கண்ட கண்ட சாமியார்களின் படங்களை வெளியிடுவதற்குப் பதில், சான்றோர்கள் படங்களை இங்கு வெளியிட்டு இருக்கின்றோம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், இன்றைய சமூகத்தைவிட, பல மடங்கு ஒழுக்கமுள்ள சமூகமாகவே இருந்தது. அந்த சமூகத்தையே, அத்தனை திட்டு திட்டினார், ஜெயகாந்தன். இன்று மட்டும் சக்தி இருந்திருந்தால், கொதறி, கடிச்சு, துப்பியிருப்பார்.
இன்றைய சமூகம், மற்றும் சமுதாய பிரச்னைகளில் முக்கியமானவைகள் இரண்டு மட்டுமே. ஒன்று, சமூகம், ஒழுக்கங்கெட்ட சமூகமாக உருவெடுத்திருக்கின்றது. இரண்டாவது, அரசு நிர்வாகம் செயல்திறன் அற்று, செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
பிரச்சனைகளைவிட, முக்கியமான சவால் என்னவென்றால் - போலித்தனம். அங்கிங்கெனாதபடி, எங்கும் பரவிக் கிடக்கிறது, போலித்தனம். இந்த போலித்தனத்தால், எது உண்மை, எது பொய் என்றே அறிய முடிவதில்லை. பிரச்சனையின் உண்மையை அறிந்தால்தானே, அதற்கான தீர்வைக் காண முடியும்; உண்மையை அறியமுடியாத நிலையில், ஒரு பிரச்சனையும் இல்லாததுபோல் தோற்றம் அளிக்கின்றது. பிரச்சனையே இல்லாத நிலையில், தீர்வை தேடுவதற்கான அவசியமும் ஏற்படமாலே போய்விடுகிறது.
எல்லா காலகட்டங்களிலும் பிரச்சனை இருக்கும். ஆனால், அன்றைய காலகட்டங்களில், போலித்தனம் இருந்தது இல்லை. அன்றைய காலகட்டத்தில், பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு, இந்திய மக்கள் அடிமை என்ற உண்மையை, மக்கள் உணர்ந்தார்கள். உண்மையை உணரமுடிந்ததால், சுதந்திரம் அடைவதற்காகப் போராடினார்கள். இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு தெளிவாக தெரியவில்லை; கருத்துச் சொல்ல சுதந்திரம் இருக்கின்றதா, இல்லையாவென்று. சுதந்திரமாக கருத்துச் சொன்னவனைக், குற்றவாளியாகப் பார்கிறது சமூகம். அந்த அளவுக்கு, போலித்தனம் மிகுந்து கிடக்கின்றது.
போலித்தனம் என்ற புற்றுநோய்யால் இன்றைய சமூகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. புற்றுநோய் என்ற பெயர் மிகச்சரியான, உண்மையான, சத்தியமான தமிழ் வார்த்தை. அந்த நோய்யின் முழு அர்த்தத்தை, புற்றுநோய் என்ற வார்த்தை தெளிவாக விளக்குகிறது. மரங்களின் உள்புறம், கரையான்கள் புகுந்து, மரத்தின் செல்களை அரித்து, புற்றுகளை ஏற்படுத்தும். உள்புறம் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அளவு, வெளிப்புறத்தில் தெரிவதில்லை. அறுவை சிகிச்சை செய்தபிறகுதான், பாதிப்பின் அளவை அறியமுடிகிறது. ஆக, பாதிப்பின் தாக்கத்தை அறியும் நேரத்தில், குணப்படுத்தவே முடியாத அளவுக்கு, பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. காலம் கடந்து, என்னதான் சிகிச்சை அளித்தாலும், பலனில்லாமல் போய்விடுகிறது.
ஆக, இன்றைய சமூகம், மிகவும் ஒழுக்கங் கெட்ட சமூகமாக உருவெடுத்து இருக்கின்றது. போலித்தனம் என்ற புற்றுநோய்யால், பாதிப்பின் அளவை உணரமுடிவதில்லை. உணரமுடியாத நிலையில், சிகிச்சை, தீர்வு என்று எதுவும் தெளிவாக அறியமுடியாத நிலை. தற்பொழுது வெளிவந்துள்ள சாமியாரின் அந்தரங்க காட்சிகள்; சில மாதங்களுக்கு முன்னால், ஆழ்வார்குறிச்சியில் துடிதுடித்து இறந்த போலிஸ்காரர், மற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களின் காட்சிகள்; சில ஆண்டுகளுக்கு முன்னால், சட்டக் கல்லூரியின் வாசலில் சக மாணவர்களை அடித்த காட்சிகள்; இவையனைத்தும், இன்றைய சமூகத்தின் பிரச்சனைகளை, நமக்கு உணரவைக்கும் அறிகுறிகள். They are just symptoms; not the causes.
போலித்தனத்தை கைவிட்டு, உண்மையை கடைப்பிடிக்கத் தொடங்கினால், இன்றைய சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அளவை அறிய முடியும்; அளவை அறிந்து, பாதிப்பின் மூலகாரணத்தை உணர்ந்து, அறுவை சிகிச்சை அளிக்க முடியும். ஆக, இன்றைய காலத்தின் கட்டாயம், போலித்தனமில்லாமல், உண்மையோடு வாழும் வாழ்வு முறையை, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
மனிதனுக்கு, அனைத்து செல்வங்களும் அவசியம் தேவை. ஒழுக்கச் செல்வம்; அறிவுச் செல்வம்; பொருட் செல்வம். அதையும் தவிர, உடல் ஆரோக்கியம். இவையனைத்தும், அடைந்திருக்கும் மனிதன், முழுமையான மனிதனாக வாழ்கிறான். இன்றைய சமுதாயத்தில், ஒழுக்கம் தேவையே இல்லையென்று எல்லோரும் முடிவு கட்டிவிட்டார்கள். வீடுகளிலும் சரி, நாட்டிலும் சரி, ஒழுக்கமாக வாழத்துடிக்கும் மனிதனை, சமர்த்தியம் இல்லாதவன்; உலக அறிவு இல்லாதவன் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். அந்த மனிதனும், தனது இயல்பான குணத்தை இழந்து, சமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறான். இயற்கையில், மல்லிகை மலர், தனது இயல்பான குணத்தை மாற்ற முயல்வதில்லை. ஆனால், மனிதன், தனது இயல்பான குணத்தை மாற்ற முயன்று, மாற முடியாமல், மனதில் போராட்டம் ஏற்படுகிறது. உள்ளம், ஒழுக்கமாக வாழு என்று சொல்கிறது; சமூகம், ஒழுக்கங் கெட்டு வாழு என்று சொல்கிறது. இந்த இரண்டுக்கும் நடக்கும் போராட்டமே - மன அழுத்தம்.
உள்ளம் சொல்வதை, ஒதுக்கித் தள்ளிவைத்துவிட்டு, சமூகத்தில் ஒழுக்கங் கெட்டு வாழும் மனிதர்களுக்கு, மனதில் போராட்டம் ஏற்படுவதில்லை. அதேபோல், சமூகம் சொல்லும், ஒழுக்கங்கெட்டு வாழு என்ற வாதத்தை ஒதுக்கித் தள்ளிவைத்துவிட்டு, தன் மனது சொல்லும் வழியில், வாழ்பவர்களின் மனதிலும் போராட்டம் ஏற்படுவதில்லை. ஆக, மன அழுத்தம் என்பது ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் நோய் அல்ல; அது சமூகத்துக்கு ஏற்பட்ட நோய். உண்மையான, சத்தியமான, நேர்மையான சமூகம், ஆரோக்கியமான சமூகமாக உருவெடுக்கும். ஆக, போலித்தனத்தை முதலில் கைவிடுங்கள்; உண்மையை கடைப்பிடியுங்கள்; இன்றைய சமூகமும், பாதிப்பில் இருந்து மீண்டு, ஆரோக்கியம் அடையும். ஆரோக்கியமான சமூகத்தில், மன அழுத்தம் இல்லாமல், மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வழி பிறக்கும்.
அடுத்து, செயல்திறன் இல்லாமல் செயலாற்றிக் கொண்டு இருக்கும் அரசு நிர்வாகம்.
சுதந்திரம் அடைவதற்கு முன்னால் என்றால், பிரிட்டீஷ்காரர்களை பழி சொல்லலாம். சுதந்திரம் அடைந்து, மக்களாட்சி நடைபெறுகிறது. இன்றைய அரசு நிர்வாகம் திறம்பட செயலாற்றுகிறதென்றால், அதனது பெருமைகள் அனைத்தும், மூன்று தலைவர்களையே சேரும். இன்றைய அரசு நிர்வாகாம் திறம்பட செயலாற்றவில்லையென்றால், அந்த பழிச் சொல்லும், மூன்று தலைவர்களையே சேரும். அந்த மூன்று தலைவர்கள்: எம்.ஜி.ஆர்; கருணாநிதி; ஜெயலலிதா. தமிழக வரலாற்றில், இந்த மூவருக்கு மட்டுமே இடம் உண்டு.
பிரிட்டீஷ்காரர்கள், நமக்கு நல்லதோர் அரசு நிர்வாக அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள். சிவில் சர்வீஸ் என்ற ஐ.யே.எஸ்; ஐ.பி.எஸ் என்று சிறப்பான வழிமுறையை ஏற்படுத்தி, நமக்கு அளித்திருக்கின்றார்கள். இன்றும், சிவில் சர்வீஸ் சிறப்பான நிர்வாகிகளை உருவாக்குகின்றது. ஆக, செயலாளர்கள், கலெக்டர்கள், தாசில்தார்கள் என்று எக்கச்சக்க ஆட்கள், அரசு நிர்வாகத்தில் வேலை செய்கிறார்கள். ஆட்கள், பொருட்கள், வாகனங்கள் என்று எக்கச்சக்க செலவு செய்தாலும், சிறப்பான, செயல்திறம்மிக்க அரசு நிர்வாகம் செயல்படுகிறதா, இல்லையா என்ற உண்மையை, சமுதாயத்தில் ஏற்படுகின்ற நிகழ்வுகள், நமக்கு உணரவைக்கின்றன.
சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாமியாரின் அந்தரங்கம்; பல ஆயிரம் கோடி நில மோசடி. இவைகள் யாவையுமே, சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள். இவைகள் எல்லாம், ஆரம்பத்தில் சிறிய அளவு சமுதாயத்தை பாதித்திருந்திருக்கும். பிறகு, லட்சம்; அதன் பிறகு, கோடி; அதற்கும் பிறகு, பல ஆயிரம் கோடி. அந்த பெரிய அளவு, ஆயிரம் கோடி என்ற அளவைத் தாண்டும்போதுதான், அரசு நிர்வாகத்தால், பாதிப்பின் தாக்கத்தை உணரமுடிகிறது. உணர்ந்து, நடவடிக்கை எடுக்கத் தொடங்கும்போது, சமுதாயத்துக்கு தீங்கு செய்தவன், பல கோடிக்கு அதிபராகிவிடுகிறான். அவன் சேர்த்த சில கோடிகளை, வழக்கறிஞர்களுக்கு செலவு செய்தால், சில ஆண்டுகள் சிறை வாழ்வை முடித்துவிட்டு, ஜாமீனில் வெளியே வந்துவிடுவான்; வாய்தா தொடர்ந்து கொண்டு இருக்கும். அவனது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கோடிகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அன்று, காந்தி, நமக்காக சிறைசென்று, தனது வாழ்க்கையை தியாகம் செய்ததுபோல், இந்த அயோக்கியர்கள், அவர்களது வாழ்க்கையை தியாகம் செய்து, அவர்களது குடும்பம் சீரும், சிறப்புமாக வழிசெய்து கொடுத்து விடுவார்கள்.
இதுதான், வெறும் கையில் முழம் போடும் செயல். திறமை ஒன்றும் தேவையில்லை; படிப்பறிவு தேவையில்லை; ஒழுக்கம், நேர்மை என்று ஒரு புண்ணாக்கும் தேவையில்லை. பொய், போலித்தனம், ஏமாற்றும் வித்தை, என்று இந்த தில்லுமுல்லு திறமைகளை வளர்த்துக் கொண்டால் போதும்; ஒரு சில வருடங்களில், பல கோடிகள், மிக எளிதாக அடைந்து விடலாம். ஆக, கோடிகள் அடைவது கடினமான காரியம் அல்ல; அதன் பிறகு மாட்டிக் கொள்ளாமல், மேலும் வளர்வதில்தான் திறமை இருக்கு. வியாபாரத்தில், போட்டியாளர்கள் இருப்பார்கள்; கூட இருப்பவர்களையே நம்ப முடியாத சூழ்நிலை; இதை சமாளிப்பதுதான் மிகப் பெரிய சவால். ஆக, வியாபாரம் பெரிய அளவில் வளர்ந்தவுடன், வியாபார வளாகத்தில், கேமரா, வீடியோ, செல் போன் என்று எந்தவித சாதனங்களையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது. வியாபார வளாகத்தின் காவல் பொறுப்பினை, தலை சிறந்த வெளி நிறுவனத்துக்கு கொடுத்து விடணும். ஆக, நடக்கும் நிகழ்வுகள் எல்லாம், தப்பு செய்தவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறதோ, இல்லையோ, மற்றவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறும் வழியை காண்பிக்கின்றது. மாட்டிக் கொண்டவர்களின் வாழ்க்கை, மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமைகிறது.
ஆக, அரசு நிர்வாகம் என்று ஒன்று இருந்தும், அதனால், சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து, உணர்ந்து, ஆரம்ப காலகட்டத்திலேயே நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்வரை, எந்தவித செயலும் ஆற்றாமல், மாசா மாசம், சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டு செயல்திறன் அற்று இருக்கின்றது. அது டெல்லியாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி, இன்னும் டயனோசர் போன்று பெரிய உருவமைப்பைக் கொண்ட நிர்வாகத்தை உருவாக்கவே முற்படுகிறார்கள். டயனோசர், காலத்தின் சோதனைகளில் தாக்குப் பிடிக்க முடியாமல், மறைந்து விட்டது. அரசு நிர்வாகத்தைப் பொருத்தவரை, பெரிய பெரிய டயனோசர்கள் தேவையில்லை; குதிரை, அணில் போன்ற சிறிய உருவமைப்பைக் கொண்ட நிர்வாகமே, செயல்திறத்துடன் சிறப்பாக செயலாற்ற முடியும்.
திருவண்ணாமலை நகர அரசாங்கம் சிறப்பான செயல்திறன் கொண்டு செயல் ஆற்றிக் கொண்டு இருந்திருந்தால், மோசடிகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும். அப்படி செய்யாததால், மோசடி வியாபாரம், நகரம், மாநிலம், தேசம் என்று பரவி, பரதேசத்துக்கும் சென்று அடைந்து விட்டது. மோசடி செய்தவன் தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்து விடுகிறான்.
பாவிகளா. நம் முன்னோர்கள், உண்மையான புலவர்கள், தங்களது வாழ்க்கையை முழுவதும் செலவழித்து, மனித வாழ்வின் அர்த்தத்தை, உண்மையை அறிந்து, மனித சமுதாயத்துக்காக, எளிதாகப் புரியும்படி, இனிமையான இலக்கியத்தின் மூலம், அருமையான கலாசாரத்தை உருவாக்கி அளித்திருக்கிறார்கள். அகம் என்ற வார்த்தையே, மற்ற நாட்டினர் அறியவில்லை. ஆதலால், மனித உள்ளங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த அறியாமையால், அனைத்து செல்வங்களும், வசதிகளும் இருந்தும் வாழ்க்கையை வாழத்தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். நீங்கள், மற்ற உலகின் தேவையை, தவிப்பை அறிந்து, அவர்களது தேவையை நிறைவேற்றும் வியாபாரிகளாக மாறிவிடுகிறீர்கள். ஐந்து டாலருக்கும், பத்து டாலருக்கும் அகத்தூய்மை செய்யும் சோப்பு வியாபாரம் செய்கிறீர்கள்.
இந்த ஆன்மீக வியாபாரத்தில், அரசு அமைப்புகளுக்கும் பங்குண்டு. இந்த ஆன்மீக வியாபாரிகள், அந்நிய செலவாணி ஈட்டுத் தருகிறார்கள் என்பதால், அரசு, இந்த ஆன்மீக வியாபாரத்தை நெறிப்படுத்துவதில்லை. தற்பொழுது, அரசு, இந்த ஆன்மீக வியாபாரத்தை நெறிபடுத்தும் கட்டாயத்தில் உள்ளாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆன்மீக வியாபாரத்தின் அசையும் சொத்து, அசையா சொத்து விபரங்கள், வரவு - செலவு கணக்குகள், வருமான வரி எல்லாம் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்தாக வேண்டும். ஆன்மீக வியாபார ஸ்தாபனம், மனித உள்ளங்களை சிறைபடுத்தும்; மனித உள்ளங்களுக்கு தேவை, பூர்ண சுதந்திரம்.