இந்தப் படத்தில் மூன்று வகையான சிறுவர்களைக் காண முடிகின்றது. முதல் சிறுவர்கள், சீருடை அணிந்து, கையில் துப்பாக்கியோடு இருக்கின்றார்கள். அந்த சிறுவயதிலேயே துப்பாக்கியை தூக்க வேண்டிய அவசியத்தை வலியுருத்த, ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள்; காரணங்கள் நியாயமானதாகவும் இருக்கக்கூடும். இரண்டாவது சிறுவர்கள் முற்றும் துறந்த முனிவர்களாக காட்சி அளிக்கின்றார்கள். மூன்றாவதாக இருக்கும் சிறுவர்கள், தங்களது இஷ்டத்துக்கு விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த சிறுவர்களில், எந்த சிறுவர்கள் ஆனந்தமாக, அந்த இளமை பருவத்தை, பூரணமாக அநுபவித்து வாழ்கின்றார்கள் என்ற கேள்விக்கு எளிதாக பதில் கிடைத்துவிடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல், சட்டை ஒன்றும் போடாமல் சக நண்பர்களின் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு இருக்கும் அந்த சிறுவர்கள்தான், அவர்களது குழந்தைப் பருவத்தை பூரணமாக அநுபவித்து வாழ்கின்றார்கள். மேலேயுள்ள சிறுவர்கள், நன்கு குளித்து, புறம் சுத்தமாக காட்சி அளிக்கின்றார்கள். புறம் மிகவும் தூய்மையாக இருக்கின்றது. அகம் தூய்மையில்லை என்று சொல்ல முடியாது. அகத்தில் வயதுக்கு மீறின லட்சியம், கொள்கை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றது. அகத்தில் குடிகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பினால், அவர்களது முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. இங்குள்ள அனைவரும் கள்ளம், கபடம் இல்லாத சிறுவர்கள் என்பதால், எந்தவித போலித்தனமில்லாமல், அகத்தின் உண்மை நிலையை அப்படியே புறத்தில், அதாவது முகத்தில் காட்டுகிறார்கள். அகமும், புறமும் சம நிலையில் இருக்கின்றது.
அதுதான் சரியான வாழ்வு முறை. அகத்தில் மகிழ்ச்சியாக இருந்தால், அப்படியே புறத்தில் காட்டி விடுங்கள்; அகத்தில் சினம் இருந்தால், முகத்தில் கோபத்தை காட்டி விடுங்கள்; அகத்தில் வருத்தம், துக்கம் தொண்டையை அடைத்தால், கண்ணில் நீர் வழிந்தோடட்டும். அகம் வேறு, புறம் வேறு என்ற வேறுபடுத்த முயற்சி செய்யாதீர்கள். வேறுபடுத்தும் முயற்சிதான், மன அழுத்தம், உலைச்சலுக்கு மூலகாரணம். ஆக, இங்குள்ள அனைத்து சிறுவர்களுக்கும், அகம், புறம் சம நிலையில் இருக்கின்றது. கீழேயுள்ள படத்தில் இருக்கும் சிறுவர்கள், மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள்; அந்தச் சிறுவர்கள், அருகில் இருக்கும் நீரோடையில், கொஞ்சம் குளித்து விட்டால் போதும். புறமும் தூய்மையாகி விடும். அகமும், புறமும் தூய்மையோடு இருக்கின்ற அந்த சிறுவர்கள், தங்களது வாழ்க்கையை பரிபூரணமாக வாழ்கின்றார்கள்.
மனிதனின் அகம், மனம், உள்ளம், பால் போல் தூய்மையாக இருக்க வேண்டும். துப்பாக்கி ஏந்திய சிறுவர்களின் உள்ளம், பாலில் விஷம் கலந்ததுபோல் ஆகிவிடுகிறது. தேசம், மதம், ஜாதி, மொழியின் அடிப்படையில் தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்று மனதில் வெறி உண்டாக்கப்படுகிறது. பற்றினால் உண்டான வெறியின் விளைவு, உள்ளத்தில், மற்றவர்களின் மேல் வெறுப்புணர்வை வளர்த்து விடுகிறது. உள்ளம், நச்சுத்தன்மை கொண்ட பால் போல் மாறிவிடுகிறது. பாலில் கலந்த நச்சுத்தன்மையை மற்றவர்கள் எளிதாக அறியமுடியாது. பிற்காலத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை காணும்போதுதான், நச்சுத்தன்மையினை மற்றவர்கள் உணர முடிகிறது. துப்பாக்கி ஏந்திய அனைவரின் உள்ளத்திலும், பற்று என்ற அடிப்படையில் மனதில் ஏறிய வெறி குடிகொண்டு இருக்கும்; வெறியினால், மனதில் வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டே போகும். நச்சு கலந்த அகம், கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்; தானும் அழியும்; பிறர்களையும் அழிக்கும். அழிவின் முடிவில், அகமும், புறமும் சம நிலையை அடைந்துவிடும்.
பாலை நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைத்து, அந்தப் பாலில், சிறு துளி உறை தயிர் போட்டால் போதும். மறுநாள், பால் தயிராக உறைந்து விடும். மனம், பால் போன்று, திரவமாக இருக்கும்போது, சலனம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தயிர்போல் உறைந்த மனதில், சலனம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த சிறுவர்களுக்கு இந்த நிலை தேவைதானா? துறவறம் என்பது, ஆட்டம் எல்லாம், ஆடி அடங்கியபிறகு அடைய வேண்டிய நிலை. அந்த சிறுவர்களை துறவியாக்குவது, இயற்கைக்கு எதிரான காரியம். இது மாபெரும் கொடுமை.
தங்கள் இஷ்டத்துக்கு, குளிக்காமல், பல் விலக்காமல், நண்பர்களோடு, மகிழ்ச்சியாக இருக்கின்றார்களே, அந்த சிறுவர்களின் ஆனந்தமான நிலைதான், சரியான, இயற்கையான வாழ்க்கை முறை. இந்த பருவம்வரை, அந்த சிறுவர்களின் உள்ளம், பால் போன்று தூய்மையாக இருக்கின்றது. பால் போன்ற உள்ளத்தில் மிக ஆரோக்கியமான உள்ளம். பெரியவர்களாக வளரும்போது, பால் போன்ற தூய உள்ளத்தோடு வாழ முடியாது, ஆதலால், ஊரோடு ஒத்து வாழ, நாம் மாறித்தான் ஆக வேண்டும் என்று பலர் எண்ணுகின்றனர். பால் போன்ற தூய உள்ளத்தை இழக்க வேண்டிய அவசியமேயில்லை. பல பெரியவர்கள், இறுதி வரை, தூய உள்ளத்தோடு, அகமும், புறமும் எப்பொழுதும் சம நிலையுடன் வாழ்ந்திருக்கின்றார்கள். தூய உள்ளத்தை களங்கப்படுத்த விருப்பமில்லாமல், அவர்கள் நடத்தும் போராட்டமே - அவர்களுக்கு மன அழுத்தம், உலைச்சலை தருகிறது. பல் இருக்கின்றவர்களுக்குத்தான் பல் வலி வரும். இதயம் இருக்கின்றவர்களுக்குத்தான் இதய வலி வரும்.
இன்றைய சிலோனில் உள்ள நிலைமை: கொழும்பில் வாழும் இளைய தலைமுறைக்கு, இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இராணுவத்தில் சேருவது; மற்றொன்று, துறவறம் பூண்டுவது. அதேசமயம், யாழ்ப்பாணத்தில், இன்றைய இளைய தலைமுறை, படத்தில் கீழேயுள்ள சிறுவர்களைப்போல், வாழ்க்கையை பரிபூரணமாக அநுபவித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில், இளைய தலைமுறை, துப்பாக்கியை கைவிட்டு விட்டது. அவர்கள் என்றைக்கும் துறவறம் பூண்டதில்லை.
ஆக, இன்றைய இலங்கை என்ற தோட்டத்தில் உள்ள மரங்களில், சில கிளைகள் வெட்டப்பட்டு, அப்படி வெட்டப்பட்ட கிளைகளைக் கொண்டு, கோடாரிகள் உருவாக்கப்படுகிறது. அந்த கோடாரிகள், மேலும் பல மரங்களை வெட்டப் பயன்படுகின்றன. கொழும்பில் வாழும் இளையதலைமுறையினர்களை, அரசாங்கம் இராணுவத்தில் சேர்த்து, கோடாரிகளாக மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். மேலும், சில கிளைகள் வெட்டப்பட்டு, மரம் மொட்டையாகி விடுகிறது. அப்படி மொட்டையாக்கப்பட்ட மரங்கள், அந்த இளம் துறவிகளுக்கு சமம். யாழ்ப்பாணத்தில், எந்தவித பாதிப்பும் இல்லாமல், கிளைகள் வெட்டப்படாமல், இஷ்டத்துக்கு வளர்ந்து வருகிறது, இயற்கையாக.
கோடாரிகளும், மொட்டை அடிக்கப்பட்ட மரங்களும், பூ பூத்து, காயாகி, கனியாவதில்லை. கனியாக விட்டால், விதை உருவாவதில்லை. விதை இல்லாமல் போகும்போது, தோட்டமே அழியும் நிலை ஏற்படும். இயற்கையோடு இணைந்து வளரும் செடிகள், மரமாகி, மொட்டு விட்டு, பூ பூத்து, காயாகி, கனியாகி, விதையாகி, மேலும் விருத்தியடையும்.
யாழ்ப்பாணத்தில், கலாசாரம் கெட்டுப் போயிடுச்சாம்; கெட்டுத்தான் போகட்டுமே; கலாசாரம் கெட்டுப் போன படங்களை எங்களுக்கும் கொஞ்சம் காட்டுங்க. யாழ்ப்பாணம் என்றாலே, இரத்தமும், சதையும் என்று படங்களை பார்த்த நினைவலைகளில் இருந்து, நாங்களும் கொஞ்சம் மீண்டுவர உதவும். கன்னிப் பெண்கள், காளைகளோடு இணைந்து காதல் மொழி பேசட்டும்; கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்து, காதல் இன்பம் அநுபவிக்கட்டும்; தாலியைக் கட்டிக் கொண்டு. ஒருத்தனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருத்தன்; சிறந்த கலாசாரம், மனித குலத்துக்கு. கன்னியர்கள், மகவுகளை ஈன்று புறந்தள்ளட்டும். காளையர்கள், தம் மக்களை சான்றோனாக உருவாக்கட்டும். அவ்வளவுதான் விசயம். அதுதான் அரசியல் தீர்வு. அரசியல் தீர்வு மிக எளிதானது; இயற்கையானது. பதினைந்து வருடங்கள் கழித்துப் பார்த்தால், ஓட்டு எண்ணிக்கை உயர்ந்து நிற்கும்.
மக்களை, மைனாரிட்டி, மெஜாரிட்டி என்று பிளவுபடுத்திப் பேசுவது, மடமையாகும். தலைவர்களாக இருப்பவர்களே, அப்படி பேசுகிறார்கள். மைனாரிட்டி, மெஜாரிட்டி எல்லாம் எண்ணிக்கை அடிப்படையாகக் கொண்டது. எண்ணிக்கை என்றாலே, சில சமயம் கூடும்; சில சமயம் குறையும். முன்பொரு காலத்தில், இந்த பூவுலகில், டைனாசார்கள் மெஜாரிட்டியாக இருந்தன; இன்றைக்கு டைனாசார்களின் நிலைமை என்ன. ஆக, மக்களை மக்களாகப் பாருங்க; அனைவருக்கும் சம உரிமை வழங்குங்க; வாழ்க்கையை வாழுங்களேன்;
பழங்கால நீதிக்கதைகள். காடுகளில் காட்டெருமைகள் கூட்டமாக இருக்கும். சிங்கங்கள், ஒரே இடத்தில் கூடியிருக்கும் காட்டெருமைகளை அடித்து தாக்க இயலாது. இதே காட்டெருமைகள் அங்கங்கு சிதறி இருக்கும்போது, சிங்கம் எளிதாக தாக்குதலை நடத்தியிருக்கும். ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தால், தாக்குதலை எளிதாக எதிர்கொள்ளலாம்; தாக்குதலின் பாதிப்பு குறைவாக அமையும் என்ற உண்மையை எடுத்துச் சொல்ல, இந்த நீதிக்கதைகளை பெரியவர்கள் சொல்லுவது வழக்கம்.
இந்திய சுதந்திர போராட்ட காலங்களில், அஹிம்சை வழியில் போராட்டம் நடக்கும். அப்பொழுது, போலிஸ்காரர்கள் கையில் தடியை வைத்துக் கொண்டு கூட்டத்தினரை அடிப்பார்கள். கூடி இருந்தவர்கள் சிதறி, தனித்தனியாக நின்று கொண்டு இருந்தால், அடி பலமாக விழும்; காந்தியின் கட்டளைப்படி, அடியை வாங்கிக் கொள்ளவேண்டுமே தவிர, ஓடவோ, திருப்பி அடிக்கவோ கூடாது. ஆதலால், போராடியவர்கள் அனைவரும், ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து, இறுக்கி அனைத்துக் கொண்டு, ஒன்று சேர்ந்து இருக்கும்போது, போலிஸ்காரனால், அவ்வளவு எளிதாக அடிக்க முடியாது. மக்களின் மீது விழும் அடியும் வலிமையிழந்து இருக்கும்.
மக்கள் அனைவரும், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, ஊர்களையும் காலி செய்துவிட்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த கடற்கரை மணலில் தஞ்சம் அடைந்திருந்தார்களே - அதைத்தவிர சிறந்த வழி, வேறு எதுவும் இல்லை; இவ்வளவு சிறப்பான முடிவை எடுத்த நிகழ்வுகள், வரலாற்றில் இல்லை; அது மாபெரும் சிறப்பான முடிவு; பிரபாகரன், அந்த முடிவை எப்படி எடுத்தார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. அதைத்தவிர, வேறு எந்த முடிவினை எடுத்திருந்தாலும், விளைவுகள் மிகமிக மோசமாக இருந்திருக்கும். பொதுவாக, மக்கள் தங்ளது வீடுதான் பாதுகாப்பானது; வெளியே எங்கும் போகாமல், வீட்டின் உள்ளேயே தங்கி இருப்போம்; வேண்டுமானல், கொல்லைப்புறத்தில், பதுங்கு குழியைத் தோண்டி, அதனுள் புதைந்து கிடக்கலாம் என்றுதான் எண்ணி இருப்பார்கள். நல்லவேளை, மக்கள் அவ்விதம் செய்யவில்லை. பிரபாகரனின் முடிவை ஏற்று, மக்கள் அனைவரும் வீடு வாசல்களை விட்டுவிட்டு, அவருடன் சென்றது மிகவும் சரியான நிகழ்வு; அப்படிமட்டும் செல்லாமல் வீடுகளில் தங்கியிருந்தால், ஒவ்வொரு ஊராக மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். ராஜபக்சேக்கள், இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை அடைந்திருந்திருப்பார்கள். தற்பொழுது, இத்தனை பெரிய யுத்தம் நடந்து முடிந்தாலும், இரு தரப்பிலும் பல ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தாலும், அவர்களது எண்ணம் நிறைவேறவில்லை. அவர்களுக்கு, முன்பைவிட தலைவலி அதிகரித்து இருக்கின்றது.
தற்பொழுது அரங்கேறிய காட்சிகளின் மூலம், பிரபாகரன் எடுத்த முடிவு எத்தனை சிறப்பானது என்ற உண்மையை அறிய முடியும். பிரபாகரனின் வழியை சரத் பொன்சேகா பின்பற்றியதால், அவர் உயிர்தப்பினார். சரத் பொன்சேகா, அவரது ஆட்கள் எல்லாம் அவரவர் வீடுகளில் தங்கி, தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருந்தால், சிங்கம், தனியாக இருக்கும் காட்டெருமைகளை, தனித்தனியாக காலி செய்திருக்கும். செய்தித்தாளில், தோல்வி முடிவினால், சரத் பொன்சேகா, நாட்டைவிட்டு, யாருக்கும் தெரியாமல் ஓடி விட்டார் என்ற செய்தி வந்திருக்கும்; மேலும் அவரது ஆட்கள் தலைமறைவு என்ற செய்தியும் வெளிவந்திருக்கும். உண்மையில், ஒவ்வொரு காட்டெருமையாக அடித்து காலிசெய்துவிட்டு, சிங்கம் உண்ட களைப்பில் ஓய்வெடுத்திருக்கும். சரத் பொன்சேகாவும், அவரது ஆட்களும், இன்னேரம், கல்லறையில் துயில் கொண்டு இருந்திருப்பார்கள். நல்லவேளை, சரத் பொன்சேகா, அவரது ஆட்களோடு அந்த ஹோட்டலில் தஞ்சம் அடைந்தார். வீட்டில் மட்டும் தனியாக இருந்திருந்தால், இன்னேரம் இராணுவ மரியாதையுடன் கல்லறை கட்டியிருந்திருப்பார்கள். விமான தளத்திலிருந்து, ஒரு விமானம் வெளிநாட்டுக்கு பறந்து சென்றுவிட்டது என்று செய்தியை ஜோடித்து வெளியிட்டுயிருப்பார்கள்.
இன்றைய இலங்கை.
மஹிந்தா ராஜபக்சே, இலங்கை குடியரசின் தலைவராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கையை வளம்மிக்க நாடாக உலக அரங்கில் உயர்த்தி, இலங்கை மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தி, அனைத்து இன்பங்களும் பெற்று, மக்கள் ஆனந்தமாக வாழ வழி செய்து கொடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பினை ஏற்றுள்ளார், மஹிந்தா ராஜபக்சே. இலங்கை குடியரசு தலைவரின் எண்ணங்கள் ஈடேற, அவருக்கு ஆதரவாக இருக்கும் விசயங்களையும், எதிராக இருக்கும் விசயங்களையும், இங்கே எடுத்துரைப்போம்.
குடியரசு தலைவரின், தலையாய கடமை, உலக அரங்கில், இலங்கையில், மக்களாட்சி செழித்தோங்குகிறது என்று உறுதிபடச்செய்வது. மஹிந்தாவால், பிரபாகரன் பெயரைச் சொல்லி, தொடர்ந்து பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க இயலாது. பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற புலம்பலை, இனி தொடர இயலாது; உலகத்தினர், யாரும் நம்பபோவதில்லை. இலங்கை, பரிபூரண சுதந்திர நாடு என்று உலக மக்கள் நம்ப வேண்டுமானல், தொடர்ந்து, மாதம்தோறும் அவசர சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும்; பத்திரிக்கைகளுக்கு முழுச்சுதந்திரம் வழங்க வேண்டும். மக்களாட்சியின் அனைத்து துறைகளும் முழுச்சுதந்திரத்துடன் செயலாற்ற வேண்டும். நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
தற்போதுள்ள நிலையில், ஓட்டுச் சீட்டுக்கள் எரிக்கப்பட்டு இருக்கின்றது. தேர்தல் ஆணையர், சவால் விடவில்லை; யோசனை சொல்கிறார்; நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள் என்று தேர்தல் ஆணையர், தலைவர்களுக்கு யோசனை சொல்கிறார். அதைத்தவிர, தேர்தலின் முடிவு எப்பொழுது நடைமுறைப்படுத்துவது என்று கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்கிறார், மஹிந்தா; நீதிமன்றமும், நவம்பரில் நடைமுறைப்படுத்தலாம் என்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. ஜனநாயகம் எந்த அளவுக்கு கேலிக்கூத்தாக்கப்படுகிறது. அரசியலமைப்பு தெளிவாகச் சொல்ல வேண்டும். குடியரசு தலைவரின் தேர்தலை எப்ப நடத்துவது; தேர்தலின் முடிவின்படி, பொறுப்பை ஏற்பது எப்பொழுது; குடியரசு தலைவரின் ஆட்சி காலம் எத்தனை ஆண்டுகள்; குடியரசு தலைவர், மரணமடைய நேரிட்டால், மாற்று வழி என்ன. இந்த கேள்விகள் அனைத்தையும் எழுப்பப்பட வேண்டும்; மக்களவையில், மக்களின் பிரதிநிதிகள் விவாதம் செய்து, நல்லதோர் விடையைக் காணவேண்டும்.
அமெரிக்காவின் முன்னோர்கள், சான்றோர்கள், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கூடிப்பேசி, விவாதித்து, மக்களாட்சிக்கு ஏற்ற, மிகச்சிறந்த அரசியலமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். அவர்களது அரசியலமைப்பின்படி, மக்கள் பிரதிநிதிகளின் அவை, குடியரசு தலைவர், நீதித்துறை, ஆகிய மூன்றும் சம நிலை. மூன்று பிரிவுகளுக்கும், அவர்களது பொறுப்பு; பொறுப்பினை நிறைவேற்ற தேவையான அதிகாரம்; எடுத்த முடிவுக்கு accountable. அமெரிக்காவிலும், குடியரசு தலைவர்தான் உசத்தி என்ற மாயை உருவாகி இருக்கின்றது. உண்மையிலேயே, மூன்று பிரிவுகளும் சமநிலை. அமெரிக்காவில், நினைத்த நேரத்துக்கு, தங்களது இஷ்டப்படி தேர்தல் நடத்த இயலாது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேர்தல். தேர்தல், ஒவ்வொரு லீப் வருடங்களில் வருகிறது. குடியரசு தலைவர் இறக்க நேரிட்டாலும், தேர்தல் கிடையாது. உதவி குடியரசு தலைவர் பொறுப்பேற்கிறார். குடியரசு தலைவர் கென்னடி இறக்கும்போதும், தேர்தல் கிடையாது. ஆக, ஜனநாயகம் என்ற பெயரில், இலங்கையில் நடக்கும் கேலிக்கூத்துக்கள், தலைவர்களின் கோமாளித்தனம், தற்பொழுது உலக அரங்கில் வெட்ட வெளிச்சத்துக்கு வருகிறது.
அமெரிக்காவில் குடியரசு தலைவரின் தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி விட்டால், அவ்வளவுதான்; அதோடு முடிந்தது; அடுத்த நான்காண்டுகள், ஒபாமா தான் அதிபர். அவன் நல்லவனோ, கெட்டவனோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அடுத்த நான்காண்டுகள், அவர் தான் குடியரசு தலைவர். அவர்களது அரசியலமைப்பு, வள்ளுவனின் வாக்குப்படி, எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. ஆனால், இலங்கையில், இந்தியாவில் அப்படி நிலையில்லை. இந்தியாவில், பிரதம மந்திரி, மாநில முதலமைச்சர் அனைவரது பதவி என்றைக்கும் ஆட்டம் காணும் நிலையில் அமைந்துள்ளது. இலங்கையிலும் அதே நிலைதான். இன்றைக்கு, குடியரசு தலைவர் தேர்தலில், மஹிந்தா, மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். இலங்கை பாராளுமன்றம், மஹிந்தாவை என்றைக்கு வேண்டுமானாலும், பதவியிறக்கம் செய்ய முடியும். நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும், மஹிந்தாவை ஆதரிப்பவர்கள் அதிகம்பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில், மஹிந்தா ஜனாதிபதி பதவியை இழக்க நேரிடும். ஆக, இலங்கை ஜனநாயகத்தில் அரங்கேறும் தெளிவற்ற கொள்கைகள் அனைத்தும், உலக அரங்கில் வெளிச்சத்துக்கு அரங்கேறும் நேரம் இது.
இவ்வளவு குழப்பமான சூழ்நிலையில், யாராலும் நிம்மதியாக அரசு நிர்வாகத்தை நேர்மையாக செய்ய முடியாது. ஆனால், மஹிந்தா, உலக அரங்கில், இலங்கை ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்று காட்டவேண்டிய பொறுப்பு; இலங்கையில் உள்ள மற்ற தலைவர்களுக்கு, அந்த பொறுப்பில்லாததால், அவர்கள், மஹிந்தாவுக்கு தலைவலியாக அமைவார்கள். இதைத்தவிர, பொருளாதார முன்னேற்றம் காண வேண்டும். அடிமைகள் வாழும் நாட்டிற்கு, உலக மக்கள் விஜயம் செய்ய மாட்டார்கள்; அதேபோல், அடிமைகள் வாழும் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை, உலக மக்கள் வாங்கவும் மாட்டார்கள். ஆக, தற்போதய சூழ்நிலையில், பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாமல் தவிக்கும் நிலை. மக்களின் எதிர்பார்ப்பு ஏராளம்; மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத சமயத்தில், அவர்கள் அடையும் ஏமாற்றம், புரட்சியாக வெடிக்கும். யுத்தத்தின் மூலம், தன்னை ஒரு சூப்பர்மேனாக காட்டி இருக்கின்றார், மஹிந்தா. மக்களும், மஹிந்தாவால் முடியாதது ஒன்றுமில்லை என்று எதிர்பார்ப்பினை வளர்த்து இருக்கின்றார்கள். மக்கள் ஒருவரை வானுயரத்துக்கு உயர்த்துவதும், பிறகு அவரை குப்பைத் தொட்டியில் போடுவதும், வரலாற்றில் நிறைய நடந்தேறியிருக்கின்றது. பொருளாதார முன்னேற்றம், மஹிந்தாவுக்கு மாபெரும் சவால்.
அதைத்தவிர, இலங்கை மக்களின் இன்றைய ஹீரோக்கள், இராணுவ ஜெனரல்கள். இன்றைய இளையதலைமுறையினர், இன்ஜினியராகவோ, டாக்டராகவோ விரும்புவதில்லை; இன்றைக்கு அனைவருமே, இராணுவத்தில் அதிகாரிகளாகவே ஆசைப்படுகின்றனர். இராணுவ அதிகாரிகளுக்கு, அரசாங்கம் நல்ல சம்பளம், சலுகைகளை வழங்குகிறது; அதைத்தவிர, சமுதாயத்தில், நல்லதோர் மதிப்பு, அந்தஸ்து. இந்தமாதிரி வளரும் இராணுவ வேட்கையை பூர்த்தி செய்ய, அரசாங்கம் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த இராணுவ சுழலில், அமெரிக்கா மாட்டிக் கொண்டது; அமெரிக்க மக்களில் பெரும்பாலோனோர், ஒருவித excitement க்காக இராணுவத்தில் ஈடுபடுகிறார்கள். இன்றைய இலங்கை, அந்தமாதிரி ஒரு சூழலில் மாட்டிக் கொண்டது. இலங்கை, அதனது இராணுவத்தை தொடர்ந்து பாதுகாக்க, யுத்தங்களில் பங்கேற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. யுத்தங்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்போது, இராணுவம் துருப்பிடித்துப் போய்விடும். இராணுவம் என்பது ஒரு பெரிய யானை அல்லது டயனோசரை வைத்து பாதுகாப்பது போன்றது; செலவு எக்கச்சக்கம் ஆகும்; பலன் மிகக்குறைவாக இருக்கும். இராணுவம், பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்க முடியாது. பொருளாதார வீழ்ச்சிக்கு, இராணுவம் மிக முக்கிய காரணமாக இருக்கும்.
அதைத்தவிர, மத குருக்கள். மத குருக்கள், கோவில்கள் என்ற எல்லையைத்தாண்டி, அரசு நிர்வாகம், அரசியல், சமூகம் என்று அனைத்து துறைகளிலும் ஆக்கிரமித்து உள்ளார்கள். துறவிகளுக்கு கிடைக்கும் மதிப்பு, அந்தஸ்தைப் பார்க்கும், இளைய தலைமுறையினர், துறவறத்தில், ஆர்வத்துடன் ஈடுபட முன்வருவார்கள். துறவிகள், பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்வதில்லை; ஆனால், துறவிகள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்ற முடியாது. ஆக, இலங்கையில், இராணுவம், துறவறம் என்று இரண்டு மாபெரும் சக்திகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உருவாகி வருகின்றன.
மஹிந்தா ரஷ்யா சென்று கடனுதவி பெற்று இருக்கின்றார். ரஷ்யா வழங்கும் கடனுதவி, இரயில் பெட்டிகள், பஸ்கள் வாங்குவதற்காக அளிக்கப்படும் உதவி அல்ல; இராணுவ தளவாடங்கள், துப்பாக்கிகள் வாங்குவதற்கு. இலங்கை, இராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. இராணுவத்துக்கு வாங்கும் கடனுதவியை திருப்பிக் கொடுக்க முடியாமல், கடனுதவி அளித்த நாடுகளுக்கு நாடு அடிமையாக வேண்டிய நிர்பந்தம். உண்மையிலேயே, மஹிந்தாவின் தலைமையில், மக்களாட்சி நடக்கவில்லை இலங்கையில். இன்று நடப்பது, கோதபயவின் தலைமையில் இராணுவ ஆட்சிதான்.
இராணுவ புரட்சி, இராணுவ ஆட்சி, இலங்கைக்கு புதிதல்ல. கிட்டத்தட்ட முப்பதாண்டுகள், பிரபாகரன் நடத்தியது, இராணுவ புரட்சியும், இராணுவ ஆட்சியும் தான். இன்று, சரத் பொன்சேகா, மாபெரும் மக்கள் சக்தியாகவும், அரசாங்கத்துக்கு மாபெரும் சவாலாகவும் உருவாகி வருகிறார். சரத் பொன்சேகாவை சமாளிக்க, இராணுவத்தை வலுப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். இராணுவத்தில் ஈடுபடுபவர்கள், இயற்கையிலேயே இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மீது மதிப்பும், மரியாதையும் கொள்வார்கள். சரத் பொன்சேகாவும், ஜனநாயக தேர்தலில் ஈடுபட்டார்; அரசியல்வாதிகளுடனும் பழகிப்பார்த்தார்; இறுதியில், இன்றைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஏற்றது ஜனநாயகம் அல்ல என்ற முடிவுக்கு வருவார். இராணுவ புரட்சி; அதனைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சியும் இலங்கையில் வெகு விரைவில் ஏற்படும். சரத் பொன்சேகாவுக்கு, மக்களின் முழுஆதரவு கிடைக்கும். உலக நாடுகளின் ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கும் கிடைக்கும். உலகமே, ஒரு மாபெரும் மாற்றத்தை எதிர்பார்க்கிறது, இலங்கையில். ஆக, இத்தனை சவால்களை சமாளித்து, பொருளாதார முன்னேற்றம் அடைவதென்பது, மஹிந்தா ராஜபக்சேவினால் முடியவே முடியாத காரியம்.
இத்துடன், கட்டுரை பூரணத்துவம் அடைகிறது.
இராணுவ
புரட்சியில்,
மக்கள்
அனைவரும்,
சம
அடிமைகள் என்ற
நிலையை அடைவர்;
அதனைத்
தொடர்ந்துவரும்,
மக்கள்
புரட்சியில்,
மக்கள்
அனைவரும்,
சம
உரிமைகளைப்
பெற்று,
உண்மையான
மக்களாட்சி
மலரும்,
இலங்கையில்.