பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான்.
A.R.ரஹுமான், பிறப்பொக்கும் என்ற வாசகத்தைப் பார்த்தவுடன், திருக்குறளை எடுத்து, இது எந்த திருக்குறள்; இந்த திருக்குறளின் அர்த்தம் என்ன: இன்றைய சூழலில், மக்களை வேற்றுமைப் படுத்துவது எது; அதை எப்படி களைவது; வேறுபாடுகள் நீங்கிய பிறகு, மக்கள் அனைவரும் சமம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டார்.
திருவள்ளுவரின் கூற்றுப்படி, மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே; அவரவர் செய்யுந் தொழில்களின் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவையல்ல. ஆக, திருவள்ளுவரும், மக்களின் மனதில் ஏற்பட்டு இருந்த ஏற்ற தாழ்வுகளை நீக்கி, அனைவரும் சமமே என்ற உண்மையை உலக மக்கள் யாவரும் உணரும் வகையில் எடுத்துச் சொல்லி இருக்கின்றார். ஆக, வேறுபாடுகளை நீக்கி, மக்களைச் சமமாக்கும் வேலை, சான்றோர்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது.
முன்பு செய்யுந் தொழில்களின் மூலம், மக்கள் வேறுபடுத்தப்பட்டார்கள். சாதிகளின் அடிப்படையில் செய்யுந் தொழில் அமைந்திருந்தது. ஆக, சாதிகளை ஒழித்தபின்பு, செய்யுந் தொழில் அடிப்படையில் இருந்த வேறுபாடு முற்றிலும் நீங்கிப் போனது. இன்று உலக மக்கள், அந்த நாட்டின் குடிமகன், இந்த நாட்டின் குடிமகள் என்று நாட்டின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகின்றார்கள். நாடுகளில், உள்நாட்டு மக்கள், கட்சிகளின் அடிப்படையில் வேற்றுமை படுத்தப்படுகின்றனர். அந்த வேற்றுமை நீங்கி, மக்கள் அனைவரும் சமம் என்ற நிலை உருவாக, கட்சிகள் என்ற கூண்டுகளில் இருந்து தலைவர்களும் விடுதலையாகி வருகின்றார்கள்; தொண்டர்களும் விடுதலையாகி வருகின்றார்கள். ஆக, சாதிகள் இல்லாத சமுதாயம் உருவானதுபோல், கட்சிகள் இல்லாத சமுதாயமும் வெகுவிரைவில் உருவாகும். ஆக, நாளைய சமுதாயத்தில், கட்சி வேற்றுமையின்றி, குடிமக்கள் அனைவரும் இந்திய தாயின், ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்து, சண்டை சச்சரவு இல்லாத சூழலில் அனைவரும் சமம் என்ற நிலையில் வாழ்வார்கள்.
அருகில் கலைஞர், “தம்பி ரஹ்மான், என்ன, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டது போல் தெரிகிறது,” என்று கேட்டுவிட்டு, பிறகு சொல்ல ஆரம்பித்தார். நான் எழுதிய கவிதைக்கு, இனிமையான இசையமைத்து, இன்று உங்களது இசை வெள்ளத்தில் தமிழக மக்கள் அனைவரும், மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். நிரந்தரமாக, நாம் இருவரும் இணைந்து பணியாற்றினால், தமிழர்கள் குலம் செழித்து வாழும் என்றார்; ரஹுமான், ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். தலைவர் மெல்ல, ரஹுமானைப் பார்த்து, கழகத்தில் நீங்கள் இணைய வேண்டும் என்பது என் அவா, என்றார். ரஹ்மான், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயங்கி நின்றார். உடனே, அவசர அவசரமாக, விபரீதம் நடந்துவிடக்கூடாது என்று அஞ்சி, அன்பழகன், “வேண்டாங்க; அவரை விட்டு விடுங்க; உலகில் ஒருத்தர் சுதந்திரமாக வலம் வந்து விடக்கூடாது. உடனே அவர்களைப் பிடித்து, உங்களது கூண்டில் அடைத்து விடுவீர்கள்,” என்று எடுத்துச் சொல்லி, அன்பழகன் ரஹ்மானைக் காப்பாற்றி விட்டார்.
அன்பழகன், ரஹ்மானைப் பார்த்து, ஆஸ்கார் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையினைப் பற்றி விவரமாக எடுத்துச் சொல்ல கேட்டார். அதற்கு, ரஹ்மான், முதல் தடவை பரிசு வாங்கினவுடன், தன்னோட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனைப் பேருக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டேன்; அடுத்து, உலக அரங்கில் கலை நிகழ்ச்சியையும் நடத்தியாகி விட்டது; ஆதலால், இரண்டாவது பரிசு வாங்கும்போது, என்னையும் அறியாமல் பேசி விட்டேன். அதாவது, என் முன்னே, எப்பொழுதும் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, அன்பு வழி; இரண்டாவது, வெறுப்பு, அதாவது அன்பில்லாத வழி; நான் அன்பு வழியை பின்பற்றியதால், ஆஸ்கார்வரை வந்து இருக்கின்றேன், என்றார்.
உடனே, அன்பழகன், நாங்கள் கடைபிடித்தது, அந்த இரண்டாவது வழி; அதாவது அன்பில்லாத வழி; கடந்த நாற்பதாண்டுகள் செய்திதாள்களை எடுத்துப் பாருங்கள்; நாங்க திட்டி இருந்திருப்போம்; எங்களை அவுங்க திட்டி செய்தி வந்திருக்கும். இரண்டாவது வழியைக் கடைப்பிடித்ததால், எந்த உயரத்தையும் அடைய முடியவில்லை; இருக்கும் இடத்தை தக்கவைப்பதற்கே, அன்றாடம் போராடும் நிலை. அன்பழகன், ரஹ்மானைப் பார்த்து, உங்களுக்கு எப்படி, அப்படி பேச தோணியது என்று கேட்டார்.
அதற்கு ரஹ்மான், பசுவின் மடுவில் இருந்து கறக்கப்படும் பால்; அந்தப் பாலை, பாத்திரம் தன்னுள் தக்கவைத்துக் கொள்கிறது; அடுப்பில் பால் சூடேறும்போது, பால் பொங்கி, தனது சூட்டினைத் தணித்துக் கொள்கிறது; அதன் பிறகு, தன்னை தாங்கிப் பிடித்திருக்கும் பாத்திரத்தை தழுவி, பொங்கி வழிந்து, பாத்திரத்தின் சூட்டினையும் தணித்து விடுகிறது; அதன் பிறகு, மேலும் பொங்கி, எரிகின்ற அடுப்பினை அணைத்து, அந்த அடுப்பின் சூட்டினையும் தணிக்கின்றது. அதுபோல, மனிதன், தான், தனது குடும்பம் என்று வாழ்கிறான்; அதன் பிறகு, ஊர் மக்களுக்கு தனது சேவையை அளிக்கின்றான். அதுபோல, இரண்டாம் பரிசு வாங்கிய பிறகு, உலகத்தை மனதில் எண்ணியவுடன், அந்த அன்பான வழியைக் கடைப்பிடித்தால், இன்று நான் ஆஸ்கர் வந்திருக்கின்றேன் என்றேன், என்றார் ரஹ்மான்.
ரஹ்மான் சொல்வதைக் கேட்டு ரசித்துக் கொண்டு, கலைஞர் சொல்கிறார், “அன்பழகன், அருமையான இலக்கியவாதி; அவரது பேச்சு, எழுத்துக்கள் எல்லாம் கற்பனை வளம் மிகுந்து காணப்படும்.” உடனே அன்பழகன், “அதெல்லாம் அண்ணாதுரை காலத்தோட போயிடுச்சு; அண்ணாதுரை, அனைவரையும் வளரவிட்டார்; மற்றவர்களின் வளர்ச்சியில் அவர் மகிழ்ந்தார். அதன்பிறகு வந்தவர்கள் எல்லாம், அனைவரையும் அடிமைகளாக ஆக்கிவிட்டனர்.” கலைஞர் கவனிப்பதைக் கண்டுகொண்ட அன்பழகன், உடனே சுதாரித்துக் கொண்டு, “நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சொன்னேன்.”
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்,” என்ற அடிப்படையில், நாங்கள் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கின்றோம் என்றார்கள் பெரியவர்கள். ரஹ்மான் சொன்னார், “எல்லோரும் இந்நாட்டு மக்கள், என்ற அடிப்படையில் நடக்கும் மக்களாட்சியே சிறந்தது; மக்களாட்சிக்கு மன்னர்கள் எதற்கு; மன்னர்கள் இல்லையென்றால், அமைச்சர்கள் எதற்கு; இராஜ தந்திரம் இல்லாத மக்களாட்சியே சிறந்தது,” என்று அமெரிக்காவில் சொல்கிறார்கள் என்றார்.
“யாரு இப்படி சொல்றது? ஜார்ஜ் வாஷிங்டனா அல்லது கென்னடியா?” என்று கேட்டார்கள்.
ரஹ்மான் பதிலளித்தார், “அவர்கள் எல்லாம் இல்லை; நம் ஊர்காரங்க; அங்க போய் வேலை செய்கின்றவங்க.”
“அவெங்க தொல்லைதான் பெரும் தொல்லையா போயிடுச்சு. சும்மாவே இருக்க மாட்டேன்கிறாங்க. இங்கே உள்ள மக்களுக்கு எப்படி நடத்தனும் ஆட்சி என்று எங்களுக்குத்தான் தெரியும். அதெயெல்லாம் மாத்தி, புதுசு புதுசா மாற்றங்களைக் கொண்டு வந்தா, அப்புறம் அரசியலையே பொழப்பாக நடத்திக்கிட்டு இருக்கின்றவங்க பொழப்பு என்ன ஆவது? நாம அமைத்துக் கொடுத்த இடஒதுக்கீடுவினால் மேல்படிப்பு படித்தவர்கள், இன்று இந்தியாவில் மக்களாட்சி சீர்திருத்தம், அமெரிக்காவின் அரசியலமைப்பு என்று சீர்திருத்தம் நமக்கு தேவைதானா? இட ஒதுக்கீட்டினால்தானே, இன்று நீங்கள் ஆஸ்கர்வரை சென்று பரிசுகள் வாங்க முடிந்தது.”
உடனே அன்பழகன், “இவருக்கு மணிரத்னம் வாய்ப்பளித்தார்; அவரது சொந்த முயற்சியில் முன்னேறி, ஆஸ்கர் வரை சென்று இருக்கின்றார். இட ஒதுக்கீடு என்று சலுகையில் எவனும் முன்னேறவில்லை; இங்கேயேதான் நம்ம அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றனர்.” அன்பழகன், ரஹ்மானைப் பார்த்து, “கோவையில் விழாவுக்கு கண்டிப்பாக வந்துடணும் என்றார்.” அதற்கு ரஹ்மான், “அந்த நேரத்தில், அமெரிக்காவில் இசை விழா நடக்கின்றது,” என்றார். உடனே அன்பழகன், “இப்படியே எல்லோரும் தப்பிச்சு போயிட்டா, நாங்க மட்டும் எப்பவும் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்ள வேண்டுமா,” என்றார் அலுப்புடன். “வேற யாரு எல்லாம் தப்பிச்சு போயிட்டாங்க,” என்ற கேள்விக்கு, அன்பழகன், “கமலஹாசன் வெளி நாட்டு படப்பிடிப்பு என்று ஓடிவிட்டார். அப்துல் ஹமீது, இலங்கை ரேடியோ புகழ், அவர் அமெரிக்கா ஓடிவிட்டார்.”
ரஹ்மான், உலக அளவில் நடத்தப்போகும், தன்னோட இசை நிகழ்ச்சியின் நோக்கத்தை விரிவாக எடுத்துச் சொன்னார். இந்தியா என்பது பல்வேறு மொழி, மதம், இனம் என்று மக்கள் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர்கள் என்று ஒன்றுபட்டு வாழும் நாடு; நீங்க இங்க சொன்னபடி, பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்; இதுதான் எங்களோட இசை நிகழ்ச்சியின் நோக்கம்; பல மொழிகளிலும் பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி நடத்துகின்றோம் என்றார். நிகழ்ச்சியில் தமிழர்கள், ஆரியர்கள், திராவிடர்கள் என்று வேற்றுமைப் படுத்தி பார்க்காமல், மனிதர்கள் என்று அனைவரும், அனைத்து மாநிலத்தவரும் பங்கேற்கின்றனர்.
இனிவரும் காலங்களில், இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், இலங்கை, சீனா, ஜப்பான், ஸ்பானிஷ், அராபிக் என்று உலக அளவில் அனைத்து மொழி மக்களையும் இணைத்து உலக அரங்கில் விழா நடத்தும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றார், ரஹ்மான். உடனே பெரியவர்கள் பேசிக் கொள்கிறார்கள்; “ஏன்யா, பாகிஸ்தான் பாய்மார்கள் என்றால், அவுங்க திராவிடர்கள் தானே. அவுங்க பாய்மார்கள் என்றாலும், வடக்கத்தியவர்கள்; நம்மைப் பொறுத்தவரை, வடக்கத்தியவர்கள் எல்லாம், ஆரியர்கள்.”
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை; எந்த மதமும் இல்லை; எந்த சாதியும் இல்லை; தமிழனும் இல்லை; ஹிந்திக்காரனும் இல்லை. அனைவரும் மனிதர்களே; அதுவே சிறப்பு; அதுவே என்றும் ஒவ்வும் சிறப்பு,” என்று எடுத்துச் சொல்லி, சிறகடித்துப் பறந்து விட்டார், ரஹ்மான்.