இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த 3 இடியட்ஸ் படம் வெளியானது. அலுவலகத்தில் இருந்த அனைவரும், குடும்ப சகிதம், திரையரங்கில் படத்தைக்கண்டு ரசித்தார்கள். வார விடுமுறை கழிந்து, திங்கள்கிழமை காலை வேளையில், அலுவலகம் வந்திருந்த அனைவரது முகத்திலும், அப்படி ஒரு மகிழ்ச்சி; அகம் மகிழ்ந்து, அந்த மலர்ந்த அகத்தின் அழகு, முகத்தில் தெரிந்தது.
ஒரு திரைப்படம், இத்தனை பேரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று வியந்து கேட்டேன்; என்ன; என்ன படம்; அப்படி என்ன கதை; என்ன விஷயம், உங்களை இவ்வளவு மனமகிழ்ச்சி அடையச் செய்தது.
இதற்கு அவர்கள் அளித்த பதில். இது மாதிரியான திரைப்படம், இதுவரை வந்ததில்லை. இனியும் வரப்போவதுமில்லை. All is well. அவர்களது, இத்தகைய பதில், என்னை வியப்பில் ஆழ்த்தியது. திரைப்படத்தினைச் சென்று பார்க்க ஆவலைத் தூண்டியது.
ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுதெல்லாம், All is well, என்றார்கள். இப்படி ஒரு மனம்திறந்து பழகும் மனிதர்களை, சமீபகாலங்களில் அலுவலகங்களில் காணுவது, மிக அரிதான விஷயமாகி விட்டது. அந்த வாரம் முழுவதுமே, அனைவரின் பேச்சும், 3 இடியட்ஸைப் பற்றியே இருந்தது. All is well அடிக்கடி, திக்கெட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மறுவாரம், 3 இடியட்ஸைப் பற்றிய பேச்சு, சற்றுக் குறைந்தது. மீண்டும் பழைய நிலைக்கு அலுவலகம் திரும்பியது. முகங்கள் வாடிய நிலையை அடைந்திருந்தது. அப்பொழுதும் அருகில் சென்று பேசிய பிறகு, All is well என்றவுடன், மின்னல் என புத்துணர்வு பூத்துக் குலுங்கியது. 3 இடியட்ஸை பார்க்கத் துடித்த துடிப்பு, சற்று தளர்ந்தது.
அதற்கு அடுத்த வாரம், முகங்கள் வாடி, மனம் வருத்தத்துடன், தங்களது உத்தியோக பந்தயத்தில் ஓடும் குதிரைகளாக ஓட்டத்தை தொடர்ந்தனர். என்னதான் குதிரை வேகமாக ஓடினாலும், கிண்டி மைதானத்தைத் தாண்டி எந்த உயரத்தையும், அகலத்தையும், நீளத்தையும் அடையப்போவதில்லை. அகத்தில் குடிகொண்டு இருக்கும் அச்சம், மன வருத்தம், வாழ்க்கையை வாழமுடியாமல் தவிக்கும் தவிப்பு, அப்படியே முகத்தில், சொல்லில், செயலில் வெளிப்பட்டது. All is well என்றவுடன், ஆத்திரம் வெளிப்பட்டது. All is not well என்ற புது வசனம் ஒலித்தது. 3 இடியட்ஸ் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், அப்படியே விலகிப்போய் விட்டது.
நண்பன் படம் வெளிவந்தவுடன், குடும்பத்துடன் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. நண்பன் படம், நன்றாகவே ரசித்து பார்த்தேன். திரைக்கதை, நடித்தவர்களின் நடிப்பு, அனைத்து அம்சங்களும் திருப்தியாகவே அமைந்திருந்தது. குறையொன்றுமில்லை.
புஸ்தகங்களைப் படித்து முடிக்கும் பொழுது; திரைப்படங்களைப் பார்த்து ரசித்து வெளிவரும் பொழுது; அலுவலகத்தில் ஒரு புராஜெக்ட் நிறைவு பெறும்பொழுது; உணவு அருந்திய பிறகு; என்று ஒரு செயலின் முடிவில், ஒருவித திருப்தியுணர்வு கிட்டும். வெவ்வேறு உணவு வகைகளுக்கு, வெவ்வேறு விதமான திருப்தி உணர்வு உள்ளம் அடையும்.
அதுபோல, இந்த நண்பன் படம் பார்த்தபிறகு, உள்ளம் அடைந்த உணர்வு எப்படியென்று சொல்ல வேண்டுமானால்; திரைப்படத்தையும் தாண்டி, இன்றைய சமுதாயம்; அதுவும் கல்விசாலை; அங்கு பயிற்றுவிக்கும் விதம்; பேராசிரியர் மாணவர் உறவு, அனைத்தையும் அறிய சிறந்ததோர் வாய்ப்பு கிடைக்கின்றது.
உடல் ஆரோக்கியத்துக்காக, மருத்துவரை சந்தித்து வெளியேவரும் வேளையில், மருத்துவர் சொன்ன வார்த்தைகள் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். இதுதான் இன்றைய சமுதாயம்; இதுதான் இன்றைய கல்வி சாலை. முற்றிலும் சேதம் அடைந்துபோய்விடவில்லை. நோய்யின் தன்மையை அறிந்து, தக்க சிகிச்சை அளித்தோமேயானால், இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் அடையலாம். அந்தவிதமான திருப்தி உணர்வு, நண்பன் திரைப்படம் பார்த்தபொழுது கிட்டியது.
முன்பெல்லாம், தியேட்டரில் மெயின் பிக்சருக்கு முன்னாடி, சோப்பு விளம்பரத்தில் இருந்து அனைத்துவிதமான விளம்பரங்கள் திரையிடுவார்கள். விளம்பரங்கள் முடிந்தவுடன், Indian News Review என்ற செய்தி படமும், அதனைத் தொடர்ந்து, அண்ணா சமாதியைக் காட்டி, தமிழக அரசின் செய்திப்படம் என்று இரண்டு செய்திப்படங்களைத் திரையிடுவார்கள். அந்த செய்திப் படங்களில், பீகாரில் வெள்ளம்; சாலை விபத்து; இரயில் விபத்து; எல்லையில் போர்; இராணுவ படை அணிவகுப்பு என்று அமைந்திருக்கும். தமிழகச் செய்தி என்றால், அந்தப் பாலத்தினைத் திறந்தார்; இந்த சிலையினைத் திறந்தார் என்று செய்தி இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில், அத்தகைய செய்திப் படங்கள் திரையிடுவதில்லை. துள்ளிக்குதித்து அருவியில் குளிக்கும் லிரில் அழகியின் விளம்பரமும் இல்லை. இன்றைக்கு மெயின் பிக்சரே, செய்திப் படமாகி விட்டது.
அன்பே வா. புதிய பறவை. திருவிளையாடல். தில்லுமுல்லு. பாபி. மரோசரித்ரா. பதினாறு வயதினிலே, திரைப்படங்கள். இலக்கியங்கள்;
எதுவுமே செய்தியைத் தவிர்த்து, ரசனையை உயர்த்தும் வகையில் அமைவதில்லை. சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம், முழுக்க முழுக்க சாலை விபத்தினைப் பற்றிய செய்திப்படமாகவே அமைந்திருந்தது. நண்பன், இன்றைய கல்விச்சாலையின் அவலநிலையைக் காட்டும் செய்திப்படமாகவே அமைந்திருக்கின்றது.
அந்த விண்வெளி பேனா பற்றிய தகவல், மிகவும் சிறந்த தகவல். விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை குறைவு. அதையும் தவிர, விண்வெளியில் பயணம் செய்யும் அறிவியல் அறிஞர்கள், எந்தவொரு கோணத்திலும், மிதந்து கொண்டு எழுதவேண்டிய நிலை. ஆதலால், பேனாவில் உள்ள இங்க் எழுதும் நிப்புக்கு வந்தடைவது கடினம். ஆக, இந்த பேனா, விண்வெளியில் பயன்பட ஏதுவாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது, என்று பேராசிரியர் கூறுவார். அந்த உரையில், மாணவர்களுக்கு நல்ல சிறந்த தகவல்கள் அமைந்திருந்தது.
அந்த தருணத்தில், கதையின் நாயகன் பாரி, பேராசிரியரை நோக்கி, தனது கருத்தினை, கேள்வியின் வழியாக சொல்லுவார். எதுக்கு, இவ்வளவு கஷ்டப்பட்டு, விண்வெளியில் பேனாவை உபயோகப்படுத்த வேண்டும். சிம்பிளா, பென்சிலை பயன்படுத்தலாமே என்பார். அதுவும் மிகச் சிறந்த தகவல். சொல்லப்பட்ட தகவல், நல்ல தகவலாக இருந்த பொழுதிலும், சொன்னவிதம் பேராசிரியரைக் காயப்படுத்தி விட்டது. அந்த காயம், இறுதிவரை ஆறவில்லை.
இறுதியில், பதிலடி கொடுப்பதற்காக காத்துக்கொண்டு இருக்கின்றார், பேராசிரியர். பென்சில் ஊக்கு உடைந்து விட்டால், விண்வெளியில் தங்கி மிதக்கும். எதிர்பாராதவிதமாக, யார் கண்ணிலாவது அல்லது வாயிலாவது புகுந்து விடும். அல்லது ஏதாவது மெஷினில் புகுந்து பழுதடையச் செய்துவிடும்.
ஆக, இருவரும் மிகச்சிறந்த தகவல்களை எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அந்த தகவல்களை பரிமாற்றிக் கொண்டோம் என்ற திருப்தி உணர்வு, இருவருக்கும் ஏற்படவில்லை. இவர்களையும்தாண்டி, வேறு எவருக்கும், அந்த தகவல்கள் சென்றடைவதில்லை.
இதுதான் இன்றைய பிரச்சனை. தகவல் வேறு; கருத்து வேறு. கருத்து என்பது, முடிவு. இதுதான் எனது கருத்து. இதுக்கு மேலே பேசி பிரயோசனமில்லை. எனது கருத்தினை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆக, கருத்து பரிமாற்றம் என்பது கிடையாது. கருத்து திணிப்புதான், உலகெங்கும் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது.
தகவல் என்பது முடிவல்ல; தொடக்கம். என்ன தம்பி சொல்றே; பென்சில்; நல்ல விசயமாகத்தான் இருக்கு. ஒரு காரியம் செய்யலாமா. நீயே, விண்வெளியில் பென்சிலை ஏன் பயன்படுத்துவதில்லை என்று கண்டறிந்து, அனைவருக்கும் தகவலை எடுத்துச் சொல்லு.
கல்விசாலை என்பது, அனைவரும் கற்றுக் கொள்ளும் இடமாக மாறவேண்டும். மாணவர்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கின்றார்கள்; ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வந்திருக்கின்றார்கள்; என்பது சரியான கண்ணோட்டம் அல்ல. கல்விசாலையாகட்டும், அலுவலகமாகட்டும், சட்டசபையாகட்டும், அனைத்தும் குடும்பங்களைப்போல் செயல்பட வேண்டும். மகனிடம் இருந்து தாய் கற்றுக் கொள்கின்றாள்; தாயிடம் இருந்து மகன் கற்றுக் கொள்கின்றான்.
நாம, இன்றைய காலகட்டத்தில், அனைத்து இடங்களையும், குருஷேத்ராவாக மாற்றி விட்டோம். கல்விசாலை; சாந்தி நிலையம் ஆஸ்பத்ரி; தமிழக சட்டப்பேரவை; விண்வெளி அறிவியல் மையம்; குடும்பங்கள்; ஒரு இடம் விடாமல், எங்கு நோக்கிலும், குருஷேத்ரா தான். நான் பாண்டவன்; நீ கெளரவர். இதிலே, அஹிம்சை வேறே. குருஷேத்ராவின் நடுவில், கீதா உபதேசம்.
அமெரிக்காவில், சான் டியோகோ பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கின்றார். ராகத்தோடு, சம்ஸ்கிருதத்தில் கீதையில் இருந்து இசையோடு பாடிக் கொண்டே, பொருளை எடுத்துரைக்கின்றார், பேராசிரியர். அனைவரும், மெய்மறந்து பேராசிரியரின் வாயையே பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். பேராசிரியருக்கு சந்தேகம் வந்தது. நாம சொல்வது அனைத்தும் இவர்களுக்கு புரிகிறதா; இப்படி மெய்மறந்து, அங்கு இங்கு அசையாது சிலையாக இருக்கின்றார்களே; பொருள் அனைத்தும் புரிந்து விட்டதா என்று.
அடுத்த அத்தியாயத்தைப் படிக்கும்போது, ராகத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டு, பொருளை தெளிவாக எடுத்துரைக்கத் தொடங்கினார். வகுப்பறையில், கொஞ்சம் சலனம், சப்தம் கேட்டது. பேராசிரியர் உணர்ந்து கொண்டார்; மெய்மறந்து இருந்த நிலை, இசையைக் கேட்டு. இசை நின்றவுடன், பொருள் புரியாததால், பல் வேறு கேள்விகள் எழும்பின.
ஆக, கீதா உபதேசத்தின் மூலம், போர் நியாயப்படுத்தப்பட்டது. அந்த நியாயம் உண்மையென்றால், உண்மை நிலைத்து நிற்கவேண்டுமே. பாண்டவர்கள் இன்றும் ஆண்டு கொண்டு இருக்கின்றார்களா; போர் முடிந்தவுடன், எத்தனை ஆண்டுகள், பாண்டவர்கள் ஆண்டார்கள். ஒரு சில நூற்றாண்டுகளில், பாண்டவர்கள், தங்களது தேசத்தை இழந்தார்கள் என்றால், அதற்கு அந்த போரை முற்றிலுமாக தவிர்த்து இருந்திருக்கலாமே. எதற்கு இந்த கீதா உபதேஷம்.
ஆக, இன்றைய கல்விசாலையை குருஷேத்ராவாக உருவாக்கி விட்டோம். பாரி கிருஷ்ண பரமாத்மா; லீலை, குறும்பு, சேஷ்டை. பேராசிரியர் சத்யராஜ் துரோணரோ, பீஷ்மரோ. மாங்கு, மாங்கென்று படிக்கும் மாணவன், துரியோதனன், துச்சாதனன். All is well கீதா உபதேசம்.
படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள், தங்களது பாரியைத்தேடி அலைகின்றார்கள். தங்களுக்கு பாரி கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கின்றார்கள். யாராவது ஒருத்தர் வழிகாட்டிக் கொண்டே இருக்க வேண்டும். குடும்பத்தில் தந்தை; கல்விசாலையில் பாரி அல்லது பேராசிரியர்; பிரச்சனை என்று வந்து விட்டால், ஜோசியர் காட்டும் வழியே சிறந்த வழி; அலுவலகத்தில் மேனேஜர் காட்டும் வழி.
உனக்கு எது சரின்னு படுதோ, அதுமாதிரி செய் என்று சொல்லிவிட்டால் போதும்; இன்றைய சமுதாயம் அல்லல்பட்டுப் போய்விடுவார்கள். சுப்பிரமணி பாரதியார், இறக்கை கட்டி பறந்து, பூவுலகத்தை வலம் வந்து விடுவார். சுப்பிரமணி சுவாமி, இருக்கின்ற சட்டமே போதும் என்று செயலில் ஈடுபட்டு விடுவார்.