IT   சித்தாளு
  • IT Workers

    வீடு கட்டும் துறைகளில், ஆர்க்கிடெக்ட், இன்ஜினியர், மேஸ்திரி, கொத்தனார், நிமிந்தாளு, சித்தாளு என்று பல்வேறு நிலையில் மனிதர்கள் பணியாற்றுவார்கள்.

    ஆர்க்கிடெக்ட், கட்டிடத்தின் தோற்றம், வடிவமைப்பு, அகலம், உயரம், நிலைத்து நிற்கும் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயலாற்றுவார்.

    அடுத்து; இன்ஜினியர், ஆர்க்கிடெக்ட் வடிவமைத்துக் கொடுத்தபடி, அந்த கட்டிடத்தை உருவாக்குவதற்கு வேண்டிய பொறியியல் அளவுகோள்களைக் கணக்கிட்டு, அடித்தளத்தின் நீளம், அகலம், ஆழம்; பிறகு கட்டிடத்தை தாங்கக்கூடிய தூண்களின் அளவு; பிறகு சுவர்களின் அளவு என்று கணக்கிட்டு செயலாற்றுவார்.

    இன்ஜினியர் போட்ட கணக்குப்படி, செங்கலையும், சிமெண்ட்டையும் வைத்து, கொத்தனார், கட்டிடத்தை உருவாக்குவார்.

    கொத்தனாருக்கு உதவ, வலுவான ஆண்கள், வேலையாற்றுவார்கள். இவர்கள், பெரும் கற்களை உடைப்பது; சிமெண்ட் குழைப்பது போன்ற கடின பணியாற்றுவார்கள். அவர்கள் நிமிந்தாளு என்று அழைக்கப்படுவார்கள்.

    கொத்தானாரு, மேலும் நிமிந்தாளுக்கு உதவியாக, கட்டிட வேலைகளில், பெரும்பாலும் பெண்கள் பணியாற்றுவார்கள். அவர்களது வேலை என்னவென்றால், செங்கற்களை தலையில் சுமந்து செல்வது; மணல் சட்டி, சிமெண்ட் சட்டி என்று எடுத்துச் செல்வது. இவர்களை சித்தாளு என்று அழைப்பார்கள்.

    இவர்கள் எல்லோரையும், வேலைக்கு அழைத்துவந்து, கூலி பேசி, நிர்வாகம் செய்பவரை, மேஸ்திரி என்றழைப்பார்கள்.

    ஆக, கட்டிடத் தொழில்களில், ஆர்க்கிடெக்ட்டில் ஆரம்பித்து, இன்ஜினியர், மேஸ்திரி, கொத்தனார், நிமிந்தாளு மற்றும் சித்தாளு என்று பல நிலைகளில், மனிதர்கள் பணியாற்றுவார்கள்.

    இதைத்தவிர, கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டபிறகு, அதனைப் பராமரிக்க ஆட்கள் தேவைப்படும். கட்டிடத்தை காவல் காக்க வாட்ச்மேன்; கட்டிடத்தைக் கூட்டிப் பெருக்க வேலையாட்கள்; கட்டிடத்தைச் சுற்றியுள்ள தோட்டத்தைப் பராமரிக்க வேலையாட்கள் என்று பலதரப்பட்ட வேலைக்கு ஆட்கள் தேவை.

    ஆக, கட்டுமானப் பணிகளில், ஆர்க்கிடெக்ட், மற்றும் இன்ஜினியர், உயர்ந்த கல்வி கற்று, சிறப்பு தேர்ச்சிப் பெற்றுத் திகழ்வார்கள். ஏனைய நிலையில் பணியாற்றுபவர்கள், அந்த துறையில், கடைநிலை பணியாளர்களாகவே கருதப்படுவார்கள்.

    ஆக, ஆர்க்கிடெக்ட், மற்றும் இன்ஜினியர்கள், அந்த துறையில், எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பார்கள். கடைநிலை ஊழியர்கள், எண்ணிக்கையில் மிகுந்து தேவைப்படுவார்கள்.

  • IT Workers

    நாம பெருமை பேசிக்கொண்டு இருக்கின்றோமே; ஐ.டி துறையில், நாமதான் உலகத்திலேயே முன்னோடியாகத் திகழ்கின்றோம் என்று கர்வத்துடன் உலகை வலம்வந்து கொண்டு இருக்கின்றோமே; நம்ம உண்மை நிலை இதுதான்.

    நமது இளையதலைமுறையினர், ஐ.டி துறையில், சித்தாளு, நிமிந்தாளு, மேஸ்திரி என்ற கடைநிலையில்தான் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இதைத்தவிர, பராமரிப்பு வேலைகளில், அதாவது, வாட்ச்மேன்களாகவும், தினம்தோறும் கூட்டிப் பெருக்கும் வேலையாட்களாகவும், தோட்டத்தைப் பராமரிப்பவர்களாகவும்தான், நமது ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றது.

    ஒரு சதவிகிதம்கூட சொல்ல முடியாது. விரல்விட்டு எண்ணும் அளவில்தான், ஒரு சிலர், சிறந்த படைப்பாளிகளாகத் திகழ்கின்றார்கள்.

    இதுதான் ஐ.டி. துறையில் நமது உண்மை நிலை. இந்தியாவில் உள்ள எந்த நிறுவனமாகட்டும், இன்போசிஸ், விப்ரோ, டாட்டா; நாரயணமூர்த்தி, நந்தன், யாராவது, யாராவது - ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ், அல்லது பில்கேட்ஸ், அல்லது கூகுள் - அவர்களைப் போன்று...

    நாரயணமூர்த்தி - ஏதாவது புதிய சாப்ட்வேர் அல்லது சாதனம், ஏதாவது புதிய படைப்பினை, உயர தூக்கிப் பிடித்து காட்டி இருக்கின்றார்களா.

    பொதுமக்களும், நாரயணமூர்த்தி, புதிய படைப்பினை உயர தூக்கிப் பிடித்துக் காட்டுவார் என்று எதிர்பார்ப்பதில்லை. அனைவரது எதிர்பார்ப்பு எல்லாம், இன்போஸிஸ் பங்கின் விலை. இலாபம் எவ்வளவு; பங்கு எவ்வளவு உயர்ந்திருக்கு. அவ்வளவுதான், அனைவரது எதிர்பார்ப்பு. வருமானம் எப்படி வருகின்றது. புதிய படைப்பு எதுவும் படைக்காமல், வருமானம் எப்படி வருகின்றது. எந்தவொரு கேள்வியும் யாரும் எழுப்புவதேயில்லை.

    இன்போசிஸ், விப்ரோ, டாட்டா - எல்லாம், இன்றைக்கும் செய்யும் ஒரே வேலை - பாடி ஷாப்பிங்.

    உலக நிறுவனங்களுக்கு, ஆட்களை சப்ளை செய்யும் செயலைத்தான், இன்னும் செய்து கொண்டு இருக்கின்றார்கள். என்ன திறமை ஆட்கள் தேவை; எத்தனை ஆட்கள் தேவை; எவ்வளவு நாட்களுக்கு தேவை. இந்தத் தொழிலைத்தான், இன்போசிஸ், இன்றும் செய்து கொண்டு இருக்கின்றது.

  • IT Workers

    நம்ம ஆட்களும், பேஸ்புக், டிவிட்டர் என்று அனைத்தையும் பயன்படுத்துவார்கள். அதில், ஒருத்தர்கூட, இந்தமாதிரி ஒரு படைப்பை, நம்மால் உருவாக்க முடியாதா என்று எண்ணுவதே இல்லை.

    இன்றைய இளையசமுதாயம், இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கின்றார்கள். படிப்பு முடித்தவுடன் வேலை; காம்பெஸைவிட்டு வெளியேறும் முன்னமே வேலை. குடும்பத்தினர்கள் ஆனந்தம்; சுற்றத்தாரிடம் பெருமை; திகைப்பூட்டும் சம்பளம்; சமுதாயத்தில் அந்தஸ்து குபீர் என்று உயர்ந்த நிலையை அடைகின்றது. இது, அவர்கள் வேலையாற்றும் அலுவலகத்தில் வெளியே உள்ள நிலை.

    அலுவலகத்தில் நுழைந்தவுடன், சித்தாளு நிலை. உலகத்தின் எந்த கோடியிலோ இருந்து ஒரு மேனேஜர், ஏன் இந்த தவறு நேர்ந்தது? என்று கேட்டு ஈமெயில். தாங்கள் படைத்த படைப்புகளையே, பராமரிப்பதில் ஆயிரம் சிக்கல். இது எவனோ படைத்த படைப்பு; சாப்ட்வேர்தாங்க; அதனை இவர்கள் பராமரிக்க வேண்டும்; சுணாமி மாதிரி எதாவது வந்தால், மொத்தமும் பூட்டகேஸாயிடும். இவர்களை வாட்டி வதக்கி எடுத்து விடுவார்கள்.

    அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தவுடன், சென்னப்பட்டிணத்து இராஜா மாதிரி, மதிப்பு, அந்தஸ்து. உள்ளே சித்தாளு; வெளியே இராஜா. இன்றைய இளையசமுதாயம், இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கின்றார்கள். இதுதான் இந்தியாவில் ஐ.டி. நிலை.

    இதைத்தவிர, வெளிநாடுகளுக்கு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் என்று காண்ட்ராக்ட்டில் அனுப்பி வைக்கின்றார்களே; அவர்கள் நிலைமை இதைவிட மோசம். அங்கே, உள்ளேயும் சித்தாளு; வெளியிலேயும் சித்தாளு.

    படைப்பாளிகளுக்கு, சினிமாத் துறை சிறந்த துறையாக அமைந்து இருக்கின்றது. அதுபோல, ஐ.டி துறையும் படைப்பாளிகளுக்கு சிறந்த துறையாக அமைந்து விடும். நமது இளையதலைமுறையினர்கள், ஐ.டி. துறையில் எடுபிடி வேலை செய்பவர்களாகவும், லைட்பாய்களாகவுதான் வலம் வருகின்றார்கள். அவர்கள் வாங்கும் சம்பளத்தை வைத்து எடைபோடாதீர்கள். அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தில், அவர்கள் வாங்குவது கடைநிலை ஊழியர் சம்பளம்தான்.

    சினிமாவில், லைட்பாய் என்று வேலையில் சேர்ந்தவர்கள், ஆர்வத்துடன், தங்களது திறமையை வளர்த்துக் கொண்டு, சரியான வாய்ப்பு வரும் வேளையில், தங்களது திறமையை வெளிப்படுத்தி, உயர்ந்த நிலையை அடைந்து விடுகின்றார்கள்.

    ஐ.டி துறையில் சித்தாளுவாக பணியாற்றுபவர்களும், உயர்ந்த நிலையை அடைய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் ஏராளம். ஆனால், ஆர்வம் துளிக்கூட இல்லாத பரிதாப நிலை. அதுதான் நமது கல்வித்துறையின் அவல நிலை.

    நமது கல்வி முறை, மனிதனின் ஆர்வத்தை முழுவதுமாக அழித்துக் கொன்று விடுகின்றது. வேலைக்கு செல்லும் பருவத்தில், இளையதலைமுறையினர், முற்றிலும் டையர்ட் ஆகி விடுகின்றார்கள். மார்க், டெஸ்ட், ரேங், அந்த திறமை, இந்த திறமை, இதில் ஜெயித்துக் காட்டு, அதை வென்று காட்டு, ஓடு, ஓடு, ஓடிக்கொண்டே இரு; சிகரத்தை அடைந்தால், அங்கு சற்று இளைப்பாறி சிகரத்தின் அழகினை ரசித்து வாழ்க்கை அனுபவி என்று சொல்வதில்லை.

    கடந்த நாற்பது ஆண்டுகளில், நமது கல்வி முறையில் சிக்காதவர்களும்; சிக்கி, முப்பத்து ஐந்து பாஸ்மார்க்கை மட்டுமே எடுத்து, தப்பிப் பிழைத்தவர்கள் மட்டுமே, வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ரேங் எடுத்தவர்கள் அனைவருமே, புத்தகம் என்றாலே வெறுப்பு என்ற நிலையில்தான், பட்டதாரிகளாக, நமது பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுகின்றார்கள்.

    ஆக, உண்மை நிலை இதுதான். கூகுளையோ, பேஸ் புக்கையோ, டிவிட்டரையோ, நாம எதனையும் உருவாக்கவில்லை. உலக அளவில், ஐ.டி துறையில் எண்ணிக்கையில் மிகுந்து இருக்கின்றோம். அந்த துறைக்கு தேவையான, கடைநிலை ஊழியர்களாகவே, நமது இளைய சமுதாயம் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். நாமும், அவர்களின் அவல நிலையை அறியாது, ஐ.டி துறையினரால்தான் விலைவாசி உயர்ந்து விட்டது என்று வஞ்சிக்கின்றோம். அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களும், அவர்களை கடைநிலை ஊழியர்களாகவே நடத்தி வஞ்சிக்கின்றார்கள்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, நமது கல்வித்துறையினர், இளையசமுதாயத்தின், சிறகினை ஒவ்வொன்றாக வெட்டி, ஆர்வத்தினை அறவே அழித்து, மிகவும் இழிவான நிலையில், இந்தியாவின் ஐ.டி; மற்றும் இளையபாரதம்.

    ஐ.டி. இளைய சமுதாயமே, புதிய மனிதனாகப் பிறந்து வா; இந்த நொடியில், ஏற்படட்டும் அந்த மனமாற்றம். உன்னுடைய சித்தாளு பணியை தொடர்ந்து செயலாற்று. அதைத்தவிர, உன்னோட சுதந்திரத்துக்காக; ஐ.டி துறையிலேயே படைப்பாளியாக உருவெடு; உன்னை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாய்ப்புகள், சாதனங்கள், அனைத்தும் கொட்டிக் கிடக்கின்றது. தேவை எல்லாம், உனது ஆர்வம் மட்டுமே.