த்து விடுவதில்லை; அழித்தே விடுகின்றது.

    சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவில் உள்ள நடன குருநாதர்கள் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து, பஞ்ச பூதங்கள் என்று, காற்று, நெருப்பு, நீர் என்று அனைவரும் ஒருங்கிணைந்து நடனத்தின் மூலம், உலக அமைதிக்கான கருத்தை எடுத்துரைத்தார்கள். அதுபோல், பத்மினியும், வைஜெயந்திமாலாவும் போட்டி என்றில்லாமல், ஒருங்கிணைந்து நடனத்தை அரங்கேற்றியிருந்திருந்தால், அது காலத்தினால் அழியாத காவியமாக என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க, வளர்க பரதக் கலை.