ஒருநாள் விமானநிலையத்தில் அமர்ந்திருந்த பொழுது, விஐபி கார், வேகமாக வந்து நின்றது. அந்த காரிலிருந்து, விஐபி, தாவிக்குதித்து, மிகவும் அவசரமாக விமானநிலையத்துக்குள் ஓடினார். அவரது காரை அடையாளம் கண்டுகொண்ட ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள், கையில் கேமராவுடன், மைக்குடன், அந்த விஐபியை நோக்கி ஓடினார்கள். அவர்கள் வருவதற்குள், அந்த விஐபி, விமான நிலையத்துக்குள் சென்று விட்டார். ஊடகத்துறை மக்கள், ஏமாற்றத்துடன், மற்றொரு விஐபியின் வரவுக்காக காத்திருக்கத் தொடங்கினார்கள்.
விமானநிலையத்தினுள், விஐபி, நேராக கழிவறைக்குள் சென்று விட்டார். சற்று மணி நேரம் கழித்து, ஜீன்ஸ் பேண்ட், மற்றும் டீ சர்ட்டுடன் வெளியே வந்து, எனதருகில் அமர்ந்தார்.
வணக்கம். ஊடகத்துறை மக்களைக் கண்டால் அச்சமோ. இப்படி கழிவறைக்குள் சென்று, மாறுவேடம் அணிந்து வெளியே வந்திருக்கீங்க.
அந்த விஐபி, எனதருகில் வந்து, மெல்லிய குரலில், கதைக்கத் தொடங்கினார். பத்திரிக்கைகாரங்களைக் கண்டு அஞ்சி ஓடிவரவில்லை. வீட்லே, என் பொஞ்சாதி சொல்ல சொல்லக் கேட்காமல், பிரியாணி, அது இது என்று அள்ளித் திணித்து விட்டாள். வயிறு தாங்கலை. அதுதான் டிரைவர்கிட்டே சொல்லி, காரை வேகமாக ஓட்டச் சொல்லி, ஓடி வந்துட்டேன். நிஜமாகவே பாத்ரூம் போகவேண்டிய அவசியம்.
இயற்கை அழைப்பை எல்லாம் எடுத்துச் சொன்னாலும், பத்திரிக்கைக்காரங்களுக்கு புரிஞ்சு தொலையாது. அவுங்க, நம்ம வாயுக்குள்ளே மைக்கை திணிச்சு, தான் கேட்கின்ற கேள்விக்கு பதிலைச் சொல்லிட்டு போ என்று அடம் பிடிப்பாங்க.
அன்னைக்கு இப்படித்தான், தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கின்ற பொழுது, அந்தப்பக்கம் கருவாட்டு லாரி ஒன்று சென்றது. அந்த கருவாட்டு நாற்றத்துக்காக, இயற்கையாக என்று முகம் கொஞ்சம் சுளித்தது. அதனை உடனே புகைப்படம் எடுத்து, அவர்கள் கேட்ட கேள்விக்கு, நான் பதில் அளிக்க இயலாது தவிப்பு என்று கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டுவிட்டார்கள்.
அன்னைக்கு மதுரையிலே, கொசு, அப்படியே ஆஞ்சி எடுத்து விட்டது. அந்த நிலையிலேயும், நாங்கள் முகம் சுளிக்காமல், இருபத்து நாண்கு மணி நேரமும், இன்முகத்தோடு காட்சி அளிக்க வேண்டும். இவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும், மிகவும் தெள்ளத் தெளிவாக, பொருமையாக, டிப்ளமேடிக்கா பதில் அளிக்க வேண்டும். அதெப்படிங்க சாத்தியமாகும். நாங்களும் மனுஷங்கதானே.
அது சரி, என்ன இது ஜீன்ஸ், டீ சர்ட் வேஷம். பத்திரிக்கைகாரங்க கிட்டே இருந்து தப்பிக்கவா, இந்த மாறுவேடம்.
இதுதான் ஒரிஜினல்; வெள்ளை வேஷ்டி; வெள்ளை சட்டை; அதுதான் வேஷம். இது, அவுங்ககிட்டே இருந்து தப்பிக்க என்று எதுவும் இல்லை. எனக்கு ஜீன்ஸ் பிடிக்கும். அதுக்காகத்தான், வீட்லே லுங்கி; இப்படி பிரயாணம் செய்யும் நேரம் ஜீன்ஸ். நாங்களும் மனுஷங்கதானே.
சமீபத்தில், ஒரு விளம்பரம். அருமையான தாலாட்டுப் பாட்டு. அந்த ஆள், அப்படி ஆழ்ந்த நித்திரை. எந்த இடமாக இருந்தாலும், அந்த ஆள், அப்படி ஒரு நிம்மதியான உறக்கம். அது ஒரு பத்திரிக்கை விளம்பரம். அந்த பத்திரிக்கையைப் படித்தீர்களானால், இப்படித்தான் நீங்க ஆகிவிடுவீர்கள். அந்த பத்திரிக்கை, உங்களை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திவிடும். எங்க பத்திரிக்கை உங்களை விழிப்புடன் வைத்திருக்கும்.
இந்த விளம்பரத்தில் உள்ள மெய்ப்பொருளைக் கண்டால்; எங்க பத்திரிக்கையில், பரபரப்பு, விறுவிறுப்பு என்று அனைத்து வகை போதைப் பொருட்களும் அடங்கும். உங்களது தூக்கத்தை கெடுக்கும், அனைத்து அம்சங்களும் இருக்கும். எங்க பத்திரிக்கையைப் படித்து, உங்களது உறக்கத்தை தொலைத்துவிட்டு, பிறகு தியானம், மருந்து மாத்திரை என்று அலைந்து தூங்க முயற்சி செய்யுங்கள்.
ஊடகத்துறை மக்களே, பரபரப்பு, விறுவிறுப்பு என்ற நிலையை விட்டு விட்டு, உண்மை, மெய்ப்பொருளை காணுங்கள். நேரம், காலம், இடம் என்று பார்க்காமல், விடாமல் துரத்தி, துரத்தி இண்டர்வியூ எடுக்காதீர்கள். ஒரு இடத்தில், அமர்ந்து உரையாடுங்கள். அமர்ந்து உரையாட நேரம் போதவில்லையா, பிறகு பார்க்கலாம் என்று விட்டுவிடுங்கள். வாயில் மைக்கை திணித்து, வார்த்தைகளைப் பிடுங்காதீர்கள். அவசரத்தில் ஒரு சொல் சொன்னாலும், மீண்டும் நீங்கள் கேளுங்கள். மீண்டும் ஒருமுறை தெளிவாக சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டு, உறுதிபடுத்தியபின், செய்தியாக வெளியிடுங்கள்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
கேடில் விழுச்செல்வம்; அறிவுச்செல்வம்; ஒழுக்கச்செல்வம்; மக்கட்செல்வம்; பொருட்செல்வம்.
செல்வங்கள், பலவகையாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில், செல்வம் என்றால் பொருட்செல்வத்தையே குறிக்கும். பொருட் செல்வமும், பெரும்பாலும் கறுப்பு பணமே ஆகும்.
அதனை கறுப்பு பணம் என்பதைவிட, கட்டபொம்மன் பணம் என்று சொல்வதே பொருந்தும். மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம்தான் கறுப்பு பணம். உழைப்பு இல்லாமல், திருடிய செல்வம் அல்ல அது; ஏமாற்றி பறித்த செல்வம் அல்ல அது. உழைத்து சம்பாதித்து, அரசாங்கத்துக்கு வரியென கட்டாத பணம்தான் கறுப்பு பணம். கட்டபொம்மன் அதைத்தானே செய்தார்.
வயலுக்கு வந்தாயா; நாற்று நட்டாயா; களையெடுத்தாயா; அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா; மாமனா; மச்சானா; மானங்கெட்டவனே; வரி, வட்டி, கிஸ்தி; ஏன் கொடுக்க வேண்டும் வரி; எதற்கு கொடுக்க வேண்டும் வரி.
முன்பெல்லாம், அனைத்தும் வெள்ளையாக கொடுக்காதீங்க; கொஞ்சம் கறுப்பாக கொடுங்க என்பார்கள். பிற்காலத்தில், பிப்டி வொயிட்; பிப்டி பிளாக் என்றாங்க. இன்றைய காலத்தில், பேருக்கு வொயிட்; மீதி அத்தனையும் பிளாக். இதுதான், இன்றைய நிலவரம். யாருமே, அரசாங்கத்துக்கு ஒரு ரூபாய்கூட வரிகட்ட தயாராக இல்லை. ஏன் வரி கட்டணும்; எதுக்கு வரி கட்டணும். மழை பெஞ்சா, ரோடு ரோடாகவா இருக்கு. அவெங்க உழைச்சு வரி கட்டுவாங்க; நீங்க மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிச்சு, நோகாமல் நோன்பு கும்புடுவீங்க.
திருச்சியிலே, ஆர்.டி.ஓ கைப்பற்றினாங்களே, அது என்ன பணம். கறுப்பா; வெள்ளையா. எவனோ, இளிச்சவாயன், அம்பி, வருமானவரி செலுத்திய பணம். இப்படி பணம் விரயம் ஆவதைக் காணும்போது, யாரு முன்வந்து வரியைச் செலுத்துவாங்க.
கறுப்புப் பணம், கட்டபொம்மன் பணம். ஊரை ஏமாற்றி கொள்ளையடிச்ச பணம் அல்ல. கறுப்பு பணத்துக்கு கற்பு உண்டு.
வரியைக் குறை; ஏன், எதுக்கு, இவ்வளவு வரியென்று மக்களிடம் இருந்து புடுங்கின்றீர்கள். வரியைக் குறைங்க; மக்கள் வரி கட்டுவார்கள். இன்றைக்கு, புரோக்கருக்கு கொடுப்பதுகூட, அரசாங்கத்துக்கு கிடைக்க மாட்டேங்கிறது. வரியைக் குறைங்க; புரோக்கருக்கு, மக்கள் சந்தோஷமாகத்தான் கொடுக்கிறாங்க. அதைப்போல, அரசாங்கத்துக்கும் வரியை விரும்பி செலுத்துவார்கள். வரியை குறைங்க, அனைத்தும் கணக்கில் வரும். வாங்குகின்ற வரியை, அரசாங்கம் விரயம் செய்யாமல், சிறப்பாக நிர்வாகம் நடைபெறட்டும். மக்கள், மனமுவந்து வரியினைச் செலுத்துவார்கள்.
ஆக, இன்றைய சுழலில், கறுப்பு பணம் என்பது - உழைத்து சம்பாதித்த பணம் என்று பொருள். மீதி பணம் எல்லாம், ஊரை ஏமாற்றி புடுங்கிய பணம் என்பதே உண்மை.