மாற்றங்களும்; தடுமாற்றங்களும்.
  • Human Ladder

    இப்பூவுலகில், பல் வேறு பிரிவுகள், வேறுபாடுகள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், மற்றும் தாவரங்கள் என்று பல பிரிவுகளை காணமுடிகிறது. பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கவிஞர் பாடிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது. பறவைகளைப் போல், விலங்குகள் பல விதம்; நீர் வாழ் உயிரினங்கள் பல விதம்; தாவரங்கள், செடி, கொடி, மரம், காய், கனி, கிழங்கு என்று பல விதம். பூமியின் பரப்பினுலும், நிலம், கடல், பாலைவனம், சோலை, காடு என்று பல விதம். அதுபோல, மனிதர்களிலும், ஆண், பெண் என்று மாபெரும் பிரிவு, வேறுபாடு இயற்கையாகவே அமைந்திருக்கின்றது. உண்மையென்னவென்றால், இயற்கை படைத்த பிரிவுகள் அனைத்தும் அழகானவையாகவும், அற்புதமானதாகவும் அமைந்துள்ளன.

    ஆண் - பெண் என்ற பிரிவு, அழகான, இயற்கையான பிரிவு. இந்திய பாராளுமன்றத்தில், மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதால், இனி பாராளுமன்றத்துக்கும், சட்டப் பேரவைக்கும், மகளிர் அதிகம் வருவார்கள். ஆண் - பெண் என்று பேரவையில் மக்களின் பிரதிநிதிகள் அலங்கரிக்கும்போது, இயற்கையிலேயே பேரவையின் அழகு மேலும் கூடும்.

    இட ஒதுக்கீடு வழங்கி, யாரையும் முன்னேற்ற முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதுதான் சரியான கொள்கை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னமே, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்திருந்தால், அது, மகளிரின் மீதுள்ள பரிதாபத்தினால், அவர்களுக்கு வழங்கிய சலுகை என்று அமைந்திருக்கும். தற்பொழுது, அவர்கள் உரிமைக்காக போராடி, மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. இன்று, இந்த மசோதா, இட ஒதுக்கீடு அல்ல; சலுகை அல்ல; மகளிர் மீதுள்ள பரிதாபம் அல்ல. இன்றைய மகளிர்கள், அனைத்து தகுதியுடன், போராடி, தங்களது உரிமையை நிலைநிறுத்தி இருக்கின்றார்கள். இது, இன்றைய மகளிர், இயற்கையிலேயே அடைந்த வளர்ச்சி.

    இன்றைய ஆண்களும், அன்றைய சிவபெருமான் போல், சக்தியின் அருமை, பெருமைகளை அறிந்து, தன்னுள் பாதி என்று சம நிலையை அளித்தது போல், இன்று மகளிர் மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றார்கள். ஆக, இது, ஆண் - பெண் இருவருக்குமே கிடைத்த நற்பலன். பாரதி கண்ட பெண்ணாக, இந்திய மகளிர் உருவெடுத்து வருகிறார்கள்; ஆண்களும், சிறந்த பண்பாட்டை, நற்குணத்தை, நல்ல பக்குவத்தை அடைந்து வருகிறார்கள்.

    மாற்றங்கள்; மிகச் சிறந்த மாற்றங்கள்; வரவேற்கவேண்டிய மாற்றங்கள். ஆண்-பெண் சம நிலை அடையும்போது, அங்கு ஆக்க வேலைகள், அன்போடும், பன்போடும், இனிதாகவும், இன்பமுடனும் நிறைவேறும். வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்; சுதந்திரத் தியாகிகள் அனைவரது ஆசியுடன், மக்களாட்சி செழித்தோங்கும். நாடு, தேசம் என்பது மக்களை ஒன்று சேர்த்து, இணைக்கும் சக்தி; இந்த ஆண்-பெண் சம நிலை, இயற்கையான சக்தி; நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்ல சக்தி; மக்கள் அனைவரையும் இணைக்கும் சக்தி.

    மாற்றங்கள் ஏற்படும்போது, சில தடுமாற்றங்கள் ஏற்படுவதும் இயற்கை. நாடு, தேசம் என்பது மக்களை இணைக்கும் சக்தி; கட்சி என்பது மக்களை பிளவுபடுத்தும் சக்தி. ஆக, நாட்டுக்கு நல்லதாக உருவாகும் சக்தி, கட்சிகளுக்கு அழிவு சக்தியாகவே அமையும். அதுபோல, கட்சிகளை வலுப்படுத்தும் செயல் அனைத்தும், நாட்டை அழிக்கும் செயலாகவே அமையும். கட்சியையும் வலுப்படுத்தி, நாட்டையும் முன்னேற்ற முயல்வது மடமை.

    ஆக, இந்த மகளிர் மசோதா, அனைத்து கட்சிகளையும் பிளவுபடுத்தும். இதுவரை, ஏனோதானோ என்று இருந்த மகளிர் அணி, வலுவான அணியாக உருவெடுக்கும். கட்சியின் உள்ளே, ஆடவர் அணி - மகளிர் அணி என்று மாபெரும் பிளவு ஏற்படும். ஏற்கனவே, கட்சிகள் வலுவிழந்து, கூட்டணியை நம்பி இருக்கும் நிலையாகி உள்ளது. பாராளுமன்றத்துக்கு நாற்பது சீட்டுகள் என்றால், கூட்டணியோடு பங்குபோடும் நிலைமை. கட்சியில் உள்ளவர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்க வாய்ப்பில்லை. இதில், கையில் இருக்கும் சீட்டும் குறைந்துவிடும். ஒருவித எதிர்பார்ப்பில், இத்தனை ஆண்டுகள், கட்சிகளுக்கு தொண்டாற்றியவர்களின் முன்னேற்றம் தடைபட்டு விடும். இதுவரை உழைத்தவர்கள், போங்க, மகளிர் அணியை உழைக்கச் சொல்லுங்க என்று விரக்தி, அதிருப்தி வெளிக்காட்ட ஆரம்பிப்பார்கள். கட்சியில் உள்ள தலைவர்கள், தங்களது வீட்டுப் பெண்களை முன்னிலைப்படுத்த முயல்வார்கள்; மகளிர் அணி வலுவான எதிர்ப்பினை வெளிப்படுத்தும்.

    மாற்றங்கள் எதுவுமே ஏற்படுத்தாமல் இருந்தால்தான், பழைய நிலைமை தொடர முடியும். மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டு, பழைய நிலைமை தொடரும் என்று எதிர்பார்ப்பது மடமை. பிரிட்டீஷ்காரன், நம் முன்னோர்களுக்கு கல்வி அறிவு கொடுக்க முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், காந்தி பள்ளிக்கூடம் சென்று இருந்திருக்க மாட்டார். பள்ளிக்கூடமே போகாமல் இருக்கும்போது, லண்டனுக்கு படிக்க போக வாய்ப்பு இருந்திருக்காது. லண்டனுக்கு போகாமல் இருந்திருந்தால், அவர்களோட பாராளுமன்றம், சட்டதிட்டம் எதுவும் தெரிந்திருக்காது. எதுவுமே தெரியாத போது, காந்தியும் அடிமையாகவே வாழ்ந்து இருப்பார். பிரிட்டீஷ்காரனும், இன்னும் ஆட்சி செய்துக்கிட்டு இருந்திருப்பான். கல்வியறிவு கொடுத்தாங்க; முன்னூறு ஆண்டுகள் நிறுவிய சாம்ராஜ்யம் அழிந்தது.

    இன்னைக்கு, இணையதளம், தகவல் தொடர்பு, மின்னனு சாதனங்கள், வெளிநாட்டில் வேலை என்று பல வித மாற்றங்கள் ஏற்படுத்தியாகி விட்டது. மாற்றங்கள், நாட்டுக்கு நல்லது; கட்சிகளுக்கு தடுமாற்றங்களைத்தான் ஏற்படுத்தும்.

    கட்சிகள் அழிவதைப்பற்றிய கவலை எங்களுக்கு இல்லை; நாட்டை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம் என்று தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படி வரும் தலைவர்களும், அன்று சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களைப்போல், மக்களின் மனதில் நீங்கா இடம் பெறுவர்.