பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம்
  • picture source and copyright information
    Ramadoss

    பள்ளிக்கூடத்தில் தேர்வு நடக்கிறது. அனைவரும் படித்து, தேர்வு எழுதுகிறார்கள். ஒருவர் மட்டும், பிட்டு பேப்பரில், விடைகளை எழுதிக்கொண்டு வந்து, தேர்வு எழுதுவதை எப்படி அனுமதிக்க முடியும். அவ்வாறு தேர்வில் முறைகேடு செய்பவரை, தகுதி நீக்கம் செய்வதே சரியான செயல்.

    ஆக, பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதே, சரியான செயல். வேட்பாளரின்மீது நடவடிக்கை எளிது; வேட்பாளர்தான், தவறான வழியில், தேர்தலில், தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில், மக்களுக்கு வேட்டி, சேலை, பணம் என்று மக்களுக்கு பட்டுவாடா செய்கிறார்; ஆதலால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது சரியான செயலே.

    தேர்தலுக்கு முன்பே, குற்றம் சாட்டப்பட்டால், அந்த வேட்பாளரின் பெயரை, வாக்குச்சீட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்; தேர்தலுக்குப்பின் குற்றம் சாட்டப்பட்டால், அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து, அடுத்து வந்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். அவர், சட்டசபைக்கே போய்விட்டாலும்கூட, தேர்தலில் முறைகேடு நிருபிக்கப்பட்டால், முறைகேடு செய்து வெற்றி பெற்றவரை, தகுதி நீக்கம் செய்துவிட்டு, இரண்டாவது நிலையில் இருக்கும் வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.

    தகுதி நீக்கம் என்றால், அடுத்த பத்தாண்டுகள், அந்த நபர், எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடும் தகுதியினை இழக்கிறார் என்று இருக்க வேண்டும். கட்சி மீது நடவடிக்கை எடுப்பது கடினம்; ஆனால், வேட்பாளரின் மீது நடவடிக்கை எடுப்பது எளிது.

    உடம்பிலும் சரி, நாட்டிலும் சரி, நோய்யின் அறிகுறியினை அறிந்து, ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்து விட்டால், ஆரோக்கியம் சீர்கெட்டுப் போகாமல் காப்பாற்ற முடியும். இப்பவே, பணம் பட்டுவாடா செய்து தேர்தலில் ஜெயிப்பது தவறு இல்லை என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கின்றது. இன்னும் சில வருடங்களில், தேர்தலில் ஜெயிக்க, பணம் பட்டுவாடா செய்வதுதான் சரியான வழிமுறை என்ற நிலை உருவாகிவிடும். அதற்கு பிறகு, மக்கள், வோட்டுக்கு பணம் வாங்குவது, தங்களது உரிமை என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விடுவார்கள். வருங்காலங்களில், வேட்பாளரின் மீது, பணம் கொடுக்காமல், வோட்டை வாங்கிட்டு, எங்களை ஏமாற்றி விட்டார், என்று வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

    பணம் கொடுக்கும் வேட்பாளரை, தகுதி நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டுமா என்றும் தெரியவில்லை. தேர்தல் ஆணையம், ஆணையை பிறப்பித்துவிட்டுவிட வேண்டும். பிறகு, ஆணையை எதிர்த்து, வழக்கு தொடர்ந்தால், அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்துவிடும். குறைந்தபட்சம், பணம் பட்டுவாடா செய்ய, வேட்பாளர்கள் தயங்குவார்கள்.

    தற்பொழுது உள்ள சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்தின் வரம்பினைப் பார்க்கும்போது, தேர்தல் நடத்தி, ரிசல்ட் வெளியிடும்வரைதான் என்பது தெளிவாகிறது. ரிசல்ட் வெளியானபிறகு, அந்த வேட்பாளரின் மீது, எவ்வளவு பெரிய குற்றம் சுமத்தப்பட்டாலும், தேர்தல் ஆணையம், அந்த வேட்பாளரின் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

    ரிசல்ட் வெளியாவதற்கும், அந்த உறுப்பினர், சட்டசபையிலோ, பாராளுமன்றத்திலோ, பதவிப் பிரமாணம் செய்வதற்கும், இடையில், ஒரு மாத நாட்கள் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். அந்த ஒரு மாத நாட்கள் இடைவெளியில், அந்த வெற்றி பெற்ற வேட்பாளரின் மீது, முறைகேடு குற்றங்கள் சாட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அவரது வெற்றியை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய உரிமை உண்டு என்ற நிலையை உருவாக்க வேண்டும். வெற்றி பெற்றார் என்ற சான்றிதழை, அளிப்பதற்கு, தேர்தல் ஆணையம், ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தலைவர்கள், அனைவருமே, நேர்மையற்ற வழியில் தொடர்ந்து சென்று இருந்திருந்தால், எதுவும் மாற வாய்பே இருந்திருக்காது. பெரும்பாலான தலைவர்கள், நேர்மையை கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால், நேர்மையற்ற வழியில் தொடர முடியாமல், அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

    ஆட்சி தொடர வேண்டுமானல், எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எண்ணிக்கையை அதிகரிக்க இடைத்தேர்தல் உதவியாக இருந்தது. அதன் விளைவே, திருமங்கலம், திருச்செந்தூர் இடைத்தேர்தல். தற்பொழுது, இடைத்தேர்தலில் நம்பிக்கை இழந்து வருவதால், திருச்செந்தூர் பார்முலா தொடர முடியவில்லை. ஆக, மாற்றாக, இடைத்தேர்தல் இல்லாமல், மயிலாப்பூர் பார்முலா, தொடருகிறது.

    அதிலேயும் பிரச்சனை; அடுத்த கட்சியில் இருந்து வந்தவங்களுக்கு, புது மாப்பிள்ளைக்கு கிடைக்கும், ராஜ உபசாரம். காலம் காலமாக கட்சி தொண்டாற்றியவர்களுக்குகூட அத்தனை கவனிப்பு இல்லை. முன்பெல்லாம், இந்த கட்சியிலிருந்து ஆட்கள் விலகி, அந்த கட்சிக்குப் போவார்கள்; அந்த கட்சியிலிருந்து, இந்த கட்சிக்கு வருவார்கள். ஆக, எல்லோருக்கும் எப்பொழுதும் கிராக்கி இருக்கும். தற்பொழுது, அப்படி இல்லை. தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள், போட்டி போட்டுக் கொண்டு, கட்சிக்கு ஆட்களை சேர்க்கும் வேலையில் ஈடுபடுவதில்லை.

    ஒரு காலத்தில், ஆயிரக்கணக்கான ஜாதிகள் இருந்தன. அனைத்து ஜாதிகளும் அழிந்து, ஒரு ஜாதி உருவாகும் என்று எந்த அறிஞர்களும் கூறவில்லை. தற்பொழுது, ஜாதிகள் இல்லாத சமூகம் உருவாகி இருப்பதுபோல், கட்சிகள் இல்லாத ஜனநாயகம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.