எந்தவித விருப்பும் வெறுப்பும் இன்றி; இவரைப் புகழ வேண்டும், அவரை இகழ வேண்டும் என்ற கட்டாயம் இன்றி; நாடு, மொழி, மதம், இனம் என்று எந்தவித பிரிவினை எண்ணங்கள் இன்றி; முழுச் சுதந்திரத்துடன், தெள்ளத் தெளிவாகப் பார்க்கும்போது, மெய்ப்பொருள் காண்பது அறிவாகும்.
மஹிந்தா ராஜபக்சே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாபெரும் உலகத் தலைவராக மதிக்கப்பட்டு உலகை வலம் வந்தார். சென்ற இடங்கள் எல்லாம், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து, பல்வேறு கேள்விகளைக் கேட்டு, அதற்கு மஹிந்தா சொல்லும் பதிலை, உலகமெங்கும் வாழும் மக்கள் மிகுந்த கவனத்துடன் கேட்டு வந்தனர். மஹிந்தாவின் ஒவ்வொரு சொல்லும்; அவரது ஒவ்வொரு செயலும்; அவரது எண்ணங்களும்; அவரது ஒவ்வொரு அசைவுகளும், உலக மக்கள் கண்ணும் கருத்துமாக தங்களது முழு கவனத்தைச் செலுத்தி கேட்டு வந்தனர். மஹிந்தா சொன்ன சொற்களின் அர்த்தத்திற்கும், சொல்லாத சொல்களின் அர்த்தத்திற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு அறிஞர்கள் கவனத்துடன் மெய்ப்பொருளைக் காணும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகமெங்கும், அனைத்து நாடுகளிலும், மஹிந்தாவுக்கு நல்லதோர் வரவேற்பு இருந்தது. மஹிந்தா எதிர்கொண்டிருந்த சவாலும், மாபெரும் சவால் என்று உலகில் உள்ள அனைவரும் அறிந்திருந்தனர். ரோமில் போப்பாண்டவர், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று அனைத்து நாடுகளின் தலைவர்கள், சமயப் பெரியோர்கள், மத குருமார்கள், சமூக சேவையாளர்கள், சிந்தனையாளர்கள், அறிஞர்கள், அனைவருமே மஹிந்தாவுக்கு மாபெரும் மதிப்பளித்து வரவேற்றனர்.
மஹிந்தா எதிர்கொண்டிருந்த சவால் உண்மையானது; உண்மையான தலைவனால் மட்டுமே, அந்த மாபெரும் சவாலை எதிர்கொள்ள முடியும். மஹிந்தாவுக்கு முன்பு நாட்டின் தலைமைப் பொறுப்பேற்ற ஜனாதிபதிகள் அனைவருமே, பிரச்சனைக்கு தீர்வு காணாமல், ஏனோதானோ என்று வளவள கொழகொழ என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள். மஹிந்தா ராஜபக்சே ஒருவர்தான், உறுதியான நெஞ்சோடு, தீராத பிரச்சனைக்கு தீர்வு காணும் முடிவோடு, செயலில் ஈடுபட்டார். முப்பதாண்டுகள் தொடர்ந்து கொண்டிருந்த பிரச்சனை இன்று முடிவடைந்து விட்டது; தீர்வு காணப்பட்டு விட்டது. ஆனால், மஹிந்தா ராஜபக்சேயின் இன்றைய நிலையைப் பாருங்கள். மஹிந்தா ராஜபக்சே, மிகவும் பரிதாபமான, கேவலமான நிலையை அடைந்து விட்டார். உலகில் எந்த நாடும், எந்த தலைவரும், எந்த சான்றோர்களும், எந்த அறிஞர்களும் மஹிந்தா ராஜபக்சேயைப் பார்க்க, சந்திக்க, சந்தித்து உரையாட ஆர்வம் காட்டுவதில்லை. உண்மையில், வெறுப்புடனும், அருவருப்புடனும் ஒதுக்கப்பட்டு, அவரது மெய்யையும், அவர் சுவாசிக்கும் காற்றையும் தீண்டக்கூடாது என்று ஒதுங்கி செல்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மதிப்பும் மரியாதையும் பெற்று வந்த மஹிந்தா ராஜபக்சே, இன்று அனைத்தையும் இழந்து, உலக மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் நிலையை அடைந்துள்ளார். மஹிந்தாவைப் பார்த்து, என்றும், உலக மக்கள் பயம் கொண்டதில்லை. முன்பு மதிப்பும் மரியாதையும் இருந்தது; இன்று உலக மக்கள், வெறுத்து, அருவருப்புடன் ஒதுக்கப்படும் நிலையில் இருக்கின்றார்.
முப்பதாண்டு பிரச்சனையின் தீர்வு காணும் வழி, அறவழியாக அமைந்திருந்திருந்தால், நல்லறத்தை, மஹிந்தா கடைப்பிடித்திருந்தால், உலகளவில் இன்று மஹிந்தா ராஜபக்சே, மாபெரும் தலைவராக உருவெடுத்திருந்திருப்பார். நோபல் அமைதிப் பரிசு எல்லாம் அவரது காலில் வந்து விழுந்திருக்கும். அறவழியில் சென்று இருந்தால், உலக மக்கள் அனைவரின் உள்ளத்தில் இடம் கிடைத்திருக்கும். உலக நாடுகள் மட்டும் இன்றி, உலக மக்கள் தங்களது வீடுகளில் மஹிந்தா ராஜபக்சேவை வரவேற்று, நல் விருந்தளித்திருப்பார்கள். உலகமெங்கும் இருந்து, மக்கள் இலங்கைக்கு ஓடிவந்து குவிந்திருப்பார்கள், இந்நேரம். அதுதான் மாபெரும் வித்தியாசம்; அறச் செயலுக்கும், அறம் இல்லாத செயலுக்கும். தீர்வு கண்டாகி விட்டது. ஆனால், மஹிந்தா ராஜபக்சே சென்ற வழியை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக, இரண்டு ஆண்டுகளில், மாபெரும் உயரத்தில் இருந்து, அகழ பாதளத்துக்கு வீழ்ச்சி அடைந்தது, மஹிந்தா ராஜபக்சே.
வீழ்ச்சி அடைந்தது மஹிந்தா ராஜபக்சே மட்டுமல்ல; தன்னோடு சேர்ந்து, தன் நாட்டு மக்களையும் உலக அரங்கில் வீழ்ச்சி அடையச் செய்து விட்டார். போரின் வெற்றி என்று சில மாதங்கள் கொண்டாட்டம், கேளிக்கை என்று கழித்தாகி விட்டது; அதன் பிறகு, அந்த தேர்தல், இந்த தேர்தல் என்று அந்த கேளிக்கைகளும் முடிந்தாகி விட்டது; அதன் பிறகு, திரைப்பட விழா என்று அந்த கேளிக்கையும் நிறைவு பெற்று விட்டது. கைவசம், இனி கேளிக்கை, தமாஷ், சர்க்கஸ் என்று எதுவும் இல்லை; இனி வேறு வழியேயில்லை; உண்மையான வறுமையை, பொருளாதார சீரழிவை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. தற்பொழுது, உலக மக்கள், மஹிந்தா ராஜபக்சேவை வெறுத்து ஒதுக்கி வைத்து விட்டார்கள்; இனி, இலங்கை மக்கள் விழித்தெழுவார்கள்; வறுமையில்தான் விழிப்புணர்வு பிறக்கும்; மஹிந்தா ராஜபக்சேவின் போலித்தனத்தில், மதி மயங்கி இருக்கும் மக்கள், விழிப்புணர்வு அடையும்போது, ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கும்; அந்த புரட்சி, இராணுவ புரட்சியாக அமையும்போது, அனைத்து மக்களும் அடிமைகள் என்ற நிலையை அடைவார்கள்; அல்லது, அந்த புரட்சி, மக்களின் எழுச்சியாக அமையும்போது, அனைத்து மக்களும் சுதந்திரம் என்ற நிலையை அடைவார்கள். ஆக, பிரிவினைகள் மறைந்து, இலங்கை ஒன்றான இலங்கையாக உருவெடுத்து வருகிறது. ஒருங்கிணைந்த இலங்கையில், அனைவரும் அடிமைகள் அல்லது அனைவரும் சுதந்திரமான மனிதர்கள் என்ற நிலையை விரைவில் அடைவார்கள். போகின்ற போக்கைப் பார்க்கும்போது, இராணுவப் புரட்சி தோன்றி, அனைவரும் அடிமைகள், என்ற நிலையைத்தான் தெளிவாக காணமுடிகின்றது. ஆக, அடிமைகள் அனைவரும் சமம்; இதுதான் நாளைய இலங்கை.
சரத் பொன்சேகா.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருந்தார். இன்று சிறையில் அடிமையாக, தூக்கு தண்டனையா அல்லது விடுதலையா என்று தெரியாத நிலையில் இருக்கின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை மக்கள், சரத் பொன்சேகாவுக்கு உயர் மதிப்பும், மரியாதையும் அளித்து வந்தனர். இன்று உலகளவில், மக்கள், சரத் பொன்சேகாமீது மதிப்பும், மரியாதையும் உயர்ந்திருக்கின்றது. சரத் பொன்சேகாவின் மனைவி, இன்றும் மாபெரும் தலைவியாக உருவெடுத்துக் கொண்டு இருக்கின்றார். சரத் பொன்சேகாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் மீது வெறுப்பும், பயமும் கொண்டிருந்தனர். இன்று அந்த வெறுப்பு, பயம் சிறிதளவு தணிந்து கொண்டு இருக்கின்றது.
சரத் பொன்சேகா, தன் வாழ்நாளில் எடுத்த தவறான முடிவு: ரணில் விக்ரமசிங்கேவுடனும், மற்றைய அரசியல் தலைவர்களுடனும் கூட்டுச் சேர்ந்தது. அரசியல்வாதிகள் எல்லாம் கோமாளிகள் என்று சொல்லிவிட்டு, அந்த கோமாளிகளை முழுமையாக நம்பி, களத்தில் இறங்கியதுதான், சரத் பொன்சேகா செய்த மாபெரும் தவறு. அரசியல்வாதிகள் என்ற கோமாளிகள், இன்று சரத் பொன்சேகாவை கோமாளியாக்கி, பலி கடாவாக்கி விட்டனர்.
முன்பு, மஹிந்தா ராஜபக்சே, பிரபாகரனைக் கண்டு பயந்து இருந்தார்; இன்று, சரத் பொன்சேகாவைக் கண்டு, மஹிந்தா பயந்து இருக்கின்றார். இந்த பயத்தினால், மஹிந்தா எடுக்கும் முடிவுகள், மாபெரும் அழிவினை ஏற்படுத்தி விடும். சரத் பொன்சேகாமீது ஏற்பட்ட பயம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகுமேதவிர குறைவதற்கு வாய்ப்பில்லை.
ஆக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை தீவில் பிரிவினை, மொழி அடிப்படையில் அமைந்திருந்தது. இன்று பிரிவினை நீங்கி, அனைவரும் அடிமை என்ற சூழ்நிலை உருவாகி வருகின்றது. மக்கள் அடிமைகளாகும்போது, மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயம் கொள்ளும் சூழல் உருவாகும். அரசாங்கமும், மக்களைக் கண்டு பயம் கொள்ளும் சூழல் உருவாகும். பயம் கொண்ட அரசாங்கம், பாதுகாப்பினை அதிகரிக்கும். அதிகமான இராணுவம், போலிஸ், துப்பாக்கி என்று அனைத்தும் அதிகரிக்கும்; பாதுகாப்பு நடவடிக்கைகள், மேலும் மக்களை அரசாங்கத்திடமிருந்து பிரித்து வைக்கும்; பயம் அதிகரிக்கும்; பயம் அதிகரித்து, எழுச்சியும், புரட்சியும் வெடித்து, அனைவரும் விடுதலை அடைவர். அதுவரை, சரத் பொன்சேகா அடிமை என்ற நிலையில் இருக்க வேண்டும்.
பிரபாகரன்.
இரண்டு ஆண்டுகள் முன்புவரை, இலங்கை மக்கள் அல்லாது, உலக மக்களே பிரபாகரனைக் கண்டு பயம் கொண்டிருந்தனர். இன்று, அந்த பயம் முற்றிலும் நீங்கிவிட்டது. பிரபாகரனைக் கண்டு உலகில் மக்கள் எவரும் பயம் கொள்வதில்லை, இப்பொழுது. பயம் விலகிய நிலையில், உலக மக்கள் அனைவருமே, பிரபாகரன் போராடிய காரணம் என்ன? யாரிடம் இருந்து விடுதலை கேட்டு போராடினார்? ஏன், எதற்கு, எந்த அடிப்படையில், அவர்களுக்கு விடுதலை, சுதந்திரம் மறுக்கப்பட்டது. அவர்களது போராட்டத்தின் நோக்கம், நியாயம் என்ன, என்ற கேள்விகளுக்கு விடையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர், உலக மக்கள். பயம் விலகினால், மக்கள் மனதில், மதிப்பு, மரியாதை, அன்பு குடி கொள்ளும்.
முன்பு, பிரபாகரன், பாதுகாவலர்கள் சூழ, பதுங்கு குழிகளில், உயிருக்கு பயந்து பதுங்கி வாழும் நிலை இருந்தது. இன்று, சரத் பொன்சேகா, சுதந்திரத்தை இழந்து, சிறையில் அடைபட்டு இருக்கின்றார். அதைத்தவிர, ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்சேயும், பாதுகாப்பு கருதி, எப்பொழுதும், படை வீரர்கள் சூழ்ந்து இருக்க, மாபெரும் மாளிகையைப்போல் தோற்றமளிக்கும் சிறைச்சாலையில் அடைபட்டு, சுதந்திரத்தை இழந்து இருக்கின்றார். ஆக, இன்றைய நிலையில், மஹிந்தாவும், சரத் பொன்சேகாவும், நிலை தாழ்ந்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
இன்றும், இலங்கை பாராளுமன்றத்தில், மாதம்தோறும் எமர்ஜென்சி தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. தொடரும் எமர்ஜென்சி, அரசாங்கத்தின் பயம் அதிகரிக்கின்ற என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. அரசாங்கம், முன்பு தமிழ் மொழி பேசும் மனிதர்களைக்கண்டு பயந்து கொண்டு இருந்தது. அந்த பயம் இன்று விலகிவிட்டது. இன்று அரசாங்கம், அனைத்து மக்களையும் கண்டு பயந்து கொண்டு இருக்கின்றது. அரசாங்க அதிகாரிகள், இராணுவ வீரர்கள், புத்தமத குருமார்கள் என்று அனைவரையும் கண்டு, இன்று அரசாங்கம் பயம் கொண்டு இருக்கின்றது.
பயம் நிறைந்த சூழலில், இலங்கையில் இருந்து மக்கள் வெளி உலகுக்கு சென்று வர முடியவில்லை; வெளி உலகத்தினரும், இலங்கைக்கு வந்துபோக முடியவில்லை. ஆதலால் இலங்கையில் பொருளாதாரம் சீரழிந்து கொண்டு இருக்கின்றது. இராணுவத்தினாலும், மத குருக்களினாலும், பொருளாதாரத்தை மேன்மை அடையச் செய்ய முடியாது. சுதந்திரத்தை பரிபூர்ணமாக அனுபவித்து வாழும் மக்களே, புதுமையான செயலில் ஈடுபடுவர்; புதுமையே பொருளாதாரத்தை மேம்படுத்தும். அதுவரைக்கும், செய்த வேலைக்கு, இந்தியாவிடம் இருந்து கூலியை கேட்டு வாங்கிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை - மஹிந்தாவுக்கு. இந்தியாவும், பேசின கூலியை, செய்து முடித்த வேலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம்; கூலி கொடுத்து முடிந்தவுடன், போட்டுக் கொண்ட ஒப்பந்தம் வெளிவராமல் இருக்க, இந்தியாவை மஹிந்தா ராஜபக்சே மிரட்ட ஆரம்பித்து விடுவார். ஆக, இலங்கையின் குழப்பத்தில், இந்தியாவும் சிக்கிக் கொண்டது. பழைய பிரச்சனைக்கு தீர்வு கண்டாகி விட்டது; புதிய சிக்கல், இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும் என்று தெரியவில்லை. அதுவரை, மஹிந்தா மிரட்டும் போதெல்லாம், இந்தியா, பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம். கொடுக்கும் பணத்துக்கு காரணம் சொல்ல, அங்குள்ள தமிழர்களின் வாழ்வு முன்னேற்றம் என்று கூறி, இந்தியா மக்களை ஏமாற்றி வருகிறது.
ஆக, பிரபாகரன் விடுதலை அடைந்து விட்டார்; மற்ற அனைவரும், ஒருவருக்கு மற்றொருவர் அடிமை என்றாகி விட்டனர். சரத் பொன்சேகாவுக்கு, மஹிந்தா அடிமை; மஹிந்தாவுக்கு, இந்தியா அடிமை. மக்கள் எழுச்சி அல்லது இராணுவ புரட்சி ஏற்படும் வேளையில், அனைவரும் விடுதலை அடைவர். ஆக, மஹிந்தாவின் தொடரும் மிரட்டலில் இருந்து விடுதலை பெற, இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றது, இலங்கையில் எழவிருக்கும் மக்கள் எழுச்சி அல்லது இராணுவ புரட்சி.