பஞ்சும் நெருப்பும்
  • Erotic

    இது, மரச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்ட கலைச்சிற்பம்.

    அவர்களின் உடை, மற்றும் சிகை அலங்காரங்களைக் காணும்போது, ஐந்நூறு ஆண்டுகள் பழைமையான கலைச்சிற்பமாகவே காட்சி அளிக்கின்றது.

    ஐந்நூறு ஆண்டுகள் பழமையான, மரத்தில் செய்யப்பட்ட பொருள், இத்தனை காலம், அதிக அளவு சேதாரம் அடையாமல் இருக்கின்றதென்றால், அது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்.

    செய்யப்பட்ட மரம், சிறந்த மரமாக இருந்திருக்க வேண்டும். மெயின் பொருளை விட்டுவிட்டு, சுற்றியுள்ள பிரேமில் உருவாக்கியுள்ள டிஸைன், மற்றும் படர்ந்து இருக்கும் கொடி, மிக நேர்த்தியான கலைத்திறனை வெளிப்படுத்துகின்றது.

    அதுவும், அந்த sequence of action, demonstrates their animation skills. செதுக்கப்பட்ட சிற்பத்தில் உள்ள, ஆடவர், மற்றும் பெண்டிர் இருவரின் உடல்வாகு, அவர்களது ஆரோக்கிய நிலையை தெளிவாக அறிய உதவுகின்றது.

    சிற்பி செதுக்கிய சிற்பத்தின் பொருள், காமநிலை. செயலின் மூலம், செயலற்ற நிலையை அடையும் செயல். இந்த மெய்யான பொருளினால், இந்த சிற்பம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் பாதுகாக்கப்படுகின்றது. சிற்பி, வேறு ஏதாவது மெய்யற்ற பொருளை, மையக்கருத்தாக சிற்பத்தை செதுக்கி இருந்திருந்தால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னமே, இந்த மரக்கட்டை, அடுப்பில் விறகாக எரிந்து, சாம்பலாகப்போய் இருந்திருக்கும்.

    கலைச் சிற்பம், காலத்தைக்கடந்து வாழ்கின்றது. வடிவமைத்த சிற்பி, மற்றும் சிற்பத்தில் இருக்கும் ஆடவர், மற்றும் பெண்டிர், மண்ணோடு மண்ணாக மக்கிப்போய் விட்டனர். அவர்கள், எத்தனை காலம் வாழ்ந்திருந்தார்கள் என்று தெரியாது. ஆனால், ஆனந்தமாக, வாழ்க்கையை பரிபூரணமாக, முழுமையாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்ற மெய்ப்பொருளைக் காணமுடிகின்றது.

    திருக்குறள், மற்றும் இலக்கியங்களில், அன்பு, பாசம், காதல், காமம் என்று அனைத்து இன்பங்களையும் முழுமையாக அடைந்து பரிபூரண வாழ்வை வாழும்வகையில், கலாச்சாரத்தினை நெறிமுறைப்படுத்தி இருக்கின்றார்கள், சான்றோர்கள். இன்பத்தினை அடையாமல், தியாகம் செய் என்று, யாரும் சொல்லவில்லை.

    ஆனால், படிப்படியாக, காதல் இன்பம், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவினைப்போல் குறைந்து, இன்று முழுமையாக வற்றி, பாலைவனமாக மாறிவிட்டது. தியாகராஜர் பாகவதர் பாடினார்; மன்மத லீலையை வென்றோர் உண்டோ என்று. அதன் பிறகும்கூட, அன்பு, காதலுக்காக ஏக்கத்துடன் பாடல்கள் அமைந்து இருந்தது:

    நெருப்பென்று சொன்னால்,
    நீரிலும் அணையும்;
    நீர் என்று சொன்னால்,
    நெருப்பிலும் வேகும்;
    நான் கொண்ட நெருப்பு
    அணைக்கின்ற நெருப்பு;
    யார் அணைப்பாரோ?

    சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
    மேனிக்குள் ஆடும் மனமென்னும் ஞானி
    ஞானியின் மனமும், ஆசையில் தேனி.
    கல்லிலே ஈரம் உண்டு, கண்களா அறியும்?
    என் மனம் என்னவென்று
    என்னையன்றி யாருக்குத் தெரியும்?

    என்று, மங்கையின் ஏக்கத்தை கவிதையில் எடுத்துரைத்தார்கள், கவிஞர்கள். அபூர்வ ராகங்கள். பஞ்சும் நெருப்பும் நெருக்கத்தில் இருந்தது. சும்மா, எக்குத்தப்பா பத்திக்கிடுச்சு. இன்றைய காலகட்டத்தைப் பார்க்கலாம், வாருங்கள்.

    அது, ஒரு தொலைக்காட்சி நிலையத்தின் அரங்கு. கேமரா தொழிற்நுட்ப வல்லுனர், மும்முரமாக பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு உதவியாகப் பணியாற்றும் நபர், அருகில் வந்து உரையாடினார். அண்ணே, இன்னைக்கு அரங்கமே, சும்மா கிலுகிலுப்படையப் போகுது அண்ணே. இளையதலைமுறையினர், கலந்துரையாடல், வாலிப பசங்களும், இளம் நங்கைகளும் பங்கேற்கின்றார்கள்.

    அதற்கு, கேமரா தொழிற்நுட்ப வல்லுனர், உதவியாளரின் தலையில் ஒரு தட்டு தட்டி; போடா; போய் வேலையைப்போய் பாருடா.

    ஏன் அண்ணே, எப்பவும் சிடுசிடுன்னு இருக்கீங்க. கொஞ்சம் சந்தோஷமாக சிரிச்சு, வாழ்க்கையை அனுபவிங்கண்ணே.

    அதெப்படிடா, சந்தோஷமாக இருக்க முடியும். அதுவும், இந்த ஷோவில், டாக் ஷோவில் வேலை செஞ்சுக்கிட்டு, அவங்க பேசுகின்ற பேச்சைக் கேட்டுக்கிட்டு, எப்படிடா, மனுஷன், சந்தோஷமாக இருக்க முடியும்.

    உங்களுக்கு ஏன் அண்ணே, இவ்வளவு டென்ஷன். மத்தியில் நின்று கொண்டு, நடத்துகின்றவருக்கு டென்ஷன் இருப்பது நியாயம். உங்களுக்கு எதுக்கு டென்ஷன்; கேமரா பின்னாலே இருக்கீங்க. கண்ணை மூடிக்கிட்டு, வேலையைப் பார்த்துட்டு, வீட்டுக்குப் போகவேண்டியதுதானே.

    மத்தியில் நின்று கொண்டு, டாக் ஷோவினை நடத்துகின்றவர், அவரது உணர்வுகளை அங்கேயே கொட்டிவிட வாய்ப்பு கிடைக்குது. அவுங்களோட சேர்ந்து சிரிச்சுக்கிறார்; கோபித்துக் கொள்கிறார்; லந்து செய்து, கேலி கிண்டல் என்று கொட்டிவிடுகின்றார். நமக்கு அப்படி வாய்ப்பு கிடைப்பதில்லையே. போடா; போய் வேலையைப் பாரு.

    அரங்கின் இரண்டு பக்கங்களிலும், படிக்கட்டுபோன்று மேடை அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு பக்கம், வாலிப பசங்கள் அமர்ந்து இருக்கின்றார்கள். மறுபக்கம், இளம் நங்கைகள் அமர்ந்து இருக்கின்றார்கள். டாக் ஷோ ஆரம்பமானது. கேமராமேன், கேமராவை ஆன் செய்துவிட்டு, தனது கனவுலகில், இளமை பருவத்தை நோக்கிப் பின்சென்று, சும்மா மனசு இறக்கைக்கட்டி பறக்குது.

    செல்போன், இண்டநெட்; ஏன், பைக்கூட கிடையாது. சைக்கிள், அதனை வைச்சுக்கிட்டு, இளம்பெண்களைக் காண மனசு அலைபாய்ந்த காலம். கூடப்படிக்க வாய்ப்பில்லை; பேச வாய்ப்பில்லை; ஓடிப்பிடித்து விளையாட வாய்ப்பில்லை. ஆனாலும், மன்மத அம்புகளை மங்கையர்களை நோக்கி வீசத் தயங்குவதேயில்லை. கையில் எட்டணாவுக்கு மேல் காசு கிடையாது; ஆனாலும், சைட் அடிப்பதில் குறையொன்றுமில்லை. சிலோன் ரேடியோவைத்தவிர, தொலைக்காட்சி சேனல்கள் எதுவும் இல்லை. அப்படி தூர் தர்ஷன் வந்தாலும், அதில் வயலும் வாழ்வும்தான்.

    அந்தகாலத்தில்மட்டும், இந்தமாதிரி, தொலைக்காட்சி; அதில், இளையதலைமுறையினரின் எண்ணங்கள், சிந்தனைகள் பரிமாற்றம். இந்தமாதிரி, வாய்ப்பு கிடைத்திருந்தால், சும்மா, மன்மத அம்பு, இந்தப் பக்கம் இருந்து, அந்தப் பக்கம் பறந்து சென்று, உள்ளங்களை இணைத்திருக்கும். வரும்போது இருவராக வந்தோம்; திரும்பும்போது, உள்ளங்கள் இணைந்து ஒருவராக செல்கின்றோம் என்று உல்லாசமாக சென்று இருந்திருப்பார்கள்.

    கேமராமேன், கொஞ்சம் கனவு கலைஞ்சு, நிஜத்துக்கு வந்தார். டாக் ஷோ, முடியும் தருணம். தனது உதவியாளரை, அருகில் அழைத்து, இரண்டு நிமிஷத்துக்கு லைட்டை ஆப் பண்ணு என்றார்.

    அண்ணே, ஆளை விடுங்கண்ணே. உங்க சகவாசமே வேண்டாம். நீங்க உங்க வேலையைப் பாருங்க; நான் என்வேலையைப் பார்க்கிறேன். லைட்டை ஆப் பண்ணினால், என் வேலை போயிடும் என்றார்.

    அதெல்லாம் ஒண்ணு ஆகாதுடா; எதுவானாலும், நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

    உதவியாளர், லைட்டை ஆப் செய்து விட்டார். சும்மா டபடபவென்று, இரண்டு பக்கங்களில் இருந்து ஓடும் சத்தம். பிறகு, முக்கல், முனங்கல். இரண்டு நிமிஷம் கழித்து, லைட்டை ஆன் செய்துவிட்டு, உதவியாளர், அருகில் வந்து; என்ன அண்ணே, இப்படி இருக்காங்கே; இன்னும், பத்து நிமிஷம் விளக்கை அணைச்சா, பிரசவமே ஆகியிருக்கும்போல இருக்கு. எல்லாரும், மேல் மூச்சு, கீழ் மூச்சு இரைக்க அமர்ந்திருக்கின்றார்கள். முகமெல்லாம் வேர்த்து, கண்ணம் சிவந்து இருக்கு. சிலருக்கு லேசான கீறல்கள்; இரத்தக் கசிவுகள். அண்ணே, பஞ்சும் நெருப்பும் பத்திக்கிடுச்சு அண்ணே.

    இப்பத்தான், கேமராமேன் முகத்தில், மெல்லிய கேலிச் சிரிப்பு மலர்ந்தது. அவசரப்படாதடா; ஷோ முடியட்டும். அனைத்தும் கேமராவில் ரெக்கார்ட் ஆகியிருக்கு. போட்டுப் பார்க்கலாம்.

    ஷோ முடிந்தது; பிளவுபட்டுக் கிடந்த அரங்கினை, சிறப்பு விருந்தினர்கள், மேலும் பிளவுபடுத்திச் சென்றார்கள். பரிசுகள் வழங்கப்பட்டது. கேமராமேனும், அவரது உதவியாளரும், அவர்களது அறைக்குள் சென்று, அந்த இரண்டு நிமிஷ காட்சியை ஓடவிட்டுப் பார்த்தார்கள்.

    இளம் நங்கைகள், அங்கிருந்து வாலிபர்களின் பக்கம் ஓடிவருகின்றார்கள். வாலிபர்கள் சிலர், நங்கைகளின் பக்கம் ஓடிச்செல்கின்றார்கள். சும்மா, அடி பின்னி எடுக்கின்றார்கள். ஆண், பெண் சமத்துவம் அடைந்த உண்மை நிலையைக் காணமுடிகின்றது. பெண்கள், வாயில் இருந்து வார்த்தைகளை விஷமாகக் கொட்டி, முரட்டுத்தனமாக அடிக்கின்றார்கள், ஆடவரை. ஏண்டா, என்ன கேள்வி கேட்கிறே; கல்யாணம் ஆறதுக்கு முன்னாடியே, இப்படி கேள்வி கேட்டு, பொது அரங்கில், பெண்களை இழிவு படுத்தி பேசுகின்றாய்; நீயெல்லாம், கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அவளை என்ன பாடு படுத்துவாய். வாயில் இருந்து வரும் வார்த்தைகளைத்தவிர, விழும் அடி, அவனால் தாங்க முடியவில்லை.

    அந்தப்பக்கம், வாலிபர்கள் ஒன்று சேர்ந்து, பெண்களை அடித்து, துவைத்து எடுக்கின்றார்கள். அடங்கவே மாட்டேங்கிறே; எதுத்து எதுத்து பேசுறே. என்ன என்னமோ சொல்லி, திட்டித்தீர்த்து, அடி அடியென்று அடி.

    இதுதாங்க, இன்றைய சமுதாயம். நீங்க, அவுங்க, இவுங்க, நாங்க என்று அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து உருவாக்கிய சமுதாயம். காமமாவது, கத்திரிக்காயாவது. அன்பு; அன்பே இல்லை. அன்பு இருந்தால்தானே, காதல் வரும்; வளரும். காதல் கனிந்து, பொங்கி, பெருகி, காமத்தில் அடங்கும். இங்கே, அன்பே இல்லை.

    அன்பு, எப்படி இருக்கும். அகம் தூய்மையாக இருந்தால்தான், அங்கு அன்பு மலர் மலரும். அகம் அச்சம் சூழ்ந்த அகமாக இருக்கின்றது. அச்சம் இல்லையென்றால், போட்டி, பொறாமை என்று மாசுபடிந்து கிடக்கின்றது.

    அன்பு அறவே இல்லாத பூவுலகில், மன்மத அம்புக்கு வேலையே இல்லை. மன்மத அம்பு, துருப்பிடிச்சு, வீணாகப் போயிடுச்சு.

    ஆக, இளைய தலைமுறையினரைக் குறை சொல்லவே முடியாது. பெரியவர்கள் பொறுப்பில்லாமல் உருவாக்கிய இன்றைய சமூகநிலையில், சிக்கித்தவிப்பது, இன்றைய இளைய தலைமுறையினர். இன்றைய காலகட்டத்தில், பஞ்சு பஞ்சாக இருப்பதில்லை; நெருப்பும் நெருப்பாக இருப்பதில்லை. ஆக, என்னதான் நெருக்கமாக சூழ்நிலை இருந்தாலும், எதுவும் பற்றிக்கொள்வதேயில்லை. இளமை முழுவதும் வீணாகப்போய்க் கொண்டு இருக்கின்றது.