இணைக்கும் தேசியவாதிகள்.
  • Tamilnadu Legislature Members

    சட்டப்பேரவை சிற்றுண்டி வளாகம். மக்களின் பிரதிநிதிகள், மக்கள் சேவையாற்றி களைத்து, களைப்பு நீங்க ஓய்வெடுத்துக் கொண்டு, சுடச்சுட உளுந்த வடையை சாப்பிட்டுவிட்டு, காப்பி அருந்திக் கொண்டிருந்தார்கள்.

    அங்கிருந்து பன்னீர்செல்வம் வந்தமர்ந்து, “செங்கோட்டையன், உங்க புரோகிராம் என்ன?” என்று கேட்டார். “ஒண்ணும் பிரமாதமாக இல்லையண்ணே. ஊருக்குப்போக வேண்டியதுதான். நானும், பொள்ளாச்சி ஜெயராமனும், இன்னைக்கு ராத்திரி, கோவை எக்ஸ்பிரஸில் போகின்றோம்.”

    உடனே, அருகில் அமர்ந்திருந்த ஜெயக்குமார், “ஆக, செம்மொழி மாநாட்டுக்கு எல்லோரும் கிளம்பிட்டீங்க. இருங்க. அம்மாகிட்டே உங்களை போட்டுக் கொடுக்கின்றேன்.”

    “என்னங்க இது வம்பா போச்சு. எங்க ஊரு கோயம்புத்தூர். இவங்க மாநாடு நடத்துறாங்க என்பதற்காக, நாங்க என்ன குற்றாலத்துக்கா போக முடியும்.”

    செம்மொழி மாநாட்டுக்கு போறது தப்பா. இதிலே எதுக்கு அரசியல். மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில்; அதையும்தவிர, தமிழார்வத்தில், பல அறிஞர்கள் ஆற்றும் உரையினை, செவிக்கொடுத்து கேட்கும்போது, கேள்வி ஞானமும் வளரும்; தமிழ் அமுதத்தை பருகிய மனதிருப்தியும் அடையும். ரகுமான் இசையில், கலைஞர் எழுதிய பாட்டினைக் கேட்டீர்களா; நல்லாதானே இருக்கு.

    பாட்டு; அதன் இசை; அதனைப் பாடியவர்கள்; எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால், அதன் பொருள்படி எதுவும் இல்லையே. திருவள்ளுவரின் கூற்றுப்படி, மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே; இங்கே, இந்த சட்டப்பேரவையை எடுத்துக்கொள்ளுங்கள்; நாம எல்லோரும் தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் வாக்களித்து, நம்மை, அவர்களின் பிரதிநிதிகளாக, சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது உண்மையானால், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் சமமே. ஆனால், உண்மை நிலைமை என்ன? ஆளுங்கட்சி எம்.எல்.யே; எதிர்கட்சி எம்.எல்.யே என்று வேற்றுமைபடுத்தப்பட்டு இருக்கின்றோம். சிறப்பொவ்வா நிலைமை, சட்டப்பேரவையிலே இருக்கு.

    ரொம்ப வருத்தப்பட்டுக்காதீங்க அண்ணே. சட்டப்பேரவை சிற்றுண்டி வளாகத்திலே, நாம எல்லோரும் சமம்தானே; சட்டப்பேரவை கழிப்பறையில், இது ஆளுங்கட்சி எம்.எல்.யேக்கள் கழிப்பறை; இது எதிர்கட்சி எம்.எல்.யேக்கள் கழிப்பறை என்று வேற்றுமைப் படுத்தப்படுவதில்லையே. அண்ணே, நம்ம நிலைமை எவ்வளவோ தேவலை; இன்னைக்கு கெத்தா, எதிர்கட்சி எம்.எல்.யே என்று ஆளுங்கட்சியின் குறைகளை, மக்கள் சார்பில் எடுத்துரைக்கின்றோம். நாளைக்கு நாம, ஆளுங்கட்சியாகக்கூடிய வாய்ப்பும் உண்டு. ஆனால், பாவம் காங்கிரஸ். எப்பவும் பல்லாக்கு தூக்குகின்ற கட்சி. ஒண்ணு, அவுங்களுக்கு பல்லாக்கு தூக்குவாங்க; இல்லாவிடில், நமக்கு பல்லாக்கு தூக்குவாங்க. எனக்கெல்லாம், கோடிக் கொடுத்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் போகவே மாட்டேன்.

    யோவ். அக்கம்பக்கம் பார்த்து பேசுங்கப்பா; அடுத்த டேபிளில், யசோதா அக்காவும், சுதர்ஸனம் நைனாவும் காப்பி சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.

    உடனே, அவர்கள் இருவரும் திரும்பி, “சும்மா பேசுங்க. ஒண்ணும் தப்பா சொல்லலையே; உண்மையைத்தானே சொல்கிறீர்கள். பல்லாக்கு தூக்குறதுதானே எங்களது தொழிலாப் போயிட்டுச்சு. இப்ப அவுங்களுக்கு பல்லாக்கு தூக்குகின்றோம்; நாளைக்கு உங்களுக்கு பல்லாக்கு தூக்குவோ; அடுத்து, எங்களது தலைமுறையினர், விஜய்காந்துக்கு, இல்லை வேறுயாரெல்லாம் வருகிறார்களோ, அவுங்க எல்லாத்துக்கும் பல்லாக்கு தூக்குவாங்க; அதுக்குத்தான், இளைய சமுதாயத்தை, நாங்கள் தயார் செய்து கொண்டு இருக்கின்றோம்.”

    சுதர்ஸனம் நைனாவும், யசோதா அக்காவும் நொந்துப்போய் பேசுவதைக்கேட்டு, இவர்களுக்கு சங்கடமாகப் போய்விட்டது. அவர்களைக் கொஞ்சம் தேற்றுவதற்காக, இப்பத்தான், ராகுல் அடிக்கடி இங்குவந்து, இளைய சமுதாயத்துக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றாரே. ஆக, கூடிய விரைவில் நீங்களும் ஆளுங்கட்சியாகி விடுவீர்கள். ராகுல், அன்றுவந்து, இளைய சமுதாயத்தினரிடம் கேட்டு இருக்கின்றார், “காங்கிரஸ், தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா,” அதற்கு, இளைய தலைமுறையினர், நம்பிக்கையோடு பதில் அளித்திருக்கின்றார்கள். அவர்கள் காட்டிய உற்சாகத்தைக்கண்டு, “நீங்கள் நன்கு சேவையாற்றுங்கள். உங்கள் செயலாற்றலுக்குத் தகுந்த பதவி உங்களைத் தேடி வரும்,” என்று உறுதி அளித்திருக்கின்றார் ராகுல். உண்மையிலேயே, அசந்து போய்விட்டேன். புதிய இளைய சமுதாயத்தினர், ராகுலைக் கண்டு பயம் கொள்ளாது, கேள்வி கேட்கிறார்கள், “ராகுல், நீங்க இருப்பது டெல்லியில்; இங்கே நாங்க எப்படி சேவையாற்றுகிறோம் என்று உங்களுக்கு எப்படித் தெரியவரும். எங்களது செயலாற்றலைத் தெரியாமல், நீங்கள் எப்படி பதவி வழங்க முடியும்,” மிகத் தெளிவாக கேட்டனர். அதற்கு, ராகுல், “நீங்கள் அதைப்பற்றிய கவலைப்படத் தேவையில்லை. நான் இங்கு ஒற்றர்களை நியமனம் செய்திருக்கின்றேன். அவர்கள் மூலம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், எனக்கு உடனடியாக வந்து சேரும்.”

    சுதர்ஸனம் அவர்கள் நிதானமாக பேச ஆரம்பித்தார். “தம்பீ, உங்க வயசு, எனது அரசியல் வாழ்க்கை. எது நடக்கும்; எது நடக்காது என்று தெளிவாகத் தெரியும்; நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, மேலும் இவர்களைத் தவிர, வாஜ்பாய், ஜெயப்பிரகாஷ் நாரயணன், பெர்ணாண்டஸ், சுப்பிரமணிய சாமி - இன்னும் பல தலைவர்கள், வடக்கே இருந்து வந்து முட்டிமோதிப் பார்த்து விட்டார்கள்; ஒண்ணும் பருப்பு வேகலை; யதார்த்தம், உண்மையென்னவென்றால், மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியே, இங்கேவந்து தேர்தலில் களம் இறங்கினால், வெற்றியை உறுதியாகச் சொல்ல முடியாது.

  • Tamilnadu Legislature Members

    தலைவன் என்பவன், தன்னம்பிக்கையோடு மற்றவர்களுக்கு வழிநடத்தி செல்பவனாக இருக்க வேண்டும். ஆலோசனை கேட்கலாமே தவிர, எனக்கு நம்பிக்கையில்லை; எனக்கு எப்படிப் போவதென்று வழி தெரியலை; உங்களைத்தான் நான் நம்பி இருக்கின்றேன்; என்னாலே தமிழகத்துக்கு முதல்வராக முடியாது; ஆதலால், நீங்க யாராவது முதல்வராக ஆனால், எனக்கு அது ஆதாயமாக இருக்கும்; இந்த பாணியில் பேசக்கூடாது. ராகுலே யோசித்துப் பார்க்க வேண்டும்; தான், தமிழக முதல்வராவதற்கு என்னவென்ன காரியங்கள் செய்வேன்; எப்படி செய்வேன் என்று யோசித்தாரானால், அவருக்கு தெளிவான வழி பிறக்கும். என்னாலே தமிழக முதல்வராக முடியும்; ஆனால், எனது கனவு, இந்தியாவுக்கே பிரதமராவது என்ற வகையில் செயலாற்ற வேண்டும். அதைவிட்டுப்புட்டு, தன்னாலே முடியாது; அதுக்குத்தான் ஆளைத்தேடிக்கிட்டு இருக்கேன் என்ற பாணியில் அமைந்தால், பலன் தராது.

    அதையும்தவிர, இளைய சமுதாயம் ராகுலை, நல்லதோர் கேள்வி கேட்டு இருக்காங்க. நாங்க இங்க தமிழ்நாட்டிலே சிறப்பா செயலாற்றுவதை, எப்படி நீங்கள் அறீவீர்கள் என்று; அதற்கு அவர் சொன்ன பதில், அதுக்கெல்லாம் ஆளை வைச்சிருக்கேன் என்பது ரொம்ப கத்துக்குட்டித்தனமான பதில். இப்ப, எங்களது இயக்கத்தில் உள்ள இளைய சமுதாயத்தினர், தங்களை யாரோ கவனித்துக் கொண்டு இருக்கின்றார் என்ற அச்சத்தோடு, மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறார்கள். அதைத்தவிர, சாமிக்கு மாலைபோட்டவங்க, எப்பப் பார்த்தாலும், என்ன சாமி, சாப்டீங்களா சாமி, சொல்லுங்க சாமி, எங்க சாமி இத்தனை தூரம், என்பது போல், டீக்கடையில் டீ சாப்பிடும்போதும், ராகுல் புராணம்தான் பாடுகிறார்கள்.

    ஆளை வைச்சு வேவு பார்க்கின்றேன் என்று சொல்வது சரியான செயல் அல்ல. அன்னைக்கு, என் மக வீட்டுக்கு வந்தா; அவ அம்மாவிடம் தனியா பேசினா; என் பொஞ்சாதி, எங்கிட்டே, நம்ம மவ உண்டாகி இருக்கா என்று சொன்னா; எனக்குன்னா ரொம்ப சந்தோசம்; அவ்வளவுதான்; பலனைப் பார்த்து செயலாற்றலை அறியவேண்டும். மாப்ளே, என் மகளை நன்கு கவனித்துக் கொள்கிறார்; அவுங்க இரண்டு பேரும் இல்லறத்தை இனிதே நடத்துகிறார்கள்; இதுக்குப்போய், நான் ஆளை வைச்சு வேவு பார்ப்பது சரியல்லவே. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா, நீங்கள் எல்லாம் சிறப்பாக செயலாற்றுகிறீர்கள் என்று அறிந்து கொள்வேன்; ஆட்சிக்கு வரலைன்னா, நீங்கள் சிறப்பாக செயலாற்றவில்லை என்பது தெளிவாக தெரிந்துவிடும். அவ்வளவுதான் விஷயம்.

    அதையும்தவிர, தமிழகத்தில் மட்டும் அல்ல; இந்தியாவிலேயே, சுதந்திரம் அடைந்தபிறகு, தலைவனாக உயர்ந்து நின்றவர் - அண்ணாதுரை. மாபெரும் பாரம்பரியமிக்க கட்சி, காங்கிரஸ் கட்சி; நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சி; மாபெரும் தலைவர்கள் பலர் இருந்த கட்சி; அதையெல்லாம் கண்டு, அண்ணாதுரை அச்சம் கொள்ளவில்லை. எந்தவித பொருளாதாரம் இல்லை; அலுவலகம் இல்லை; பூங்காவில் ஆரம்பித்தார் கட்சி; அண்ணாதுரை, நல்லதோர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து விட்டார். அண்ணாதுரை, செயலில் நடத்திக் காட்டிவிட்டார். அண்ணாதுரையின் செயலாற்றல், எந்தக் காலத்திலும், நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்து விட்டது. ஆக, தமிழகம் என்று தனித்துவத்துடனே, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவே திகழும். ஆக, மற்ற மாநிலங்களில், டெல்லியில் இருந்து கொண்டு முதலமைச்சரை நியமனம் செய்வதுபோல், தமிழகத்தில் நடத்த முடியாது. அண்ணாதுரை இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தால், பொறுப்பேற்க வா தம்பீ; அண்ணன் டெல்லி செல்கிறேன் என்று அங்கேயும் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்திருப்பார். அவருக்குபின் வந்தவர்கள் எல்லாம், தம்பீ, சென்னைக்கு வந்துவிடாதே; அங்கேயே, மதுரை, தூத்துக்குடி என்று அங்கேயே இருந்து விடு;

    வருத்தப்படாதீங்க நைனா; இங்கே ஆட்சி இல்லாவிட்டால் என்ன; மத்தியில் நீங்க தானே ஆட்சி; உண்மையிலேயே, தமிழகத்தை இந்தியாவோடு இணைத்து இருப்பது, நீங்க தானே; மத்த கட்சிகளில் இருந்து, மத்தியில் மந்திரி பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்; ஆனால், அவர்கள் இருப்பது, எப்பொழுதும் இங்கேதானே; சிதம்பரமும், டெல்லியில் வேலை செய்யாமல், மற்ற மாநிலங்களுக்கு சென்று சேவை செய்யாமல், எப்பொழுதும், இங்கேயே குடைப் பிடிச்சுக்கிட்டு இருந்தா, தமிழ்நாடு இந்தியாவோடு ஒட்டாமல், தனியாக நின்று கொண்டு இருக்க வேண்டியதுதான்; என்னதான் கோஷ்டி இருந்தாலும், தமிழகத்தை இந்தியாவோடு இணைப்பது, நீங்கள்தான். ஏன் நைனா, இந்த கண்ணதாசன், சம்பத் எல்லாம், திராவிடம் என்ற பெயரில் கட்சி தொடங்கி இருந்தால், தமிழகத்தில் நல்லதோர் இடத்தை தக்க வைத்திருந்திருக்கலாமே. ஏன் அப்படிச் செய்யலை.

    அவர்கள் தேசீயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்; தமிழகம் இந்தியாவோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதால், திராவிடம் என்று கட்சிக்கு பெயர் சூட்டவில்லை. சம்பத், கண்ணதாசன், சிவாஜி கணேசன், காமராஜர், மூப்பனார், குமாரமங்களம் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில்தான், இத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தாக்குப் பிடிக்க முடிந்தது. காங்கிரஸில் உதயமான தலைவர்கள் யாருமே கவர்ச்சி அரசியலில் ஈடுபடவில்லை. ஆதலால், நாற்பது ஆண்டுகளாக உருவாகி இருக்கும் போலித்தனம் நிறைந்த சமுதாயம், இப்பொழுது வெளிவரும் இந்த போலித்தனங்களின் பழி, எங்கள் மீது விழாது. இப்ப நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தமிழகத்தை இந்தியாவுடன் இணைக்கும் சக்தியாகவே இருந்திருக்கின்றோம்.

    சரி, இந்த ஒரு வாரத்துக்கு அரசியல் எல்லாம் விட்டுட்டு, கோவைக்கு வாங்க; தமிழமுதம் பருகிட; உங்கம்மா போகக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்களா; இல்லையே; அப்ப வாங்க, என்றழைத்தார்கள் சுதர்சனமும், யாசோதா அவர்களும்.

  • Tamilnadu Legislature Members

    நைனா, கலைஞரது தமிழாற்றல், சொல் ஆற்றல் என்று அவரது அனைத்து ஆற்றல்களையும் உலகில் உள்ள அனைவரும் மதிக்கின்றனர்; நாங்களும் மதிக்கின்றோம்; உண்மையென்னவென்றால், கலைஞரை திட்டுவதற்காகவே, அவரிடமிருந்து தமிழைக் கற்றுக் கொள்கிறோம். இன்றைக்கு, இந்த திருக்குறளையே எடுத்துக்கோங்க; "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்," எங்கேயோ ஆழத்தில் புதைந்திருந்தது; இன்று கலைஞர் எடுத்துச் சொன்னதால், அதன் சிறப்பு சிகரத்தை அடைந்து கொண்டிருக்கின்றது. கலைஞர் சொல்லி இருக்காவிடில், இத்தனை சிறப்பு, இந்த குறளுக்கு வந்து சேர்ந்திருக்காது. சமீபத்தில், அவரிடமிருந்து கற்றுக் கொண்ட விசயம்: கனி, பழம் என்று இரண்டு வார்த்தைகள் இருந்தாலும், பொருள் வேறு; பலாப்பழம் என்று சொல்வதைவிட, பலாக்கனி சிறந்த சொல் என்று அறிந்து கொண்டோம். பலாச்சுளை, பலாக்கனியாக முடியாது.

    கனி என்ற சொல், கனிவைக் குறிக்கும்; பழம் என்ற சொல், காலத்தினால் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும். கனி is a quality; காய் கனிந்து கனியாகின்றது; அந்த கனியின் தன்மை சிறப்பானது; இனியது; இனிமையானது. பழம் - அனைத்துக் காய்களும், காலத்தினால், பழமாகின்றது. அனைத்து மனிதர்களும் காலத்தினால், பெரியோர்களாகின்றார்கள்; ஆனால், ஒரு சில மனிதர்கள், தங்களது கனிவான சொல்லினால், செயலினால், சான்றோர்களாகின்றார்கள். கனிமொழி, பழம்மொழி வித்தியாசம் உண்டு; பழம் மொழி என்பது, காலத்தினால் பழமையான மொழி என்று பொருள்படும்; கனிமொழி என்பது, காலத்தை வென்று, தன்மையினால், என்றும் கனிவான மொழி என்று பொருள்படும்.

    ஆக, கலைஞரது தமிழாற்றலைக் கண்டு வியந்து ரசிக்கின்றோம், நாங்களும்; ஆனால், அவரது உரையில் உள்ள பொருளில் குறை இருக்கின்றது. உதாரணத்துக்கு, அன்றைக்கு ஒரு கூட்டத்தில், “நன்றி மறப்பது நன்றன்று,” என்கிறார். ஒருவர் ஆற்றும் செயலில், மற்றொருவருக்கு பலன் ஏற்படும்; அந்த செயலை ஆற்றியவர், அந்த செயலின் பலனை அடைந்தவர் என்று இருவர் உண்டு. திருவள்ளுவர், “நன்றி மறப்பது நன்றன்று,” என்று சொல்லியது, பலனாளிக்கு; செயலின் பலனை அடைந்தவர், தனது நன்றியறிதலைக் வெளிப்படுத்த வேண்டும். பலனை அடைந்தவர், நன்றி மறக்கக் கூடாது என்று வலியுருத்திச் சொல்லி இருக்கின்றார்.

    கட்டாயமாக, செயலை ஆற்றியவர், சொல்வதற்காக திருவள்ளுவர் சொல்லவில்லை. செயலை ஆற்றியவர், நிச்சயமாக சொல்லவே கூடாது, நன்றி மறப்பது நன்றன்று என்று. ஒரு செயலை ஆற்றியபிறகு, உடனே, “நன்றி மறப்பது நன்றன்று,” என்று சொல்வது வியாபாரம் ஆகிவிடும். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஆற்றும் செயலே, நன்றிக்கு உரித்தான செயலாகும். நன்றியைக்கூட எதிர்பார்க்காமல் ஆற்றும் செயலே நன்றிக்கு தகுதியான செயல். எதிர்பார்ப்பு இருந்துவிட்டால், அது வியாபாரம். நான் இந்த செயலை உனக்கு ஆற்றியிருக்கின்றேன்; பதிலுக்கு, நன்றி மறக்காமல், நீ எனக்கு உன்னுடைய வாக்கினை அளிக்க வேண்டும். அது முழுக்க முழுக்க வியாபாரம். ஆக, பெரியவர்களின் செயலில், சொல்லில், சிந்தனையில் உயர்ந்த நிலையை அடையும்போது, அவர்களது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும். அவர்களது சொல்லின் பொருளை மக்கள் உணருவார்கள்; மெய்ப்பொருளையும் மக்கள் காண முயற்சி மேற்கொள்வார்கள்.

    சரி, நாங்க கலைஞரை சந்தித்து, மாநாட்டுக்கு வாழ்த்து சொல்லப் போகின்றோம் என்று கிளம்பி விட்டார்கள், சுதர்ஸனமும், யசோதா அவர்களும், கையில் பொன்னாடையுடன். அறைக்குள் நுழைந்தவுடன், “என்ன நாயுடு, கூட்டணி மாற்ற பேச்சு வார்த்தைகள் ஆரம்பிச்சுட்டேங்களா; உளவுத்துறையினர் மூலம் எனக்குச் செய்தி வந்தது. சிற்றுண்டி வளாகத்தில், நீங்கள் இருவரும், அவர்களோடு நடத்திய பேச்சு வார்த்தை.” உடனே சுதர்ஸனம், கலைஞரிடம் தங்களோட உரையாடலை எடுத்துச் சொன்னார். அதற்கு கலைஞர், இது கட்சி மாநாடு இல்லையே; மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில், அவர்கள் மாநாட்டில் பங்கேற்கலாம்; அல்லது தமிழ் மக்கள் என்ற வகையிலாவது, மாநாட்டில் கலந்து கொள்ளலாம்; அவர்களை அழைத்து வாருங்கள், நான் பேசுகிறேன் என்றார்.

    உடனே, சுதர்ஸனம், சிற்றுண்டி வளாகத்துக்கு விரைந்து வந்து, அவர்களை, கலைஞர் அழைக்கின்றார் என்று சொல்லி, கலைஞரது அறைக்கு அழைத்துச் சென்றார். தயக்கத்துடன், மக்கள் பிரதிநிதிகள் அங்கு சென்றனர். கலைஞர், அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, நலம் விசாரித்து, பிறகு பேசினார். “இது முழுக்க முழுக்க, தமிழக அரசினால், தமிழுக்காக எடுக்கப்படும் விழா. இது எங்க கட்சி மாநாடு அல்ல. சில வாரங்களுக்கு முன்னர், எங்க கட்சியினருக்குத் தெளிவாக எடுத்துரைத்தேன். இது கழக மாநாடு அல்ல; இது தமிழறிஞர்கள் மாநாடு என்று; அந்த உரை அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும். ஆக, கட்சி வேறுபாட்டினை மறந்து, மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில், அல்லது மக்கள் என்ற முறையில், நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.”

    இதெல்லாம் மாபெரும் மாற்றம். புறத்தில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் நிறைவேற்றி விடலாம். அகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது எளிதல்ல. ஆனாலும், முயற்சி கைவிடக் கூடாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மெய்ப்பொருளை அனைவரும் உணரவேண்டும்; அதையும்தவிர, வேற்றுமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள், மக்கள், என்ற உண்மையையும் மக்கள் உணரவேண்டும். இந்த இரண்டையும் உணரும்போது, மாற்றம் ஏற்படும்; மாற்றம், அகத்தில் ஏற்படும்.

    இதே தமிழகத்தில், சிவாஜி கணேசன், எம்.ஜி.இராமச்சந்திரன் என்று செய்யுந் தொழில்களின் வேறுபாட்டால், மக்கள் வேற்றுமைப் படுத்தப்பட்டு வாழ்ந்தார்கள். இன்று நிலை மாறிவிட்டது; மக்களின் அகத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இன்று கமலஹாசன், ரஜினிகாந்த் செய்யுந் தொழில்களினால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் நிகரானவையல்ல என்று உணர்ந்து, எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் என்ற உண்மையை, தாங்களும் உணர்ந்து, தங்களைச் சார்ந்தவர்களும் உணரும்வகையில், மாற்றங்களை அகத்தில் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.