தமிழ்நாடு சட்டப்பேரவை. வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்; மிகவும் பாராட்டுக்குரிய செயல்; இதுவரைக்கும் வெளிவந்த செய்திகள் அனைத்தும், நல்ல செய்திகளாகவே அமைந்திருந்தன. ஆனால், இப்ப வெளிவந்துள்ள இந்த சினிமா செட்டிங் போட்டு கோபுரம் கட்டும் செய்தியை புறக்கணிக்க முடியவில்லை.
இது சரியான செயல் அல்ல; மிகவும் தவறான முடிவு. தோட்டாத் தரணியின் கலைத்திறன் மிகவும் உயர்ந்த தரம்; அதில் யாருக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. அவரது செட்டிங்குகளை சினிமாவில் ரசித்துப் பிரமிப்பு அடைவது வழக்கமான ஒன்று. ஆனால், என்னதான் கலைத்திறனோடு அமைத்தாலும், நிஜத்துக்கு சினிமா செட் போடும் செயலை ஏற்கமுடியவில்லை.
பிரமாண்டமான கட்டிடம், ஆடம்பரமான விழா அனைத்தும் வாய்மையை உயர்த்தும் வகையில் அமைய வேண்டும். ஆடம்பரம், உண்மையை அழித்துவிடக் கூடாது.
இந்த போலித்தனம்தான், நம் வாழ்வில் கலந்து கிடக்கிறது. இதுதான், இன்றைய காலகட்டத்தில் மாபெரும் சவால். உண்மை எது; பொய் எது; ஒண்ணும் புரிய மாட்டேங்கிறது.
அந்தக்காலங்களிலும், பணக்காரர்கள் வீடுகளில், திருமணம் மிகப் பிரமாண்டமாக, ஊரே திருவிழா கோலம் பூண்டு நடக்கும். அந்த பிரமாண்டத்திலும், திருமணம் அதன் மதிப்பை, அதன் உண்மையை உயர்த்தும்படி இருக்கும்.
ஜனக ராஜா மகள் ஜானகிக்கும், அயோத்தியின் ராஜகுமரன் இராமனுக்கும் திருமணம். அந்த திருமணம் பிரமாண்டமாக நடக்கும்; அந்த பிரமாண்டம், திருமணத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும். கல்யாணத்துக்கு வந்தவர்களும், இராமர்-சீதை அல்லது மீனாட்சி-சொக்கர் போல கல்யாணம் செய்து கொண்டு, இல்லறம் இனிதாக வாழணும் என்று எண்ணும்படி இருக்கும். அங்கு அவர்கள் மனதில், அந்த செல்வம், பிரமாண்டம், நம்மிடம் அவ்வளவு செல்வம் இல்லையே என்ற ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. செல்வச் செழிப்பு, அரண்மனை ஆடம்பரம் இதையெல்லாம் தாண்டி, அந்த இரு உள்ளங்களின் சங்கமம், சொந்தங்களின் அன்பு, உறவினர்களின் பாசம் என்று எங்கும் அன்பு மழை பொழியும். இருந்தார்கள், அங்கேயும்; இராமயணத்தில் ஒரு கூனி; பாரதத்தில் ஒரு சகுனி;
ஆக, எல்லா காலகட்டங்களிலும் நல்லவர்களும் இருந்தார்கள்; கெட்டவர்களும் இருந்தார்கள். அந்த காலத்துக்கும், இந்த காலத்துக்கும் ஒரே வித்தியாசம்; அந்த காலத்தில், நல்ல கேரக்டர்கள் அதிகமாக இருந்தார்கள்; கெட்ட கேரக்டர்கள் குறைவாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயும், நம்பியார், அசோகன், எம்.ஆர்.இராதா என்று வில்லன்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். ரங்காராவ், சுப்பையா, சகஸ்ரநாமம், அப்படியென்று உயர்ந்த குணங்களை உயர தூக்கி நிறுத்திய கேரக்டர்கள் மிக மிக அதிகம்.
இன்றைய காலகட்டத்தின் மிகப்பெரிய சவால் - போலித்தனம். இன்று நீங்கள் சந்திக்கும் மனிதர்கள், கதாநாயகனா அல்லது வில்லனா அல்லது காமெடியனா என்று அறியவே முடிவதில்லை. இந்த தொலைக்காட்சி தொடர்களில் வரும், கேரக்டர்கள்தான், இன்று நிஜ வாழ்விலும் நிரம்பி இருக்கின்றார்கள். வெளித்தோற்றத்திலும், நடை உடை பேச்சுக்களிலும் ரொம்ப இனிமையான ஒரு தோற்றம்; உள்மனதில் வில்லத்தனம். இந்த போலித்தனம் தான், சமூகத்துக்கு மிகவும் தீங்கானது.
ஒன்று, மேல் கோபுரம் கட்டி முடியும்வரை, காத்திருந்து பிறகு புதுமனைப் புகுவிழா நடத்தி இருக்க வேண்டும்; அல்லது, விழா நடத்தி, குடிபுகுந்து, பிறகு கோபுர வேலை தொடரலாம். நெறைய இல்லங்களில், கட்டிட வேலை முழுவதும் முடிந்திருக்காது; ஆனாலும், குடிபுகுந்து பிறகு, வேலையை தொடர்ந்து செய்வார்கள். அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விசயம். ஆனால், அதுக்காக, இப்படி சினிமா செட் போடுவது, போலித்தனம்; ஏற்க முடியாத விசயம்.
ஆனால், ஒரு உண்மையை பாராட்ட வேண்டும். இந்த சினிமா செட் போடுவதை வெளியேவராமல் செய்திருந்திருக்க முடியும். உண்மையை சொன்ன செயலை பாராட்டவே வேண்டும். அமெரிக்காவிலும், ஒபாமா பதவியேற்கும் நிகழ்ச்சியில், இசைக் கலைஞர்கள், அந்த பெரிய வயலின் போல் உள்ள கருவியில் இசை அமைப்பதைப்போல் காட்டினார்கள். பிறகு வெளியில்வந்த செய்தி, அது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசை; அந்த குளிரில், அந்த வெட்டவெளியில், அந்த இசைக் கருவி சரிவர செயல்படாது.
தமிழ்நாட்டில், மக்களாட்சி செழித்தோங்க, வருங்கால தலைமுறையினருக்காக, கலைஞர் கருணாநிதி மிகவும் சிறப்பான காரியத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். தனது சிந்தையில் உருவாக்கி, அதற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கின்றார். இது மக்களாட்சியின் ஒரு மைல் கல். சான்றோர்கள், அறிஞர்கள், பத்திரிக்கைகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும், இந்த தருணத்தில் மக்களாட்சியின் மகத்துவத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாக கருத வேண்டும். பேரவையின் நோக்கம், குறிக்கோள், என்ன?; மக்கள், வாக்களித்து, தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் நோக்கம் என்ன?; மக்கள் பிரதிநிதிகளின் கடமை, பொறுப்பு, அதிகாரம் என்ன?
மக்களாட்சிக்கு, மக்கள் அனைவரின் முழு ஈடுபாடு மிகவும் அவசியம். ராமன் ஆண்டாலும், ராவணான் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று மக்கள் பொறுப்பில்லாமல் இருந்துவிடக் கூடாது.
ஆக, பிரமாண்டம், ஆடம்பரம் எல்லாம் இருக்கட்டும்; அவைகள் அனைத்தும், வாய்மையை உயர்த்தும் வகையில் அமைய வேண்டும். சினிமா செட்டிங் போட்டு, பிரமாண்டம், ஆடம்பரம், மக்களாட்சியின் மகத்துவத்தை, மதிப்பை தாழ்த்திவிடக் கூடாது. போலித்தனம் தேவையற்றது; ஆபத்தானது. மனிதன் உண்மையை உணரவிடாமல், தடையாக இருப்பது, போலித்தனமே.